விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் ஆர்ஜூனை நியமித்து அக்கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று (பிப்ரவரி 15) அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை அசோக்நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர்கள் துரை ரவிக்குமார், ம.சிந்தனைச் செல்வன், துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, அமைப்புச் செயலாளர் பன்னீர்தாஸ், ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதவ் அர்ஜுனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கட்சியில் பல ஆண்டுகளாக பலர் பணியாற்றி வரும் நிலையில் கடந்த மாதம் விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனுக்கு இந்த உயர் பொறுப்பு வழங்கப்பட்டது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த மாதம் 26ஆம் தேதி திருச்சியில் விசிக சார்பில் ’வெல்லும் சனநாயகம்’ மாநாடு மிக பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டது. மிகப்பெரிய கட்சிகளே வியக்கும் வண்ணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டினை ஒருங்கிணைத்தவர் தான் ’வாய்ஸ் ஆஃப் காமென்’ நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜூன். அந்த மாநாட்டில் தான் விசிக தலைவர் தொல் திருமாவளவன் முன்னிலையில் அவர் கட்சியிலும் இணைந்தார்.
மேலும் தான் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக விசிகவின் விருது வழங்கும் விழா, விசிக சமீபத்தில் பிரமாண்டமாக நடத்திய பூத் ஏஜென்ட் கூட்டம் உள்ளிட்டவற்றை ஆதவ் அர்ஜூனின் நிறுவனம் தான் திட்டமிட்டு ஒருங்கிணைத்து வருகிறது. கட்சிக்கு தேவையான பொருளாதார உதவியும் அவர் வழங்கி வருகிறாராம்.
இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனை விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக கேட்டு வரும் பொதுத்தொகுதியில் ஆதவ் அர்ஜுனை வேட்பாளராக களமிறக்கவும் திருமாவளவன் திட்டமிட்டு வருகிறார்” என்கின்றனர் அக்கட்சியினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எலெக்சன் ஃப்ளாஷ்: காங்கிரசுக்கு எதுக்கு 9 சீட்டு? ஸ்டாலின் போடும் கணக்கு!
மாவட்ட செயலாளர்கள் மீதான புகார்கள்: இளைஞரணி நிர்வாகிகளிடம் கேட்கும் உதயநிதி