குஜராத் தேர்தல் : மோடி – ராகுல் – கெஜ்ரிவால்…மக்கள் செல்வாக்கு யாருக்கு? அதிரடி சர்வே முடிவு!

அரசியல்

குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவும், டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால் நூற்றாண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்து வரும் நிலையில், இந்த முறை அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் இடத்தை ஆம் ஆத்மி பிடித்துள்ளதால் பா.ஜ.க.வை மிரட்டும் பலமான எதிரியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்துள்ளது.

குஜராத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கட்சிக்கு தேவை உள்ளதா? தேர்தலில் வெல்லப்போவது யார் என கடந்த அக்டோபர் மாதம் லோக்னிதி சிஎஸ்டிஎஸ் மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

குஜராத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கட்சி தேவை என்பதற்கு ஆதரவாக 61 சதவீதம் பேரும், எதிராக 24 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த 61 சதவீதம் பேரும் பா.ஜ.க-விற்கு வாக்களித்த 54 சதவீதம் பேரும் 3-வதாக ஒரு கட்சி வேண்டும் என கருத்து தெரிவித்திருப்பது ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் மட்டும் அல்லாமல் 50 சதவீதத்துக்கும் மேலான பா.ஜ.க. வாக்காளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்பு உள்ளவர்கள் 3-வது கட்சி ஒன்று வேண்டும் என்கிற கருத்தை உறுதியாக முன்வைத்துள்ளனர். செய்தி ஊடகங்களோடு தொடர்புடைய 63 சதவீதம் பேர் 3-வது கட்சிக்கு ஆதரவாகவும், செய்தி ஊடகங்களோடு குறைவான தொடர்புடையவர்களில் 56 சதவீதம் பேர் 3-வது கட்சிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களால் கவரப்பட்ட மக்களும் கூட 3-வது புதிய கட்சி தேவை என கருத்து தெரிவித்துள்ளனர்.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தாக்கம் என்னவாக இருக்கும் என்கிற கேள்விக்கு, நிறைய இடங்களை வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாக 34 சதவீதம் பேரும், பா.ஜ.க. மற்றும் காங்கிரசை தான் பாதிக்கும் பெரிய அளவில் வெற்றி கிடைக்காது என 31 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது மட்டும் அல்லாமல் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள் என்பதை கண்டறிய நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பும் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை கொண்டுள்ளது.

2017-ம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 41.4 சதவீத வாக்குகளையும், பா.ஜ.க. 49.1 சதவீத வாக்குகளையும் ஆம் ஆத்மி கட்சி 0.00 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றிருந்தது.

ஆனால் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க 47 சதவீதம் பேரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க 21 சதவீதம் பேரும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க 22 சதவீதம் பேரும் தயாராக இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் வாக்காளர்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஆம் ஆத்மி பக்கம் திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அதே கட்சிக்கு தற்போதும் வாக்களிப்பீர்களா என்கிற கேள்வியும் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டவர்களிடம் முன் வைக்கப்பட்டது.

இதில் காங்கிரசுக்கு ஆதரவாக 73 சதவீதம் பேரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 70 சதவீதம் பேரும், ஆம் ஆத்மிக்கு ஆதரவாக 67 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளதா என்கிற கேள்விக்கு, 23 சதவீத காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி குஜராத்தில் வலிமையாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

லோக் நிதி சிஎஸ்டிஎஸ் அமைப்பு நடத்தியுள்ள இந்த கருத்துக்கணிப்பின் மூலம் குஜராத்தில் 3-வது கட்சியை மக்கள் விரும்புவதை தெளிவாகக் காட்டுகிறது. இதன் மூலம் 2022-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக இருக்கப் போகிறது என்பது உறுதியாகியுள்ளது.

அப்துல் ராஃபிக்

இன்றைய ரிலீஸ் : 5 காதல் படங்கள்!

ஆவின் பால் விலை எவ்வளவு உயர்ந்தது?

+1
0
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *