ஆ.ராசாவுக்கு ஆதரவாக சீமான்

Published On:

| By Jegadeesh

இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆ. ராசா தெரிவித்ததாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆரிய சனாதன கோட்பாடுகளுக்கு எதிராக அண்ணன் ஆ. ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து என்றைக்கும் துணை நிற்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (செப்டம்பர் 18 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனு தர்மத்தின் கொடுங்கோன்மையை எடுத்துரைத்து, சூத்திரர் (வேசி மக்கள்) எனும் இழிவை தமிழர்கள் சுமக்கக் கூடாதெனக் கூறியதால், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ.ராசாவை குறிவைத்து மதவாதிகள் தனிநபர் தாக்குதல் தொடுப்பதும், அவதூறு பரப்புரை செய்வதுமானப் போக்குகளை இனியும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது.

பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரமக் கோட்பாட்டால் விளைந்த சமூக அநீதியை அறச்சீற்றத்தோடு முன்வைத்த ஆ.ராசாவின் கருத்து மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

அக்கருத்துக்குப் பக்கபலமாகத் துணை நிற்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என உயிர்ம சமத்துவம் போதிக்கிறார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை’ என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

‘தன்னை உயர்ந்த சாதியென எண்ணிக்கொண்டு, தனக்கு மேலே உயர்ந்தவர்கள் யாருமில்லையெனக் கருதுபவர்கள், தனக்குக் கீழேயும் தாழ்ந்தவர்கள் யாருமில்லை என எண்ணிவிட்டால், ஒரு சிக்கலுமிராது’ என்கிறார் ஐயா பெரியார்.

மூத்தோர்களும், முன்னோர்களும் உதிர்த்த இத்தகையக் கூற்றுகளின் மூலம் சாதியக்கட்டமைப்பும், வருணாசிரமக்கோட்பாடுகளும் தமிழர்களின் அறநெறிக்கு மட்டுமல்லாது, இறைநெறிக்கும் எதிரானது என்பதை உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.

முற்காலத்திலேயே நாகரீகமடைந்து, நிலங்களைத் திணைகளாகப் பகுத்து, வாழ்வியலை அகவாழ்க்கை, புறவாழ்க்கையெனப் பிரித்து, அவற்றிற்கு தனியொரு இலக்கணம் வகுத்து, அதற்கு அடிப்படையாக அறநெறியை வைத்து, வாழ்வாங்கு வாழ்ந்து வந்த தமிழ்ச்சமூகத்தின் மீது நிகழ்ந்தேறிய ஆரியப்படையெடுப்பினால் மற்ற மொழிவழித் தேசிய இனங்களைப் போலவே, தமிழ்த்தேசிய இனமும் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்கொள்ள நேரிட்டது.

ஆதியில் தாய்வழிச் சமூகமாகக் கட்டமைக்கப்பட்டு, சங்கக் காலத்திலேயே பெண்பாற்புலவர்களைக் கொண்டிருக்கிற அளவுக்கு பெண் கல்வியில் சிறந்து விளங்கி, முற்போக்கோடு திகழ்ந்த தமிழினத்தில் பெண்களுக்குரிய தலைமையும், முதன்மைத்துவமும் ஆரியச் சூழ்ச்சியினால் இடைக்காலத்தில் பறிக்கப்பட்டது. பெண்ணிய உரிமைகள் கேள்விக்குறியாயின.

தாங்கிய வலியின் மொழிதான் அண்ணன் ஆ.ராசா அவர்களது வார்த்தைகளில் வெளிப்பட்டுள்ளது.

இவ்வளவு ஆண்டுகாலமாக இழித்துரைக்கப்பட்டதைத்தான் இன்றைக்கு அவர் எடுத்துரைத்திருக்கிறார்.

அதனை எடுத்துக்கூறியதற்கே, மதவெறியர்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதென்றால், எங்களை சூத்திர மக்களாக்கி இழிமகனெனப் பன்னெடுங்காலமாகப் பேசி வரும்போது எங்களுக்கு எவ்வளவு வலியும், கோபமும் இருந்திருக்கும்?

தமிழர்கள் மீதான சூத்திர (வேசி மக்கள்) பட்டத்தைப் போக்க வேண்டுமெனவே அவர் சாடினாரே ஒழிய, இறை நம்பிக்கையுடைவர்களை தவறாக விமர்சித்துப் பேசவில்லை.

ஒர் மதத்தைத் தாங்கி நிற்பதாலேயே, சூத்திரப்பட்டத்தைச் சுமத்தி, தாசி மக்கள், வேசி மக்கள், இழி மக்களென எங்களைப் பழித்துரைப்பார்களென்றால், அதனை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அண்ணன் ஆ.ராசா அவர்கள் அரசியல் இயக்கத்தாலும், கொள்கை நிலைப்பாட்டாலும் மாறுபட்டாலும், அவர் இம்மண்ணின் மகன்;

தமிழகத்தின் மிக முக்கியமானக் கருத்தாளுமை! மதவாதிகள் அவரை நோக்கி இழிசொற்களை வீசுவதை அனுமதிக்கவோ, அவரை விட்டுக்கொடுக்கவோ முடியாது. அண்ணன் ஆ.ராசாவுக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளுக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்புணர்வையும் பதிவு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

செருப்பு மாலை, புகைப்பட எரிப்பு: ஆ. ராசாவுக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

மகளிர் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel