மோடியின் கேரண்ட்டியை நிராகரித்த தமிழக மக்கள்: மக்களவையில் ஆ.ராசா
பிரதமர் மோடி கொடுத்த கேரண்டியை தமிழக மக்கள் ஒருமுறை அல்ல, இரண்டு முறை நிராகரித்துள்ளார்கள் என்று திமுக நாடாளுமன்ற மக்களவை கொறடாவும், துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா இன்று (ஜூலை 1) தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய ஆ.ராசா,
“பாஜக 370 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று இந்த அவையில் வைத்து தான் பிரதமர் மோடி பேசினார். ஆனால், தற்போது பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் வாக்குறுதியை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதை முழுமையாக அறிந்த பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உரையில் இது மெஜாரிட்டி அரசு என்று எப்படி சொல்ல வைத்தார். இதுவே ஒரு மிகப்பெரிய பொய்.
பிரதமர் மோடி ஆட்சிக்கும் எமெர்ஜென்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்திரா காந்தி ஆட்சியில் எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, சட்ட வரம்புகள் மீறப்பட்டது. பின்னர் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். அதுதான் தலைமைத்துவ பண்பு. அதே இந்திரா காந்தியை தான் மக்கள் மீண்டும் பிரதமர் பதவியில் உட்கார வைத்தனர். ஆனால், இது ஃபாசிச அரசாக செயல்படுகிறது.
இந்து மத பெரும்பான்மை என்ற பெயரில் என்டிஏ அரசு பழங்குடிகள், சிறுபான்மையினர், தலித்துகள், இந்து அல்லாதோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். இது தான் இனவெறி, ஃபாசிசம்.
எமெர்ஜென்சியால் ஏற்பட்ட இழப்புகளை இந்திரா காந்தி சரிசெய்தார். ஆனால், மோடி இந்த நாட்டுக்கு ஏற்படுத்திய அழிவுகள் என்பது சரிசெய்ய முடியாதது. அதனால் மீண்டும் அவர் ஆட்சிக்கு வரவே முடியாது.
திராவிட கொள்கையுடைய மண்ணில் இருந்து வருகிறேன் என்பதை பெருமையுடன் இங்கே சொல்லிக்கொள்கிறேன். இந்த கொள்கையை முன்மொழிந்தவர் தந்தை பெரியார். அறிஞர் அண்ணா, கலைஞர், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலினால் இந்த கொள்கை கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் ஃபாசிச பாஜகவுக்கு திராவிட மண் தக்க பதிலடி கொடுத்துள்ளது. எட்டு முறை தமிழகத்திற்கு பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக வந்தார். ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. பிரதமர் மோடி கொடுத்த கேரண்ட்டியை தமிழக மக்கள் ஒருமுறை அல்ல, இரண்டு முறை நிராகரித்துள்ளார்கள்.
இந்த நேரத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இங்குள்ள மக்கள் வடக்கு, தெற்கு என்று பிரிக்க விரும்பவில்லை. அரசியல் ரீதியாக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இதனால் வரும்காலங்களில் அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும்.
குடியரசு தலைவர் உரையை நான் முழுமையாக படித்தேன். பிரதமர் மோடியின் மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை இருப்பதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. எங்களுடைய உணர்வை மதிக்காததால் தான், தமிழக மக்கள் பாஜகவை புறக்கணித்துள்ளார்கள்.
இந்துக்கள் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள். நாங்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் அல்ல. அன்பு தான் கடவுள், மனிதநேயம் தான் கடவுள்.
ஏன் பிரதமர் மோடியை கூட நாங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கான தகுதியை அவரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். அவரிடம் எந்தவிதமான தகுதியும் இல்லை” என்று ஆ.ராசா தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெரிய தொகைக்கு ஏலம் போன மம்மூட்டி எடுத்த புகைப்படம்!