பதவி வந்தவுடன் திமுக அமைச்சர்கள் கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி எம்ஏல்ஏ-வுமான வேல்முருகன் தெரிவித்த கருத்துக்கு விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா இன்று (டிசம்பர் 16) ஆதரவு தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் வேல்முருகன் பேச்சில் சிலவற்றை, அவைத் தலைவர் அப்பாவு அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக கூறினார்.
இதனால் வேல்முருகனுக்கும், அவைத் தலைவர் அப்பாவு – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சலசலப்புகள் ஓய்வதற்குள், கடலூரில் நேற்று (டிசம்பர் 15) செய்தியாளரக்ளை சந்தித்த வேல்முருகன், ஓட்டு கேட்க மட்டும் நாங்கள் தேவைப்படுகிறோம். ஆனால், அமைச்சரான பிறகு நாங்கள் தேவைப்படுவதில்லை என்று திமுக அமைச்சர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய வரும்போது முறையான தகவல் தெரிவிப்பதில்லை. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மானிட்டரிங் ஆபிசர்ஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்வதில்லை.
எந்தவித திட்டமிடலும் இல்லாத துறைக்கு ஏன் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்? எதற்கு அந்த துறை இயங்குகிறது? பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் பிரதிநிதி என்பதால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இவ்வளவு பெரிய பேரிடர் நடந்திருப்பதால், சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரை குறைந்தது 10 நாட்களாவது நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்றிருக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன். சென்னையில் மழை பெய்தால் ரூ.6000 நிவாரணம் அறிவிக்கிறார்கள்.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று கூட கதவை தட்டி ரூ.6,000 கொடுக்கிறார்கள். வட தமிழ்நாடு என்ன பாவம் செய்தது? குடும்ப அட்டைக்கு ரூ.2,000 பிச்சையா போடுகிறீர்களா? அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.
வட தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள் பாதிப்படைந்திருக்கிறது. இதில் மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். முதலமைச்சரின் நிவாரண நிதியில் ஒரு நாளைக்கு ஒரு அறிவிப்பு வருகிறது. மழை வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் என மாறி மாறி நிவாரணம் அறிவிக்கிறார்கள்.
என்ன நடைமுறை என்றே தெரியவில்லை. அதிகாரிகள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்?
தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுக்கு தலைமையில் இருந்து முறையான தகவல் தெரிவிக்கிறீர்கள். இப்போது கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் அமைச்சரானவுடன் எங்களிடம் பேசமாட்டார்கள். அவர்களுடைய தபேதார், அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் தான் பேசுவார்கள்.
ஓட்டுகேட்கும் போது மட்டும் நாங்கள் தேவைப்படுகிறோம். அமைச்சரானவுடன் நாங்கள் தேவைப்படுவதில்லை. பதவி வந்தவுடன் உங்களுக்கு எங்கிருந்து அதிகார போதை வருகிறது. இன்னும் ஒருவருடம் கழித்து மக்களை சந்திக்க நீங்கள் வரவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
வேல்முருகன் கருத்துக்கு ஆதவ் அர்ஜுனா ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, “கண்டிப்பாக வேல்முருகனின் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். இன்னும் கொஞ்ச நாளில் அவரையும் சங்கி என்று சொல்லிவிடுவார்கள்.
இதற்காக தான் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி, எதிர்காலத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கொள்கை தலைவர்கள் அனைவரும் புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அதனால் தான் கட்சியில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்தார்கள். ஆனால், அந்த கொள்கையை என்னுடைய பயணத்தில் பிரச்சாரம் மூலம் உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…