டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் இருந்து ஒரு ஷிண்டே… எடப்பாடிக்கு எதிராக அண்ணாமலையின் அட்டாக்!
வைஃபை ஆன் செய்ததும் இன்பாக்ஸில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேட்டி வீடியோ வந்து விழுந்தது.
அதைப் பார்த்தபடியே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி இன்று (ஏப்ரல் 6) மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் 44வது நிறுவன நாள் விழாவை ஒட்டி தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடி ஏற்றிய அண்ணாமலை அதன்பிறகு நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது அதிமுக பற்றியும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி பற்றியும் சில கடுமையான கருத்துகளை முன் வைத்திருக்கிறார்.
‘அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில்… கமலாலய ஆலோசனைக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி அளித்தார் அண்ணாமலை.
அதாவது டெல்லியில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலே அமித்ஷா பேசினாரோ… அதே தொலைக்காட்சியை அழைத்து இன்று பேட்டி அளித்த அண்ணாமலை,
‘வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் தான் கூட்டணி. மற்ற கட்சிகள் எல்லாம் பிராந்திய கட்சிகள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தலைமை ஏற்றது. ஆனால் மக்களவைத் தேர்தல் எங்களுக்கான தேர்தல். யார் பிரதமர் என்பதை முடிவு செய்யும் தேர்தல். எனவே பாஜக தலைமையில் தான் கூட்டணி’ என்று பேட்டி அளித்தார் அண்ணாமலை.
இந்த பேட்டிக்கு முன்பு நிர்வாகிகளிடம் உரையாடிய போது அண்ணாமலை கூறிய விஷயங்கள் இன்னும் ஹாட். ‘அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று சொல்லும் அந்த கட்சியினர் எதற்காக டெல்லி சென்று அமித்ஷாவையும் நட்டாவையும் சந்திக்க வேண்டும்? எடப்பாடி அடுத்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.
அதிமுக தலைமையிலே கூட்டணி என்றால் அவர்கள் தானே இங்கே வர வேண்டும்? இவர்கள் அங்கே போகிறார்கள் என்றால் பாஜக தலைமையில்தான் கூட்டணி’ என்று சூடாக பேசியிருக்கிறார் அண்ணாமலை.
மேலும் இன்று மாலை கமலாலயத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிமுகவினரை கோபப்படுத்தி இருக்கிறது. பாஜகவில் இருந்து பல நிர்வாகிகள் அதிமுகவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில்… திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிரதிநிதி, ஆரணி பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் சதீஷ் இன்று மாலை அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
கமலாலயத்தில் இது குறித்து விசாரித்த போது, ‘ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறுவது சகஜம் என்று அதிமுகவில் தானே சொன்னார்கள்? அதே போல தான் இப்போதும் அதிமுகவிலிருந்து இங்கே வந்து சேர்ந்துள்ளார்கள். இது ஒரு சாதாரண நிர்வாகியின் இணைப்புதான். இன்னும் சில முக்கியமான அதிமுக நிர்வாகிகள் பாஜகவுக்கு வரப் போகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா உடைந்த போது தமிழ்நாட்டில் திமுகவில் இருந்து ஒரு ஷிண்டே வருவார் என்று அண்ணாமலை கூறினார். ஆனால் இப்போதைய நிலவரப்படி அதிமுகவில் இருந்து தான் ஒரு ஷிண்டே உருவாகப் போகிறார். அது யார் என்பதை விரைவில் பார்க்கத்தான் போகிறீர்கள்’ இன்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள் பாஜகவினர் ” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
உணவு பாதுகாப்பு அலுவலர் நியமனம்: தேர்வாளர்கள் பட்டியல் ரத்து!
“நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் பேச்சு”: ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்!