டொனல்டு ட்ரம்பின் வெற்றி எந்தமாதிரியான அரசியலை முன்வைக்கிறது? ட்ரம்பின் ‘அதிர்ச்சி வெற்றி’ குறித்து ஊடகங்களும், ஆய்வாளர்களும், சமூகப் பண்டிதர்களும் எழுதிக் குவித்தவண்ணம் உள்ளனர். முதன்முறையாக, தேர்தலின் முடிவை எதிர்த்து, அமெரிக்கப் பெருநகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்களை மக்கள் தன்னிச்சையாக நடத்தினார்கள். ஊடகங்கள் வெளிப்படையாகவே இந்த வெற்றிகுறித்து அதிர்ச்சி தெரிவித்தன. சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் – அமெரிக்கர்களும், மற்ற தேசத்தினரும் – இது எப்படிச் சாத்தியம் என திகைப்புடன் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் ட்ரம்பின் அதிர்ச்சி வெற்றிக்கு, வெள்ளை இன உழைக்கும் வர்க்கத்தின் (White Working Class) விரக்தியே காரணம் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுவொரு மிக முக்கியக் காரணமென்று சுதந்திரவாத, (சில) இடதுசாரி கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், ஊடகப் பண்டிதர்கள், அங்கலாய்த்தும் கவலைப்பட்டும் வருகின்றனர். இது எந்தளவு உண்மை?
அப்படியானால், ப்ரெக்ஸிட் சாத்தியமாக அமைய ஏற்பட்ட காரணிகள் எவை: மேற்குலக சமூகத்தில் உள்ள அசமத்துவத்தால் ஏற்பட்ட விரக்தியா: புத்திசாலித்தனமான பொருளாதார முடிவா? அல்லது ஊடகப் பண்டிதர்களும் இடதுசாரிகளும் கவலையோடு குறிப்பிட்ட ‘பன்மை கலாச்சார’ விளைவாக வாழ்வாதார வாய்ப்புகளை இழந்ததால் வெள்ளை உழைக்கும் வர்க்கத்தின் (White Working Class) இன வெறுப்பு அரசியலா? அல்லது ப்ரெக்ஸிட் முடிவு ஆங்கிலேய உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்பட்ட ஐரோப்பிய ‘இனங்களின் மீதான’ (நிறமல்ல. ஏனெனில், ஐரோப்பியர்களும் வெள்ளையர்களே) வெறுப்பு அரசியலா? ஒருவேளை அது உண்மையானால், தெற்காசியர்கள் அதிகமாக வாழும் பிர்மிங்காம் (50.4%), லெஸ்டர் நகரங்களில் (48.9%) பெருவாரியான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக வாக்களித்ததை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?
அமெரிக்காவுக்கு மீண்டும் வருவோம்: வெள்ளை உழைக்கும் வர்க்கத்துக்கு சற்றும் தொடர்பில்லாத, பிரபல கறுப்பின ராப் பாடகரான கேன்யெ வெஸ்ட், ‘நான் ஒருவேளை வாக்களித்திருந்தால், எனது வாக்கு ட்ரம்புக்கே’ என்று சொல்வதின்மூலம் எந்தவிதமான ‘அரசியலை’ முன்னிலைப்படுத்துகிறார்?
2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், டொனல்டு ட்ரம்பின் வெற்றியா அல்லது மேற்கத்திய சமூகம் இதுநாள் வரை முன்வைத்த தாராளவாதம், உலகமயமாக்கம், சுதந்திரவாதம் ஆகிய சித்தாந்தங்கள் உடைய ஆரம்பிப்பதன் அறிகுறியா? அப்படியென்றால், கோடீஸ்வரர் டொனல்டு ட்ரம்பை அமெரிக்க வாக்காளர்கள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
ட்ரம்பின் ஆண் என்ற மப்பு; அவர் பெண்கள்மீது எறிந்த வக்கிரமான வெறுப்புப் பேச்சு; வந்தேறிகளால் உருவாக்கப்பட்ட ‘அமெரிக்க’ தேசத்தில் குடியேறிகளைப் பற்றிய அவரின் துவேசம், அவதூறு – இவையனைத்தையும் ட்ரம்பின் தேர்தல் வெற்றியோடு இணைத்துப் பார்ப்பது எப்படி?
சமூக வலைதளங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் சொல்ல தளம் அமைத்ததால் டொனல்டு ட்ரம்ப் வெற்றிபெற்றாரா? டொனல்டு ட்ரம்பின் ஊடக உத்திதான் என்ன? அவரால், எப்படி ஊடகங்களை முற்றிலும் எதிர்த்துக்கொண்டு இந்த அதிபர் தேர்தலை வெல்ல முடிந்தது?
கேள்விகள் பல: இப்பத்தியில் எழுப்பப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதிலோ, நீண்ட ஆய்வுக் கட்டுரையோ எழுதும் நோக்கம் கிடையாது; முடியாது. ஆனாலும் இக் கேள்விகளையும், இவை உருவான சமூகச் சூழலையும் நாம் அறிய முயற்சிப்பதும், ஒரு விவாதத்தை தொடங்குவதும் முக்கியமான ஆரம்பமாக இருக்கும். இக்கேள்விகள் குறித்த அலசல்களை முன்வைப்பதும், அதன்மூலமாக மேற்குலகம் சந்தித்துவரும் அரசியல் நெருக்கடிகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு எளிய முயற்சியாக மின்னம்பலத்தில் நாளை முதல் ஒரு மினி தொடர் தொடங்குகிறது.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு] https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/political-news/special-column-murali-shanmugavelan/