ஆதவ் அர்ஜுனாவுக்கு வேறு ஏதோ செயல்திட்டம் இருப்பதை உணர முடிகிறது என விசிக தலைவர் திருமாவளவன் இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 6ஆம் தேதி ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் திமுக குறித்தும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆதவ்வை கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து விசிக தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார்.
எனினும் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனையும் விமர்சித்து வருகிறார்.
அப்போதே திமுக டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டது!
சமீபத்தில் அவர் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “திருமாவளவனுக்கு அழுத்தங்கள் வந்து ஜனநாயக ரீதியில் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் தான், மேடையில் நான் அவ்வாறு பேசினேன். 24 நிமிடங்கள் பேசியதற்கு எந்தவித பேப்பரும் கிடையாது. மனதில் இருப்பதை பதிவு செய்து விட்டு நான் வந்துவிட்டேன். திமுக பொதுச் செயலாளர் ஆ.ராசா தன்னுடைய கட்சி தலைமை அறிவுறுத்தலின் பேரில் எப்போது பேட்டி கொடுத்தாரோ, அப்போது முதலே என்னை திமுக டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டது.
திருமாவளவன் சந்திக்கும் போது, ‘நீங்கள் விழாவிற்கு சென்றால் கூட்டணிக்கு பிரச்சினை ஆகிவிடும். எனவே செல்ல வேண்டாம் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்துகிறார். அவரது அழுத்தம் என்று சொல்வதை விட, அவருடைய கருத்தை திருமாவளவன் உள்வாங்குகிறார். அதன்பிறகு என்னுடைய கருத்தை உள்வாங்குகிறார்” என்று ஆதவ் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
நான் சுதந்திரமாக எடுத்த முடிவு!
அதற்கு அவர், “அழுத்தம் கொடுத்து யாரும் என்னை இணங்க வைக்க முடியாது. விஜய் கட்சி மாநாடு முடிந்த ஒரு சில நாட்களில் நூல் வெளியீட்டு விழாவில் என்னால் பங்கேற்க முடியாது என்று கூறிவிட்டேன். அது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. முதல்வர் ஸ்டாலினை அடிக்கடி சந்திக்க முடியாது. அதனால் அக்கட்சியின் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேசுவேன். அப்படிதான் எ.வ.வேலுவை சந்தித்தேன். இதனை நான் ஆதவ் ஆர்ஜுனாவிடம் தெரிவித்திருந்த நிலையில், அவர் தவறாக புரிந்து கொண்டுள்ளார் என நினைக்கிறேன்.
ஆதவ் அர்ஜுனா சொல்வது தவறு!
இடைநீக்கம் செய்யப்பட்ட சூழலில் தொடர்ந்து முரண்பட்ட கருத்துகளை ஆதவ் அர்ஜூனா சொல்வது தவறு. அவர் மீண்டும் கட்சிக்குள் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்திருந்தால் அவர் 6 மாதத்திற்கு அமைதியாக இருந்திருப்பார். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் முரண்பட்ட கருத்துகளை சொல்வது என்பது அவருக்கு வேறு ஏதோ செயல்திட்டம் இருப்பதை உணர முடிகிறது” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறிய 16 தீர்மானங்கள் : முழு விவரம்!