“மூன்று சட்டங்களே மோடி ஆட்சியை மாற்றும்”: உண்ணாவிரதத்தில் ஆ.ராசா ஆவேசம்!

Published On:

| By Selvam

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களே மோடி ஆட்சியை மாற்றுவதற்கான ஒரு காரணியாக அமையலாம் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூலை 6) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, சட்டத்துறைத் தலைவர் விடுதலை, சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய ஆ,ராசா, “இந்தியாவில் எத்தனையோ மொழிகள், மதங்கள், கலாச்சாரங்கள் வெவ்வேறு  பண்பாடுகள், பூகோள அமைப்புகள் இருந்தாலும் இவை அனைத்தையும் கட்டிக்காப்பது அரசியல் சட்டம் தான்.

இந்த அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய இறையாண்மைக்கு ஆபத்தாக பாகிஸ்தான் படையெடுப்பு வந்தபோது ரூ.5 கோடி அள்ளித்தந்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். மீண்டும் கார்கில் போர் வந்தபோது அன்றைக்கு ரூ.100 கோடி கொடுத்தது கலைஞர்.

ஆக எப்போதெல்லாம் இறையாண்மைக்கு ஆபத்து வந்ததோ, அப்போதெல்லாம் ஒரு மாநில கட்சி தான் இந்தியாவை அதிகமாக காப்பாற்றியிருக்கிறது.

அதேபோல இந்திராகாந்தியால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்தபோது, அதை எதிர்த்து மிசாவில் சிறை சென்ற பெருமை அண்ணன் திருச்சி சிவா போன்றவர்களுக்கு உண்டு.

நான் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசினேன். உடனடியாக வனத்துறை அமைச்சர் குபேந்தர் சிங், இவ்வளவு ஆவேசமாக ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறீர்களே, எமெர்ஜென்சி காலத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட அந்த கொடுமையெல்லாம் மறந்துபோய் விட்டதா என்று கேட்டார்.

நான் சொன்னேன், மறந்துபோய்விடவில்லை. ஆனால், செய்த குற்றத்திற்காக நான் தவறு செய்துவிட்டேன்.  என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று எங்கள் ஊர் கடற்கரைக்கு வந்து பொதுமன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தார் இந்திரா காந்தி. அவருக்கு பெருந்தன்மை இருக்கிறது. ஆனால் உங்களுக்கு இல்லையே என்று நேராகவே கேட்டேன்.

இந்திரா காந்தியால் எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டோம். திமுக பாதிக்கப்பட்டது. ஆனால், அப்போது கூட அந்த அம்மையார் செய்த ஒரு மிகப்பெரிய செயலை மறந்துவிடக்கூடாது.

அப்போது தான் Secular என்ற வார்த்தையும் Socialistic என்ற வார்த்தையையும் அரசியலமைப்பு சட்டத்தில் வெளிப்படையாக கொண்டு வந்து சேர்த்தார்.

இறையாண்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமதர்மத்தை காப்பாற்றியது நாங்கள் தான். எனவே அரசியல் சட்டத்தை காப்பாற்றக்கூடிய வல்லமை திமுக காலத்தில் அண்ணாவுக்கு தான் இருந்தது.

அந்த வல்லமையை கலைஞர் பாராட்டினார், பாதுகாத்தார். அதனை இன்றைக்கு ஸ்டாலினும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்.

இந்த மூன்று சட்டமே மோடி ஆட்சியை மாற்றுவதற்கான ஒரு காரணியாக அமையலாம். அரசியலில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை… திமுக, காங்கிரஸை சாடும் ஜே.பி.நட்டா

பாபு ஜகஜீவன்ராமும் நீதிபதி சந்துரு கமிஷன் பரிந்துரையும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share