மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக மிரட்டுவதன் மூலம், நீதித்துறை பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்கிறாரா என மக்களவையில் திமுக எம்பி ஆ ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 9) 2வது நாளாக நடந்து வருகிறது.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி,
”மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டுவிட்டாள் மணிப்பூர் இரண்டாக துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை இந்தியாவின் ஒரு பகுதியாக மோடி நினைக்கவில்லை. நீங்கள் தேசபக்தர்கள் இல்லை. தேசத்துரோகிகள்” என மத்திய பாஜக அரசை ராகுல்காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எழுந்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமிழ்நாட்டையும் இழுத்து பேசினார்.
அவர், “நீங்கள்(ராகுல் காந்தி) மணிப்பூரை பற்றி பேசும் முன் தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். பாஜகவை பற்றி பேசும் முன் கூட்டணி கட்சியான திமுகவை பற்றி பேசுங்கள்.
காங்கிரஸ் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி. அதேபோல் தமிழ்நாட்டில் திமுக உள்ளது என்று விமர்சித்தார்.
மேலும் இந்தியா என்றால் வட இந்தியா என்று மட்டுமே எதிர்க்கட்சி கூட்டணி உறுப்பினர் ஒருவர் தமிழ்நாட்டில் பேசினார். தைரியம் இருந்தால் ராகுல் காந்தி அது குறித்து கருத்து தெரிவிப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, ஸ்மிருதி இரானி தன்னை கைது செய்வதாக மிரட்டுவதாக சபாநாயகரிடம் குற்றஞ்சாட்டினார்.
அவர், “ஸ்மிருதி இரானி நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என எனக்கு மிரட்டல் விடுக்கிறார். இதன்மூலம், உச்சநீதிமன்றம் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று சொல்கிறாரா? நாட்டின் நீதித்துறையை பாஜக அரசு அச்சுறுத்தி கட்டுப்படுத்தி வைத்துள்ளதா பாஜக? என்று ஆக்ரோசமாக கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து திமுக எம்பி கனிமொழியும் மத்திய அரசையும், மணிப்பூர் மாநில பாஜக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
’பிளையிங் கிஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி?’: புகாரும்… மறுப்பும்!
பிற மாநில மாணவர்களுக்கு பயிற்சி… இதுவே முதல்முறை: அமைச்சர் மா.சு