வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 24) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பாஜகவைச் சேர்ந்த கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் 10 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தார்.
திமுக மக்களவை எம்.பி. ஆ.ராசா, மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா உட்பட கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் கூட்டுக்குழுவில் இருந்து இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கடந்த 9 மாதங்களாக ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகருக்கும் சென்று அங்கு இருக்கக் கூடிய வக்ஃப் வாரியம் மற்றும் கருத்துரையாளர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து கருத்துகளை கேட்டு வருகிறது.
இந்த மாதத்தில் மேற்குவங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். இந்த சுற்றுப்பயணத்தில் நாங்கள் இருக்கிறபோதே, கடந்த 20ஆம் தேதி எங்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தது. மீண்டும் 24ஆம் தேதி ஜேபிசி கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அதில், வக்ஃப் திருத்த மசோதாவில் உள்ள ஒவ்வொரு சரத்துக்கும் நீங்கள் என்ன திருத்தத்தை கொண்டு வர விரும்புகிறீர்கள் என 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதுவே புதிராகத்தான் இருந்தது.
இப்படி ஒரு நாளும் நடந்தது இல்லை. தொடர்ந்து 24ஆம் தேதியே நாங்கள் என்ன திருத்தம் கொடுத்தோமோ, அது ஒவ்வொரு பிரிவாக விவாதிக்கப்படும் என்று சொன்னார்கள்.
நான் இதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு ஜேபிசி தலைவர் உங்கள் கோரிக்கை நியாயமானதுதான், குறைந்தகாலம் தான் இருக்கிறது. அரசாங்கத்திடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்றார். அதன் பிறகு எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து 22ஆம் தேதி நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில், ‘நீங்கள் ஒப்புக்கொண்டபடி கால அவகாசம் தரவில்லை. 21ஆம் தேதிதான் ஜேபிசி குழுவில் இருந்த ஒவ்வொரு உறுப்பினர்களும் அவர்களது மாநிலங்களுக்கு புறப்பட்டார்கள். அவர்கள் சென்று சேர்வதற்கு 22ஆம் தேதி ஆகிவிடும்.
மீண்டும் 24ஆம் தேதி கூட்டத்தை கூட்டினால், நாங்கள் ஏற்கனவே வைத்திருந்த சட்ட திருத்தம் குறித்து எப்படி விவாதிக்க முடியும் என்று கேட்டதற்கு பதில் இல்லை.
டெல்லி தேர்தலில் ஓட்டுகளை பெற…
என்றாலும், இன்றைக்கு கூட்டப்பட்டிருக்கிற கூட்டம் என்பது ஒவ்வொரு சரத்தாக நாங்கள் கொடுத்திருக்கிற திருத்தங்களின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள உறுப்பினர்கள் அவர்களது முக்கியமான பணிகளை எல்லாம் விட்டுவிட்டு, இஸ்லாமியர்களுக்காக இந்த நாட்டின் அரசியல் சட்டத்துக்காக கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று விமானத்தை பிடித்து டெல்லி வந்திறங்கினோம்.
இரவு 11.40 மணிக்கு எங்கள் வாட்ஸ் அப் குழுவுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஒவ்வொரு சரத்தாக விவாதிப்பது இன்றைக்கு கிடையாது. திடீரென ஜம்மூ காஷ்மீரில் இருந்து சில இஸ்லாமியர் அமைப்புகள் சாட்சியங்கள் அளிப்பார்கள்.
27ஆம் தேதி ஒவ்வொரு சரத்தும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று கூட்டத்துக்கு போனதும், ‘எல்லோரும் அடித்துபிடித்து விமானத்தை பிடித்து வந்திருக்கிறோம். இஸ்லாமியர்களின் பாதுகாப்புக்காக வந்திருக்கிறோம். ஆனால் நடுநிசியில் யாரைக் கேட்டு பொருளடக்கத்தை மாற்றினீர்கள் என்று கேட்டோம்.
நாங்கள் அப்படிதான் செய்வோம் என்றார்கள். சரி, 27ஆம் தேதி யாரை கேட்டு மாற்றினீர்கள் என்று கேட்டோம். 26ஆம் தேதி குடியரசுத் தினம் . இந்த விடுமுறை நாளை தொடர்ந்து 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் எங்கள் நாடாளுமன்ற தொகுதிகளில் பணிகளை வைத்திருக்கிறோம். ஏப்ரல் 4ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கும் நிலையில் இவ்வளவு அவசரமாக கூட்டத்தை கூட்ட அவசியம் என்ன?
எங்களுடைய அச்சம் என்னவென்றால், இவ்வளவு வேகமாக ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அதை நீங்கள் நடைபெறவிருக்கிற டெல்லி மாநில தேர்தலுக்காக பயன்படுத்த இருக்கிறீர்களோ என தோன்றுகிறது. இந்துக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக இதை செய்கிறார்களோ என்ற ஐயமும் இருக்கிறது’ என்று சொன்னோம்.
குடியரசுத் தலைவர் வாயிலாக…
எல்லோரும் எழுந்து சத்தம் போட்டதும், குழு தலைவருக்கு ஒரு போன் வந்தது… உடனே எங்களையெல்லாம் சஸ்பெண்ட் செய்துவிட்டார். இதுதான் நடந்தது” என்று கூறினார்.
மேலும் அவர், “விரைவில் வக்ஃப் சட்டத்தில் உரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும், அந்த சொத்துகள் எல்லாம் முடக்கப்படும் என்று சொல்வதன் வாயிலாக… தேவைப்பட்டால் இது குடியரசுத் தலைவரின் உரையிலேயே வருமோ என்ற ஐயமும் எங்களுக்கு இருக்கிறது.
இந்த அரசாங்கம் உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ, ஐடி, ஈடி வரிசையில் குடியரசுத் தலைவர் மாளிகையையும் பயன்படுத்த இருக்கிறார்களோ என்ற ஐயப்பாடும் இருக்கிறது.
குடியரசுத் தலைவர் வாயிலாக ஒரு செய்தியை அனுப்பி அதன்மூலமாக மதரீதியாக வெற்றியை பெற்றுவிடலாம் என்று கனவு காண்கிறார்களோ என்ற எண்ணமும் எங்களுக்கு உள்ளது. இதை அங்கேயே சொன்னதால் தான் எங்களை சஸ்பெண்ட் செய்துவிட்டார்.
எனவே பட்ஜெட் முதல் அமர்விலேயே இதுகுறித்து விவாதிக்கப்படலாம். ஏனென்றால் 30ஆம் தேதியே ரிப்போர்ட் கொடுத்துவிடுவார்கள்” என்றார்.
இதற்கு செய்தியாளர்கள், அப்படி ஒருமித்த கருத்து இல்லாமல் ரிப்போர்ட் தாக்கல் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஆ.ராசா எம்.பி., “ஓட்டுடெடுப்பு வைத்து பெரும்பான்மை மூலம் ஜெயித்துவிட்டோம் என்பார்கள்” என்று பதிலளித்தார்.
யாரோ ஒருவர் போன் செய்தார்… அந்த போன் வந்ததும் உங்களை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள் என்று சொல்கிறீர்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அல்லது சபாநாயகர் இவர்கள் மூவரில் ஒருவருக்குத்தான் சஸ்பெண்ட் செய்ய சொல்ல அதிகாரம் இருக்கும். அப்படியானால் யார் அந்த ஒருவர்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “இந்த மூவரை சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள். ஆனால் அந்த மூவரில் சஸ்பெண்ட் செய்ய சொன்னவர் யார் என்று புலனாய்வு வைக்க வேண்டியதுதான்” என்று குறிப்பிட்டார் ஆ.ராசா.