திமுக கூட்டணியை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கொண்டு செல்கிறார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (செப்டம்பர் 10) தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சு தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. விசிக அதிமுகவில் இணைகிறதா? என்றளவுக்கு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதுதொடர்பாக இன்று (செப்டம்பர் 10) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பியபோது, “விசிக அழைத்து அவர்கள் போனால் நல்லதுதானே. இந்த மாநாடு நடத்துவதில் தப்பில்லை.
மதுவிலக்கில் அரசே கூட விழிப்புணர்வு செய்துகொண்டுதானே இருக்கிறது. 2017 முரசொலி பவள விழாவில் தான் இந்த கூட்டணி உருவானது.
இப்போது வரை இந்த கூட்டணியில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் அதை முதல்வர் ஸ்டாலின் ஒருங்கிணைத்து கொண்டு செல்கிறார்.
இன்னும் பல தேர்தல்களை இந்த கூட்டணி சந்திக்கும்” என்று கூறினார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “விசிக சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம். அதை குற்றம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.
ஆனால் கூட்டணி என்பது திமுகவோடு தான். முதலமைச்சரை என்றும் விரும்புகிற நண்பர்தான் திருமாவளவன். ஆகவே யார் அழைத்தாலும் முதல்வரை விட்டு திருமாவளவன் எங்கேயும் போக மாட்டார்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக திருமாவளவன் கூறுகையில், “மது ஒழிப்புக்கு எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இதுதான் எனது அறைகூவல். மாநாட்டில் யார் யார் பங்கேற்பார்கள் என்று இன்னும் முடிவெடுக்கவில்லை.
அனைத்து தரப்பினரும் அனைத்து கட்சிகளும் மது ஒழிப்புக்கு குரல் கொடுக்கவேண்டும். அரசியல் கட்சிகளை அழைப்பது குறித்தும் கலந்தாலோசித்துதான் முடிவெடுப்போம். ஆனால் கட்சி சார்பற்ற சக்திகள், இதில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.
அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்களா இல்லையா என விரைவில் அறிவிப்போம்.
அரசியல் நிலைப்பாடாக இதை பார்க்கத் தேவை இல்லை. தேர்தல் அரசியல், கூட்டணி என்பது முற்றிலும் வேறானது. மக்களின் பிரச்சினைகள், உரிமைகளுக்காக போராடுவது முற்றிலும் வேறானது. அதை நாங்கள் குழப்பிக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்திற்கு எதிரான பாஜக வேட்பாளர் இவர்தான்!
சிறப்புக்குழு ஹேமா அறிக்கையை படிக்கவில்லை… கடுப்பான நீதிபதிகள்… முக்கிய உத்தரவு!