வரும் 2026 தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணியின் வெற்றி உறுதி என இன்று (டிசம்பர் 22) நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அம்பேத்கர் குறித்து விமர்சித்த அமித் ஷா மற்றும் டங்க்ஸ்டன் விவகாரத்தில் அதிமுகவுக்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஜனநாயகமே இல்லை!
அதன்பின்னர் தலைமை செயற்குழு நிர்வாகிகள் பேசினர். திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி பேசுகையில், “கூட்டணியை எப்படி கட்டமைக்க வேண்டும், அக்கூட்டணியை எப்படி நடத்த வேண்டும் என்பதை ஸ்டாலினை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என டெல்லியில் தலைவர்கள் சொல்கிறார்கள்.
அம்பேத்கர் அவமதிக்கப்பட்ட போது முதலில் கொந்தளித்த மாநிலம் தமிழ்நாடு. டங்க்ஸ்டன் மட்டுமில்ல, குடியுரிமை திருத்தச் சட்டம் உட்பட பாஜக என்ன மசோதா கொண்டு வந்தாலும் அதிமுக ஆதரிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகமே இல்லை. இச்சூழலில் அகில இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த திமுகதான் இருக்கிறது” என்று திருச்சி சிவா பேசினார்.
மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது!
அதே போன்று துணை முதலமைச்சரும், இளைஞரணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. முதலமைச்சர் மக்கள் மத்தியில் சக்தி வாய்ந்தவராகவும், அவர்களை ஈர்க்கக்கூடிய தலைவராகவும் உள்ளார்.
திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நம்மை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு அணியும் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
2024 தேர்தலில் 221 தொகுதிகளில் நாம் முதலிடம். நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது.
வரும் 2026 இல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமில்லை; இந்தியாவுக்கான வெற்றி. இந்த தேர்தலில் 200 இல்லை, 200க்கும் மேல் வெற்றி பெறுவோம்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நீதிமன்றத்தில் இளைஞர் வெட்டிக் கொலை : டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு!
திமுக செயற்குழு கூட்டத்தில் அமித் ஷா, அதிமுகவுக்கு எதிராக தீர்மானம்!