மது வாங்க ஆதார்… திமுகவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியாவா?: கமல் கட்சி கேள்வி!

Published On:

| By Kavi

“மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லும் அரசு டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஏன் ஆதாரை கட்டாயமாக்கவில்லை” என்று மநீம கட்சி மாநிலச் செயலாளர் பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆதாரை இணைப்பதினால்‌ மின்‌ நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும்‌ இலவச மின்சாரம்‌ மற்றும்‌ மானியத்தில்‌ எவ்வித பாதிப்புக்களும்‌ ஏற்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

வாக்காளர் அட்டையில் ஆதார் இணைக்க எதிர்ப்பு
இந்நிலையில், ஆதாரை இணைப்பது தொடர்பாக அரசுக்கு கேள்வி எழுப்பி மநீம கட்சி மாநில செயலாளர் பொன்னுசாமி இன்று (நவம்பர் 27) வெளியிட்ட அறிக்கையில்,

“ஜனநாயகத்தின் அடையாளமாக நடைபெறும் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கள்ள ஓட்டு கலாச்சாரத்தையும், சமூக விரோதிகளின் செயல்பாடுகளையும் தடுக்க வேண்டுமானால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் முன் வைத்து பல்வேறு நுகர்வோர் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்ற நிலையில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒருசில கட்சிகள் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “தேர்தல் முறைகேடுகளை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை அவசர, அவசரமாக இணைக்கச் சொல்வதின் மூலம் தங்களின் சுயநல அரசியலை, மக்கள் விரோத ஆட்சியின் வெளிப்பாடாக வெளிப்படுத்தி உள்ளது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.


ஆலோசனையை புறக்கணித்தாரா அமைச்சர்

மேலும் எந்த ஒரு திட்டத்தையும் அமுல்படுத்தும் முன் அந்த திட்டத்தினால் மக்கள் இன்னலுக்கு ஆளாகாமல் எளிதாக அமுல்படுத்தக் கூடிய வகையில் திட்டமிடுதல் அவசியம் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசுக்கு ஆலோசனை கூற தவறி விட்டனரா..?

இல்லை அதிகாரிகளின் ஆலோசனையைத் தமிழக அரசும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் புறக்கணித்தார்களா..?

அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடுதோறும் மின் அளவை கணக்கீடு செய்ய மின்வாரிய பணியாளர்கள் வரும் போதே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதாக இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் போது அதுபற்றி அரசுக்கு அதிகாரிகள் எடுத்துக் கூறினார்களா..?

அல்லது இந்த ஆலோசனையை அரசு திட்டமிட்டு புறக்கணித்ததா..? என தெரியவில்லை.

திமுகவுக்கு செலக்ட்டிவ் அம்னீசியா

அரசின் நலத்திட்டங்கள் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப் போகாமல் உரிய பயனாளிகளுக்கு மட்டும் கிடைப்பதை உறுதி செய்ய அந்தந்த நலத்திட்டங்களில் சம்பந்தப்பட்ட பயனாளிகளின் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு பல்வேறு காலகட்டங்களில் கட்டாயப்படுத்திய போது திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயம் அதற்கு கடும் எதிர்வினையாற்றியது.

அதுவே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும் எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்தவற்றை செலக்ட்டிவ் அம்னீசியா வந்தது போல் எளிதாக மறந்து விட்டு தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க சொல்வது ஆடு நனைவதாக கூறி ஓநாய் அழுத கதை போல உள்ளது.

மதுபான விற்பனைக்கு இணைக்கலாமே?
தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை அவசர, அவசரமாக இணைக்கச் சொல்லும் தமிழக (திமுக) அரசு உயிரைக் குடிக்கும் மதுபானங்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், 18வயது நிரம்பாத இளம் சிறார்களுக்கு டாஸ்மாக் கடைகளில் தாராளமாக விற்கப்படுவதைத் தடுக்கவும்,

இளம் வயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தங்களின் எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிக் கொள்ளும் இளம் தலைமுறையைக் காப்பாற்றவும் டாஸ்மாக் கடைகளில் ஆதார் எண் மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும், ஆதார் எண் இல்லாமல் மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது என ஏன் இதுவரை உத்தரவிடவில்லை..?

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவசரம் காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபானங்கள் விற்பனை செய்வதில் ஆதார் எண்ணை இணைக்க ஏன் அவசரம் காட்டவில்லை என்பது மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரானவருக்கும், தமிழக முதல்வருக்கும் மட்டுமே தெரிந்த பரம ரகசியம் போலும்.

அரசுக்கும், ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் அள்ள, அள்ளக் குறையாத வருமானத்தை அள்ளித் தரும் அட்சயப்பாத்திரமாகத் திகழும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க ஆதார் எண் கண்டிப்பாக அவசியம் என உத்தரவிடாமல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்வது மக்கள் நலனுக்கு எதிரானது என்பதையும், எது அவசியம்..?, எது அவசியம் இல்லாதது என்பதையும் தமிழக அரசு இனிமேலாவது கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்,

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி உத்தரவிட்ட தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டு இளம் வயதிலேயே தடம் மாறி செல்லும் அடுத்த தலைமுறையைக் காத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

“இதுவே இறுதி” : திரிஷ்யம் 3 பற்றி ஜீத்து ஜோசப்

உதயநிதி எப்படி? சிவாஜி ஸ்டைலில் ஸ்டாலின் : ஜெயக்குமார் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share