சாதாரண இந்து -சனாதன இந்து: வட இந்தியாவை வியக்கவைக்கும் ஆ.ராசா பேச்சு!
திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ. ராசா கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சனாதன தர்மம் பற்றி பேசிய பேச்சின் அதிர்வுகள் தமிழ்நாட்டில் ஓரளவு ஓயத் தொடங்கியுள்ள நிலையில்…
டெல்லியில் ராசா பேச்சின் அதிர்வுகள் இப்போதுதான் தொடங்கியுள்ளன.
மனு ஸ்ம்ருதி பற்றி ராசா பேசிய பேச்சுக்கு பாஜகவும் இந்து அமைப்புகளும் கடும் எதிர்வினை ஆற்றின. இந்துக்களை இழிவுபடுத்திய ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு காவல் நிலையங்களில் ராசா மீது பாஜகவினரும் இந்து அமைப்பினரும் புகார்கள் அளித்தனர்.
இதற்கு மீண்டும் பதில் அளித்து திமுக தலைவர் ஸ்டாலின் எழுதிய, மடல்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார் ராசா. அப்போது அவர், “இந்துக்களில் இரண்டு வகை இருக்கிறார்கள். நாமெல்லாம் சாதாரண இந்துக்கள். அவர்களெல்லாம் சனாதன இந்துக்கள்.
சாதாரண இந்துக்களுக்கு படிப்பறிவு, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு ஆகியவற்றை எதிர்த்து நீதிமன்றம் சென்றது யார்? இரண்டு பேரும் இந்துக்கள்தானே. சாதாரண இந்துக்களுக்கு வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு கிடைக்கக்கூடாது என்று நீதிமன்றம் சென்றது சனாதன இந்துக்கள்தானே.
எனவே நாங்களும் இந்துக்கள்தான். ஆனால் நாங்கள் சாதாரண இந்துக்கள். அவர்கள் சனாதன இந்துக்கள். இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதில் அளித்தார் ஆ. ராசா.
ராசாவின் இந்த விளக்கம் இந்திய அளவில் இப்போது பேசப்பட தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் டெல்லி மீடியா வட்டாரத்தில்.
அவர்களிடம் நாம் இதுபற்றி பேசிய போது, “பாஜக இந்துத்துவத்தை அடிப்படையாக வைத்து வாக்குகள் பெற்றுவரும் நிலையில்… பாஜக என்பது சனாதன இந்துக்களின் கட்சி… அது சாதாரண இந்துக்களுக்கான கட்சி அல்ல என்று ராசா பேசிய பேச்சு வட இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
ராசாவின் இந்த கருத்தை குறிப்பிட்டு மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரும் தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருமான மல்லிகார்ஜுன கார்கே சோனியாவிடம் பேசி இருக்கிறார்.
“பாஜகவுக்கு எதிராக வட இந்தியாவில் நாம் பயன்படுத்த வேண்டிய முக்கியமான பிரச்சாரத்தை திமுகவின் ஆ ராசா எடுத்துக் கொடுத்திருக்கிறார். இந்துக்களிலே இரண்டு வகை இருக்கிறார்கள்.
சனாதன இந்துக்கள், சாதாரண இந்துக்கள். நாம் சாதாரண இந்துக்களுக்கான கட்சி. பாஜகவோ சனாதன இந்துக்களுக்கான கட்சி. இந்த வேறுபாட்டை வட இந்திய மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே சொன்னபோது சோனியா காந்தி வியந்து போய்விட்டார். .
ஆ.ராசாவின் முழுமையான பேச்சின் வீடியோவை அவர் பார்த்து கார்கேவிடம் தனது ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் மனு ஸ்மிருதி பற்றி ராசா மேடையில் எடுத்துக் காட்டிப் பேசிய பனாரஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புத்தகத்தையும் கேட்டிருக்கிறார் சோனியா.
விரைவில் சாதாரண இந்து சனாதன இந்து என்ற பிரச்சாரத்தை வட இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் முன்னெடுக்க வாய்ப்பு இருக்கின்றன” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.
இது மட்டுமல்ல, ஆ.ராசாவின் இந்துக்களில் இரண்டு வகை என்ற பேச்சின் வீடியோவை மராட்டிய மொழி சப்டைட்டிலோடு தயார் செய்து மகராஷ்டிரா மாநிலத்தில் சமூக தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
மராட்டிய மொழி மட்டுமல்ல, வங்காள மொழி, இந்தி மொழி, ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆ.ராசாவின் இந்த பேச்சு சப்டைட்டிலாக மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் எம்பியான மஹுவா மொய்த்ராவும் ஆ.ராசாவின் பேச்சை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
இந்துக்களில் இரண்டு வகை… பெரும்பான்மையான சாதாரண இந்துக்கள்… அவர்களைக் கட்டுப்படுத்த துடிக்கும் சிறுபான்மையான சனாதன இந்துக்கள் என்ற ராசாவின் மேடைப் பேச்சு, தமிழ்நாட்டை கடந்து வட இந்திய தேர்தல் களத்தின் பிரச்சார ஆயுதமாக மையம் கொண்டிருக்கிறது.
வேந்தன்
அண்ணாமலை திடீர் அமெரிக்க பயணம் ஏன்?
அதிமுகவில் யாரையும் நான் பிரித்து பார்க்கவில்லை – சசிகலா