வைஃபை ஆன் செய்ததும் இன்று (மார்ச் 2) நடந்த விசிக உயர் நிலைக்குழுக் கூட்டம் பற்றிய போட்டோ, வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியாக தொகுதி பங்கீட்டை முடித்து உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று வருகிறது அக்கட்சியின் தலைமை.
அந்த வகையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டு கையெழுத்து ஆகிவிட்டன. இதன் அடுத்த கட்டமாக ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக் வேட்பாளராக தற்போதைய எம்.பி. நவாஸ் கனியே தொடர்வார் என்று அந்த கட்சியும் அறிவித்து விட்டது.
இதே நேரம் திமுக அணியில் ஒற்றை இடம் என்கிற கோட்டாவில் மதிமுகவை வைத்திருந்தது. ஆனால், மதிமுகவோ ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் என்று கேட்டு அது இப்போது இழுவையில் இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இரண்டு இடங்கள் போட்டியிடுகிற கட்சிகள் வரிசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தலா இரண்டு இடங்களை பெற்றுக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்து போட்டு விட்டனர். இந்த இரண்டு இடங்கள் போட்டியிடும் கட்சிகளின் வரிசையில் அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை அழைத்தது திமுக தலைமை.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனோ, ‘2019-ல் இரண்டு தொகுதிகள் போட்டியிட்டது என்ற அடிப்படையிலேயே இப்போதும் அதே இரண்டு தொகுதிகளை வழங்கக்கூடாது. கூடுதலாக, ஒரு பொதுத்தொகுதி சேர்த்து மூன்று தொகுதிகள் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து வருகிறார்.
அதற்கு திமுக பிடிகொடுக்காத நிலையில்… மார்ச் 2 பகல் 12 மணிக்கு திமுக தலைமையகமான அறிவாலயத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அழைக்கப்பட்டது.
ஆனால், குறித்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் யாரும் அங்கு செல்லவில்லை. அதற்கு மாறாக சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தை இன்று காலை கூட்டினார் திருமாவளவன்.
இந்த கூட்டத்தில் முதலில் பேசிய திருமாவளவன், ‘திமுக தரப்பில் இரண்டு தொகுதிகளுக்கு மேல் இல்லை என்கிறார்கள். ஏற்கனவே போட்டியிட்ட அதே அளவில் தான் இப்போதும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். என்ன செய்யலாம்?’ என்று உயர்நிலைக் குழு நிர்வாகிகளிடம் கேட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் ஒரே குரலில்… ‘2019 தேர்தலில் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். பிறகு கட்சியை பலப்படுத்தி இருக்கிறோம். சமீபத்தில் திருச்சியில் முதலமைச்சரே நேரில் கண்டு வியக்கும் வண்ணம், மிகப்பெரிய மாநாடு நடத்தினோம்.
திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்ததாக பாக முகவர்கள் மாநாடு நடத்திய ஒரே கட்சி நமது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். வட மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் அடர்த்தியாக இருக்கிறோம். தென் மாவட்டங்களிலும் பரவலாக இருக்கிறோம். இந்த நிலையில், நமக்கு மீண்டும் இரண்டு தொகுதிகள் தான் என்பது ஏற்புடையதாக இருக்காது. மூன்று தொகுதிகளில் நாம் கண்டிப்பாக நிற்க வேண்டும்’என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்கள்.
மீண்டும் பேசிய திருமாவளவன், ‘அவர்கள் இரண்டு தொகுதிகள் தான் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். முதல்வரிடம் பேச நேரம் கேட்டிருக்கிறேன். நேரடியாக நாம் முதல்வரிடம்தான் இதுகுறித்து பேச வேண்டும். அதற்கு சில நாட்கள் ஆகலாம்’ என்றிருக்கிறார்.
அப்போது உயர்நிலைக் குழுவின் முக்கிய நிர்வாகிகள், ’இரண்டு தொகுதிகள் தான் இறுதியானது உறுதியானது என்றால், நாம் அந்த இரண்டையும் தனித் தொகுதிகளாகவே கேட்டு பெற வேண்டும். இரண்டு தனித் தொகுதிகளை இப்போது பெற்றிருக்கிற நாம்… ஒன்று தனித் தொகுதி ஒன்று பொதுத் தொகுதி என்று கேட்டு வாங்கினால்… நாம் பட்டியலின பிரதிநிதி ஒருவரை வேண்டுமென்றே இழப்பதாக நம் மீது விமர்சனம் வரும். அது கட்சியின் அடிப்படைக்கும் எதிராக சென்று விடும்.
எனவே, மூன்று தொகுதிகள் கொடுத்தால் இரண்டு தனி தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என்பது சரியாக இருக்கும். ஆனால் இரண்டு தொகுதிகள் தான் என்றால் அந்த இரண்டும் தனித் தொகுதிகளாக இருப்பதே இப்போது கட்சிக்கு நல்லது’ என்று உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
திருமாவளவன் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுத்தார். அப்போதே அது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சலசலப்புகளை எழுப்பியது. இப்போது கேட்கும் பொதுத் தொகுதி, ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவே என்ற தகவல்களும் வந்தன.
ஆனால், திருமாவளவனோடு பல ஆண்டுகளாக பயணிக்கும் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனாவுக்கு அளிக்கப்படும் இந்த உடனடி உயர்வுகளை ரசிக்கவில்லை. அதனால் தான் இரண்டு தொகுதிகள் என்றால் அந்த இரண்டும் தனி தொகுதிகளாகவே இருக்க வேண்டும் என்று உயர்நிலைக் குழு கூட்டத்தில் திருமாவளவனிடம் வற்புறுத்தி இருக்கிறார்கள்.
இத்தோடு உயர்நிலைக் குழு கூட்டத்தை முடித்த திருமாவளவன், ‘முதலமைச்சர் ஸ்டாலின் மார்ச் 4 ஆம் தேதி மயிலாடுதுறை பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய பிறகு தேவைப்பட்டால் சந்திப்போம் என்று சொல்லியிருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளம் ஹீரோவுடன் ‘கூட்டணி’ அமைத்த எம். ராஜேஷ்… வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா?
அதிமுக பக்கம் சாயும் கிருஷ்ணசாமி: காரணம் என்ன?