திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட அணிகளை சேர்த்து தற்போது மொத்தம் 23 அணிகள் உள்ளன.
தொண்டரணி, இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, ஆதி திராவிட நல உரிமை பிரிவு, மீனவர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி,
நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உள்ளிட்ட இந்த 23 அணிகளின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை டிசம்பர் 28ஆம் தேதி கூட்டினார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.
ஒவ்வொரு அணியின் செயல்பாடும் கட்சியை வலுப்படுத்தும் படி இருக்க வேண்டும் என்பதற்காகவும் எல்லா அணிகளும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் 5 துணைப் பொதுச் செயலாளர்களுக்கு இந்த 23 அணிகளையும் பகிர்ந்து அளித்து மேற்பார்வையிட்டு கண்காணிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார் ஸ்டாலின்.
இந்த வகையில் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவுக்கு இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிற்சங்கங்கள், அமைப்புசாரா தொழிலாளர் அணி ஆகிய ஐந்து அணிகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராசாவுக்கு கொடுக்கப்பட்ட அணிகள் துடிப்பான செயல்பாடுகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு அவர் ஏற்கனவே கவனித்து வந்த மகளிர் அணி- மகளிர் தொண்டர் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, இலக்கிய அணி, மீனவர் அணி ஆகிய அணிகளை வலுப்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு விளையாட்டு மேம்பாட்டு பிரிவு, தகவல் தொழில் நுட்ப அணி, தொண்டர் அணி, விவசாய அணி, நெசவாளர் அணி ஆகிய அணிகளை மேம்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு துணைப் பொதுச் செயலாளரான அமைச்சர் பொன்முடிக்கு மருத்துவர் அணி, பொறியாளர் அணி, வெளிநாடு வாழ் தமிழர் அணி, சுற்றுச்சூழல் அணி, வர்த்தகர் அணி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்றொரு துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் நேற்றைய கூட்டத்திற்கு வரவில்லை. அதனால் அவருக்கு அணிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என சிலர் தெரிவித்தனர். ஆனால் ஆதிதிராவிடர் நலப்பிரிவு, சிறுபான்மையினர் உரிமை அணி உள்ளிட்ட ஏனைய அணிகளை பலப்படுத்தும் பொறுப்பு அந்தியூர் செல்வராஜுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இந்த ஒதுக்கீட்டை தெரிவித்துள்ளார். அனைத்து அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கும் விஷயத்தில் பொறுப்பாளர்களான துணைப் பொதுச் செயலாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
–வேந்தன்
டிப்ளமோ படித்தவர்களுக்கும் சட்டப்படிப்பு: உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
கிச்சன் கீர்த்தனா : பாகற்காய் சுகியன்