“ஆ.ராசாவை தமிழக முதல்வர் கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள்” என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று (செப்டம்பர் 21) காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகள் ஆன நிலையில் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்குஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “மதுரைக்கு என தனித்துவமான பாரம்பரியம், பண்பாடுகள் உள்ளது. மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி செய்தார்.
அரை ஆடை புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் கடந்துள்ளது. அரை ஆடை புரட்சி என்பது உலக புரட்சியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
எடப்பாடியார் உள்துறை அமைச்சரை சந்தித்து, நடந்தால் வாழி காவிரி திட்டம், கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்,
சட்ட ஒழுங்கு தமிழகத்தில் கேள்விகுறியாகி உள்ளது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கோரிக்கையாக அளித்துள்ளார்.

ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சாக உள்ளது.
எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு உள்ளதாக கூறவில்லை. நாட்டிற்கு தேவையானவைகளை பேசாமல் ஆ.ராசா தேவையற்றவைகளை பேசி வருகிறார்.
ஆ.ராசாவின் பேச்சால் நாடு கொந்தளித்துள்ளது. முதலமைச்சர் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர். அவருடைய பேச்சுக்கு, முதல்வர் இதுவரை எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
திமுகவில் 90% இந்துக்கள் உள்ளனர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். அப்படி என்றால் அவர்களையும் சேர்த்துதான் ராசா கூறி உள்ளாரா?.
ராசா நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அவர் பேச யார் உரிமை கொடுத்தது? ஒருவேளை முதலமைச்சர் ஊதுகுழலாக ராசா பேசி உள்ளாரா என்ற கேள்வி தற்போது எழும்பி உள்ளது.
ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மன்னிப்பு கேட்கவில்லை, ஆ.ராசாவின் கருத்தை ஒட்டுமொத்த திமுகவின் கருத்தாகத்தான் பார்க்க வேண்டும். எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது.
முதல்வர் ஆ.ராசாவை கண்டிக்க வேண்டும். முதல்வர் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால் திமுகவினர் அதற்குரிய தண்டனை பெறுவார்கள்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ’மின் கட்டணம், சொத்துவரிகளை உயர்த்தக்கூடாது’ என்று கூறினார்.
தற்போது அவர் முதலமைச்சர் ஆனபின்பு ’சொத்து வரியை ஏற்றுக்கொள்ளுங்கள், மின் கட்டணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்.
ஆட்சி இல்லை என்றால் ஒரு பேச்சும் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சும் என ஸ்டாலின் மாறிமாறிப் பேசியிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது” என விமர்சித்தார்.
ஜெ.பிரகாஷ்
டெண்டர் வழக்கில் வேலுமணி தாக்கல் செய்த மனு: நாளை விசாரணை!
அஜித் 61 பட டைட்டில் அறிவிப்பு எப்போது?