மணீஷ் சிசோடியா கைது: ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்…போலீஸ் தடியடி!
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (பிப்ரவரி 27 ) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிவித்தது.
இந்த கொள்கையின் அடிப்படையில் 800 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது.
இந்த புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது.
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மேலும், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
அதோடு 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலைகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.இதில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சியுமான கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
அவர்களுக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடந்த 23 ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் மணீஷ் சிசோடியா நேற்று விசாரணைக்கு ஆஜரான போது அவரை சிபிஐ கைது செய்தது.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர் சண்டிகர், போபால், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லியின் சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்து வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆதார் ஏற்க மறுப்பு : தேர்தல் அலுவலர் பேட்டி!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு