திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா நீலகிரி செல்லும் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்துமதம் பற்றிக் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி திமுக துணை பொதுச் செயலாளர் பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதிலிருந்தே சுமார் 20 நாட்களாகத் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இந்து முன்னணியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வந்தால் ரூ. 1 கோடி பரிசளிக்கப்படும் என்று முகநூலில் அறிவித்த இந்து மக்கள் புரட்சி படையைச் சேர்ந்த கண்ணன் கைது செய்யப்பட்டார்.
நேற்று கோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆ.ராசாவை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுபோன்ற பரபரப்பான சூழலில் இன்று (செப்டம்பர் 27) திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா தனது தொகுதியான நீலகிரிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து கார் மூலம் நீலகிரி செல்ல இருந்தார்.

ஆ.ராசாவின் வருகையையொட்டி காங்கிரஸைத் தவிரக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் திராவிட அமைப்புகள் எல்லாம் வரவேற்பு கொடுக்க பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்திருந்தன.
அதே சமயத்தில் ஆ.ராசா கோவை வழியாக நீலகிரி செல்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டது.
பாஜகவின் மாநில விவசாய பிரிவு செயலாளரான ஜிகே நாகராஜ், “கோவை விமான நிலையத்திலிருந்து அன்னூர் வழியாக நீலகிரி செல்லும் ராசாவுக்கு அறவழியில் கடும் எதிர்ப்பை தெரிவித்துத் தக்க பாடம் புகட்ட வேண்டியது நமது அனைவரின் தலையாய கடமை” என்று தெரிவித்திருந்தார்.
அதோடு பாஜக வாட்ஸ் அப் குழுக்களில் ஆ.ராசாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு கொடி போராட்ட நடத்த வருமாறும், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்றும் தகவல்கள் பரபரப்பட்டன.
ஆ. ராசா, கோவை விமான நிலையத்திலிருந்து நீலகிரிக்குச் சாலை மார்க்கமாகச் செல்லும் போது அவருக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று பாஜக மகளிர் அணியினர் தெரிவித்திருந்தனர்.
ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் இன்று மாவட்ட பொதுச் செயலாளர் பிரீத்தி தலைமையில் கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த சூழலில் பாஜகவினரின் எதிர்ப்பு குறித்தான உளவுத் துறை தகவலும் ஆ.ராசா கவனத்துக்குச் சென்றது.
எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்கவும், ஏற்கனவே மதுரையில் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்டது போன்ற தேவையற்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கவும் ஆ.ராசாவின் பயண திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, “இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.