A Rasa takes the Dmk youth wing by the finger

அறிவோம் திராவிடம் -இளைஞரணியை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் ஆ.ராசா

அரசியல் சிறப்புக் கட்டுரை

கோவி.லெனின்

திமுக இளைஞரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள்- துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று (ஜூலை 29) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது.

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆ.ராசா தொகுப்பில் ’அறிவோம் திராவிடம்’ என்ற இருபது சிறு புத்தகங்கள் அடங்கிய பெட்டகம் முதலமைச்சரால் வெளியிடப்பட்டது.

படிப்புதான் எவராலும் பறிக்க முடியாத-அழிக்க முடியாத சொத்து என்று வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அழுத்தமாக எடுத்துரைத்து வருகிறார் முதல்வர்.

படி என்று சொல்வது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, நாம் ஏன் படிக்க முடியவில்லை என்பதை மக்கள் முன் கேள்வியாக வைத்தது திராவிட இயக்கம். படிப்பு மறுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு கல்வி கற்கும் வாய்ப்பைக் கொடுத்தது நீதிக் கட்சியின் அரசாங்கம். காமராஜர் காலத்தில் பள்ளிக் கல்வி, கலைஞர் காலத்தில் உயர்கல்வி, பின்னர் தொழிற்கல்வி என இன்றைய தமிழ்நாடு பட்டதாரிகளை உருவாக்குவதில் இந்திய அளவில் முன்னணியில் இருப்பதுடன், உலக அளவிலான சராசரியுடன் போட்டியிடும் நிலையில் உள்ளது.

ஏட்டுக் கல்வியுடன் படிப்பு முடிந்து விடுவதில்லை. நாட்டு நடப்பையும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்-தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிட இயக்கத் தலைவர்கள் ஒவ்வொருவரும் பத்திரிகை நடத்தினார்கள். புத்தகங்களை எழுதி வெளியிட்டார்கள். கழகத்தின் சார்பில் ஊர்கள் தோறும் படிப்பகங்கள் திறக்கப்பட்டன. தேநீர்க்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள் என எல்லா இடங்களிலும் நாளிதழ் படிக்கும் பழக்கம் வளர்ந்தது. மக்கள் அரசியல் பேசினர். அரசியலில் பங்கெடுத்தனர். ஜனநாயகத்தின் வளர்ச்சியை படிப்பின் மூலமாக வெளிப்படுத்தியது தமிழ்நாடு.


அறிவோம் திராவிடம்- ஓர் அறிமுகம்!

சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் என மேற்கத்திய அறிஞர்களின் சிந்தனைகள் சிறுசிறு வெளியீடுகளாக வந்த போது, பொதுவுடைமை நூல்களையும், பகுத்தறிவு-சுயமரியாதை சிந்தனை நூல்களையும் வெளியிட்டது திராவிட இயக்கம். கொள்கை வலிமையும் படைப்புத் திறனும் கொண்டிருந்த திராவிட இயக்கத் தலைவர்களின் வெளியீடுகள் அறிவுப் புரட்சிக்கு வித்திட்டன. அர்த்தசாஸ்திரம், மனுநீதி, பகவத்கீதை, பாரதம், இராமாயணம் இவைதான் வீடுகளில் உள்ள புத்தகங்கள் என்ற நிலையை மாற்றி திருக்குறள், சிலப்பதிகாரம், அகம், புறம், திருவருட்பா எனத் தமிழ் இலக்கியங்ளை முன்னிறுத்தியது திராவிட இயக்கம்.

திருமணத்தில் மொய்ப் பணத்திற்குப் பதில் புத்தகங்களைப் பரிசளிப்பது, பொதுக்கூட்டம்-மாநாடுகளில் புத்தகசாலை அமைப்பது என்பதைத் தொடர் இயக்கமாகவே மேற்கொண்டு வந்தனர் திராவிட இயக்கத் தலைவர்கள். கையிலே புத்தகம் இருந்தால் கருத்திலே தெளிவு இருக்கும் என்ற எண்ணம் கழகத்தினரிடமும் மக்களிடமும் ஏற்பட்டது.

புத்தாயிரம் ஆண்டுக்குப் பிறகு காட்சி ஊடகங்கள் பெருகி, கைப்பேசிகளின் உலகம் உருவான பிறகு, படிப்பது குறைந்த பார்ப்பது பெருகிய ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. அந்தத் தலைமுறையிடம் மீண்டும் கொள்கையை விதைக்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா எம்.பி.

இந்த வகையில்தான்… தி.மு.க இளைஞரணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் ஆ.ராசா எம்.பி. தொகுத்த ‘அறிவோம் திராவிடம்’ என்ற புத்தகப் பெட்டகம் வழங்கப்பட்டது.

பெட்டகத்துக்குள் மின்னிய புத்தக மணிகள்!

பெட்டகத்தைத் திறந்தவர்களுக்கு பொன்னும் வைரமும் நவமணிகளுமாக மின்னின உள்ளே இருந்த 20 புத்தகங்கள். முதல் புத்தகம், பெரியார் பொன்மொழிகள். அரசியல், சமுதாயம், மதம், கடவுள் உள்ளிட்டவை பற்றி தந்தை பெரியாரின் பாசாங்கற்ற வெளிப்படையான-தெளிவான கருத்துகளைக் கொண்ட திராவிடர் கழக வெளியீடு. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டு, 1979ல் தடை நீக்கப்பட்ட புத்தகம்.

பெரியாரைத் தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை. ‘பேராசைப் பெருந்தகையே போற்றி’ என்று தொடங்குவதிலிருந்தே அண்ணாவில் தமிழ் கடைசி வரை நூல் பிடித்ததுபோல இந்தப் புத்தகத்தை படிக்க வைத்துவிடும். ஆபி டியூபா என்ற ஐரோப்பிய அறிஞர் 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய மதச் சடங்குகள், பழக்கங்கள் பற்றி எழுதிய புத்தகத்திலிருந்து சாறு பிழிந்து தந்த அண்ணாவின் இந்த சிறு வெளியீடும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்டு, பின்னர் தடை நீங்கப் பெற்றது.

தடை விதிக்கப்பட்ட இந்த இரு புத்தகங்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு திருச்சி நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட போது திராவிடர் கழகத் தலைவர் பெரியாரும், அவரிடம் இருந்து பிரிந்து தனி இயக்கம் கண்டு இரண்டாண்டுகளே ஆன திமுக பொதுச் செயலாளர் ஒன்றாக சிறை சென்று அருகருகே செல்லில் அடைக்கப்பட்டனர். தனி இயக்கம் நடத்தினாலும், தான் கண்ட – கொண்ட ஒரே தலைவரான பெரியாரிடம் அண்ணா காட்டிய மரியாதையும், ஒரே நாளில் விடுதலையான போது அண்ணாவிடம் பெரியார் காட்டிய பரிவும் கொள்கை உறவின் தனித்துவமான வரலாறு.

1981ல் ஆத்தூரில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த கலைஞர் ஆற்றிய உரை, ‘பெரியார் பிறவாமலிருந்தால்’ என்ற தலைப்பில் சிறு வெளியீடாக வந்துள்ளது. அதுவும் ஆ.ராசாவின் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய கலைஞரின் சொல்லாற்றல் வாயிலாக பகுத்தறிவு-சுயமரியாதை கொண்ட சமுதாயத்தைத் தன் காலத்திற்குப் பிறகும் பெரியார் எப்படி விட்டுச் சென்றிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

அண்ணல் அம்பேத்கர், ‘இந்துவாகப் பிறந்தேன். இந்துவாக சாக மாட்டேன்’ என்று சொல்லி 6 லட்சம் மக்களுடன் புத்த மதத்தைத் தழுவினார். சனாதன-வருணாசிரமக் கொள்கைகளால் மனிதப்பண்புக்கு எதிராக இருக்கும் வைதீக மதக் கருத்துகளை தனக்கேயுரிய பாணியில் சாடியுள்ள பேராசியர் அன்பழகனார் அவர்களின் ‘இந்துவாக இருக்க விரும்பவில்லை’ என்ற சிறு நூல் 1982ல் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் தொகுப்பு.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொகுத்தளித்த தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை என்ற சிறு வெளியீடு, பெண் விடுதலை-பெண் உரிமை- பெண்களின் தற்சார்பு வாழ்க்கைக்கான வழிகாட்டி. ஆ.ராசா எம்.பி.யும் பத்திரிகையாளர் ப.திருமாவேலனும் சேர்ந்து தொகுத்துள்ள ‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ என்ற சிறு வெளியீடு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் தனது தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் இலட்சியம் குறித்து மேடைகளிலும் பேரவையிலும் எடுத்துரைத்த கருத்துகளின் தொகுப்பு.

எதற்காக இந்த பெட்டகம்?

எதற்காக இதனைத் தொகுத்திருக்கிறோம் என்று ஆ.ராசா எழுதியுள்ள முன்னுரையில், “கலைஞருக்குப் பின் நிர்வாகத் திறனுடன் ஒரு மக்கள் நல ஆட்சியை (மட்டுமே) தருவார் என்று மதிப்பீடு செய்திருந்த பல கொள்கையாளர்கள், தங்கள் கணிப்பு ‘காலப் பிழையாக’ப் போனது என்பதை நாணத்தோடு ஒப்புக் கொள்ளும் வகையில், தத்துவத் தலைவராக, தமிழ்நாடு முதல்வர் கழகத் தலைவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மாமனிதர் இன்று அரசியல் அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.

ஆரியம் இன்று தேசத்தைக் காவி வண்ணம் அடித்துக் களங்கப்படுத்துகிறது. எதிர்க்க அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆரியத்தை மறுதலிக்க, மருளச் செய்ய அவர்களிடம் தத்துவம் இல்லை. தத்துவம் இருக்கிற இடம் தமிழ்நாடு மட்டுமே. அதை வழிநடத்தத் தகுதியுள்ள தலைவர் ஒருவர் இருப்பதும் இங்குதான். தலைவனும் தத்துவமும் சங்கமிக்காத எந்தப் போராட்டமும் வென்றதில்லை. ஆரியத்தை வெல்லும் ஒரே தத்துவம் திராவிடம்தான்.

அந்தத் தத்துவத் தலைவனின் கொள்கை முழக்கத்தில் விளைந்த முத்துக்கள், களத்திற்குச் செல்லும் நம் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் இலட்சியங்களை வென்றெடுக்க அவசியத் தேவைகளாகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவருடைய முன்னுரை என்பது இந்த ஒரு சிறு வெளியீட்டிற்கு மட்டுமானதாகக் கருத முடியாது. கொள்கை முழக்கம் செய்ய வேண்டிய கடமையைக் கொண்டுள்ள திராவிட இயக்கத்தின் இளந் தலைமுறையினருக்கு ஆ.ராசா எம்.பி. பரிந்துரைத்திருக்கின்ற 20 புத்தகங்களையும் அறிமுகப்படுத்துகின்ற முன்னுரையாக அமைந்துள்ளது.

A Rasa takes the Dmk youth wing by the finger
இந்தியாவை மறுகட்டுமானம் செய்வதற்கான கருவி!

அவர் தொகுத்த மற்றொரு புத்தகமான நேரு சிந்தனை-இலக்கும் ஏளனமும் என்பது ஜனநாயக விழுமியங்கள் தகர்க்கப்படும் இக்காலத்தில், சமூக நல்லிணக்கம் கொண்ட இந்தியாவை மறுகட்டுமானம் செய்வதற்கானக் கருவியாக உள்ளது.

பொய் நெல் குத்தி, புளுகு அரிசி சமைக்க நினைக்கும் பா.ஜ.க.வின் இந்துத்வா மதவெறிக் கொள்கைக்கு பதிலளிக்கும் வகையில் பேராசிரியர் சுப.வீ எழுதிய திராவிட இயக்கமும் இந்துக்களும், தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள், கொளத்தூர் மணியின் கருஞ்சட்டைக் கலைஞர், விடுதலை ராசேந்திரன் எழுதிய 10 சதவீதம் இடஒதுக்கீடு, இவற்றுடன் என்னவெல்லாம் செய்தார் கலைஞர், இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா, தமிழர் வரலாற்றை அழிக்கும் பா.ஜ.க.வின் கல்வித் திட்டம், இல்லாத இந்து மதம், அறிவோம் ஆரியத்தை, மனுசாஸ்திரம், சூத்திரனாயிருக்க வெட்கப்படுகிறேன்., ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆழமும் அகலமும், டாக்டர் டி.எம். நாயரின் புகழ் பெற்ற ஸ்பர் டேங்க் உரையான ஆரியர்-திராவிடர் போராட்ட வரலாறு ஆகிய சிறு வெளியிடுகளும் ‘அறிவோம் திராவிடம்’ என்ற தொகுப்பில் அடங்கியுள்ளன.

A Rasa takes the Dmk youth wing by the finger
புத்தகங்களும் திராவிட இயக்கமும்!

திராவிட இயக்கத்தில் தந்தை பெரியார், தான் அணிந்திருந்த கண்ணாடியுடன் ஒரு பூதக் கண்ணாடியையும் வைத்துக் கொண்டு கடைசிக் காலம் வரை படித்துக் கொண்டிருந்தவர். பேரறிஞர் அண்ணா கொடிய புற்றுநோயால் அவதியுற்று அறுவை சிகிச்சைக்கு செல்லும் நிலையிலும், தான் படித்துக் கொண்டிருந்த ‘தி மாஸ்டர் கிறிஸ்டியன் ‘ என்ற புத்தகத்தை முடித்துவிட்டு சிகிச்சைக்கு வருகிறேன் என மருத்துவரிடம் தெரிவித்தவர். இரண்டு லட்சம் பக்கங்களுக்கு மேல் எழுதிய கலைஞரின் கோபாலபுரம் அறையே புத்தகங்களால் நிறைந்திருக்கும்.

பேராசிரியர் அன்பழகனார் கனமான புத்தகங்களை ஆழமாகக் கற்பதில் கடைசிவரை ஆர்வம் குறையாமல் வாழ்ந்தவர். முரசொலி மாறன் படித்துப் படித்தே மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலிக்கு ஆளானவர். இவர்கள் அனைவரும் தாங்கள் கற்றதை மக்களிடம் எடுத்துரைத்து, எழுத்துக்களாக வடித்து, சமுதாய மாற்றத்தை வெற்றிகரமாக உருவாக்கிக் காட்டியவர்கள்.

பெரியார் முதல் முரசொலி மாறன் வரையிலான தலைமுறைக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆ.ராசா தனது சொந்த ஊரின் கிளை நூலகம் முதல் இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள நூலகம் வரை ஓயாமல் புத்தகப் பூக்களில் தேன் சுவைத்த தேனீ. அவரது கற்றலின் ஆழமும் அகலமும் என்ன என்பதை 2ஜி வழக்கில் அவரே வாதாடி, தகத்தகாய சூரியனாக விடுதலையாகி வெளிவந்ததில் இருந்தேஅறிய முடியும்.

வசதி இருக்கிறது… வழிகாட்டுதல்தான் தேவை!

இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பதற்கான வாய்ப்புகளும், அதற்கான தொழில்நுட்ப வசதிகளும் நிறைந்துள்ளன. எதைப் படிப்பது, எதற்காகப் படிப்பது என்று வழிகாட்டுதல்தான் அவர்களுக்கானத் தேவை. காலமறிந்து கூவும் சேவலாக, தேவை அறிந்து புத்தக முத்துகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஆ.ராசா எம்.பி.

‘அறிவோம் திராவிடம்’ என்ற அவரது தொகுப்பில் உள்ளவை அனைத்தும் சிறு வெளியீடுகள். இன்றைய சமூக வலைத்தள யுகத்தின் இளைஞர்களுக்கு ஏற்ற வடிவிலானவை. இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க தலைவர் சொன்னதுபோல, இதில் உள்ள புத்தகத்தை நாள்தோறும் ஒவ்வொன்றாக எடுத்துப் படித்தால் கால் மணிநேரம், அரை மணிநேரத்தில் படித்து விட முடியும். செலவிட வேண்டியவை சில மணித் துளிகள். அதில் இளைஞர்கள் பெறப்போவதோ ஒரு பெரும் வரலாறு. மானுடம் போற்றும் இயக்கத்தின் வெற்றி வரலாறு. மனித குலத்திற்கு எதிரான சக்திகளை எதிர்த்து வென்ற வரலாறு.

இளைஞரணியின் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., திராவிடக் கொள்கைப் பாதையில் அவர்களை விரல் பிடித்து அழைத்துச் செல்லும் மூத்த சகோதரனாகத் தன் பணியை நிறைவாகச் செய்திருக்கிறார்.

கட்டுரையாளர் குறிப்பு: 

A Rasa takes the Dmk youth wing by the finger

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்துக்கான காரணம் என்ன?: அமைச்சர் விளக்கம்!

ஒரே அறையில் 500 பேர்… கழிப்பறை வசதி கூட இல்லை: மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *