திருமா வாழும் கிறிஸ்து, வாழும் நபியா?  மணிவிழா மேடையில் சலசலப்பு!

அரசியல்

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரமைப்பின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின்  மணிவிழா இன்று (ஜனவரி 7) சென்னையில் நடைபெற்றது,

இந்த விழாவில் திருமாவளவனை, ‘வாழும் கிறிஸ்து வாழும் நபிகள்’ என்று வழக்கறிஞர் ரஜினிகாந்த் வாழ்த்தியதால் சர்ச்சை வெடித்து சலசலப்பானது.    

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ரஜினிகாந்த் பேசும்போது, “கடந்த கிறிஸ்துமஸ் அன்று நான் ஒரு வாழ்த்தினை எல்லாருக்கும் அனுப்பி வைத்தேன். அப்போது என் வகுப்புத் தோழி என்னைத் தொடர்புகொண்டு, ‘என்ன ரஜினி… உங்கள் தலைவரை வாழும் பெரியார் என்று சொல்றீங்க, வாழும் அம்பேத்கர்னு சொல்றீங்க, வாழும் புத்தர்னு சொல்றீங்க. இப்ப என்ன வாழும் கிறிஸ்துனு சொல்லியிருக்கீங்களே?’ என்று கேட்டார். 

அவருக்கு நான் பதில் சொன்னேன்… கிறிஸ்துவின் போராட்டம் யூத மதத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து அமைந்தது. பேச முடியாமல் கிடந்த மக்களுக்காக பேசியது கிறிஸ்துவின் போராட்டம். அதைத்தான் ஊமைகளை பேச வைத்தார் கிறிஸ்து என்று சொன்னார்கள். அதைப் போல முடங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்பி யூத ஆதிக்கத்துக்கு எதிராக, யூத அரச ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அங்கே யூத மதம் என்றால் இங்கே இந்து மதம். இங்கே வர்ணாசிரம தர்ம. அங்கே அரச ஆதிக்கம்.  அங்கே மக்கள் போராடாமல் கிடந்தார்கள். இங்கேயும் மக்கள் போராடாமல் கிடக்கிறார்கள். அங்கே இயேசு போராடியது போலத்தான் இங்கே திருமாவளவன் போராடுகிறார். ஆகவேதான் அவரை வாழும் கிறிஸ்து என்று குறிப்பிட்டேன்” என்று ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் அமர்ந்திருந்த நீதிபதி அக்பர் அலி,

‘அடுத்து  முகமது நபி பிறந்தநாள்  வருகிறது’ என்று ரஜினிகாந்தை பார்த்து கூறினார்.

பேச்சைத் தொடர்ந்த ரஜினிகாந்த்,  “அடுத்து முகமது நபி பிறந்த நாள் வருகிறது என்று நீதியரசர் அக்பர் அலி சொல்கிறார். எங்கள் தலைவர் வாழும் நபி என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது. சமத்துவத்தை போதிப்பது இஸ்லாம். ஆகவே சமத்துவத்துக்காக போராடுகிற எங்கள் தலைவரையும் வாழும் நபிகள் என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்து இல்லை” என்று பேசினார்.

இது மேடையில் இருந்த தமுமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி மட்டுமல்ல கூட்டத்தில் இருந்த இஸ்லாமியர்களுக்கும் வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

பிறகு பேசிய இயக்குனர் கரு பழனியப்பன், “இங்கே ரஜினிகாந்த் பேசினார். வாழும் கிறிஸ்து, வாழும் நபிகள்னு. இப்ப அவரு அதுக்கு வேற விளக்கம் சொல்லணும். கண்டிப்பாக அண்ணன் கருத்து அதுவாக இருக்காது என்று அவரை அறிந்த நான் நினைக்கிறேன். அண்ணன் ஏன் கிறிஸ்துவாவும், நபிகளாவும் இருக்கணும்? கிறிஸ்து கிறிஸ்துவா இருந்துட்டுப் போறாரு, நபிகள் நபிகளா இருந்துட்டுப் போறாரு. திருமாவளவன் திருமாவளவனா இருந்துட்டுப் போறாரு.  ஏன் அவரை இறைத் தூதராக ஆக்கப் பாக்குறீங்க? இங்க மனுசப் பயலுக படுற பாட்டை சொல்றதுக்குதான் ஆளில்லை.  அதை அவர் செய்யட்டும். நாம் சொல்லும் புகழ் வார்த்தைகள் நாம் அன்புகொண்ட தலைவனுக்கு துன்பம் தரும்னா  அந்த புகழால் என்ன பயன்? அதை செய்யக் கூடாது” என்று பேசினார்.

இவ்விழாவில் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி,  “இங்கே நேரமில்லை. கடைசியாக பேச வைத்தார்கள். வழக்கறிஞர் ரஜினிகாந்த் மட்டும் அவ்வாறு பேசியிருக்காவிட்டால் நான் பேசுகின்ற வாய்ப்பை கூட வணங்கித் தவிர்த்துவிட்டுப் போயிருப்பேன்.  வாழும் ஏசு என்றும், வாழும் நபிகள் என்றும்  என் நண்பர் ரஜினி பாராட்டினார் அல்லவா… ரஜினியே உங்கள் வாழ்த்தால் திருமாவளவன் மிகவும் வருந்தினார்.  கரு பழனியப்பன் சொன்னதை நான் மீண்டும் மறு பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

நிறைவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்,  “கற்றறிந்தோர்… சட்டம் கற்றறிந்தோர் கூடியிருக்கிற அவை இந்த அவை.  நீங்கள் தந்த ஊக்கத்துக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.  தம்பி ரஜினிகாந்த் என் மீது கொண்ட நன்மதிப்பின் அடிப்படையிலும், பற்றுதலின் அடிப்படையிலும் ஏசு கிறிஸ்துவோடும் நபிகள் நாயகத்தோடும் ஒப்பிட்டுப் பேசியதை  நாம் ஏற்கவில்லை, அதில் மகிழ்ச்சி அடையவில்லை.  கரு. பழனியப்பன், ஹாஜா கனி ஆகியோர் உரையாற்றியபோது அத்தகைய ஒப்பீடு தேவையில்லை என்று சொன்னார்கள். அது நூறு விழுக்காடு சரி. அம்பேத்கரோடு கூட ஒப்பிடக் கூடாது என்று நான் பலமுறை பேசியிருக்கிறேன். நேற்று கூட எனக்கு தென்னாட்டு அண்ணல் என்று ஒரு விருது வழங்கினார்கள். அதை என் மனம் ஏற்கவில்லை.

அவர்களை இந்த உலகம், மானுடம் வைத்திருக்கும் இடம் வேறு. நாம் அவர்களை பின்பற்றுகிறோம். அவ்வளவுதான். அவர்கள் சொன்னதை எடுத்துச் சொல்லுகிறோம். புதிதாக எதையும் சொல்லவில்லை. சனாதனத்தை நாம் எதிர்க்கிறோம் என்றால் புதிதாக எதிர்க்கவில்லை. புத்தர் எதிர்த்தார்.  அவரின் தொடர்ச்சியாக நாம் எதிர்க்கிறோம்.  எப்போதும் யாரோடும் நம்மை ஒப்பீடு செய்வதில் நாம் ஆர்வம் காட்டவில்லை. என்னிடத்தில் ரஜினிகாந்த் வந்து அண்ணா இதற்கு உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் வருந்துகிறேன் என்று சொன்னார். 

தலைவருக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளது

மக்களை நேசியுங்கள், தலைமைப் பண்பு வளரும் என்பதை மட்டும்தான் நான் தொண்டர்களுக்கு சொல்வேன். என்னைக் கூட பின்பற்றச் சொன்னதில்லை. நாட்டிலே சோற்றுப் பஞ்சமா தலைமைப் பஞ்சமா என்றால் தலைமைப் பஞ்சம்தான், தலைவர் பஞ்சம்தான் இருக்கிறது.   உண்மையில் மக்களை  நேசிக்கிற,  வழிநடத்துகிற,  தொண்டு செய்கிற, மக்களை  மீட்கிற,  மக்களை அரவணைக்கிற தலைமை இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. 

தலை விதி என்றால் தலையாய விதி, தலையாய விதி என்றால் அரசமைப்பு சட்டம். அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்துக்கு முந்திய இந்தியா வேறு, அதன் பிறகான இந்தியா வேறு. புதிய இந்தியாவை கட்டமைப்பான கொள்கை அறிக்கைதான் அம்பேத்கர் எழுதியது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைதான் அதற்கான அடிப்படை. இந்த அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததால்   சாதிய இறுக்கம், வர்ணாசிரம பாகுபாட்டின் இறுக்கத்தில் தளர்வை ஏற்படுத்தியது.  அம்பேத்கர் மூலம் சமூக நீதிக்கான வேர் மெல்ல மெல்ல இறங்கியிருக்கிறது.  இன்னும் சாதிப் பாகுபாடுகள், ஆதிக்கப் போக்குகள் அப்படியே இருக்கிறது.  மனு ஸ்மிருதிக்கு எதிராக அம்பேத்கர் எழுதியது அம்பேத்கர் ஸ்மிருதி.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வாசலில் இருக்கும் மனுவின் சிலை அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு உயர் நீதிமன்ற வாசலிலும் உச்ச நீதிமன்றத்தின் வாசலிலும் அம்பேத்கர் சிலையை நிறுவ வேண்டும். நானும் ரவிக்குமாரும் உச்ச நீதிமன்ற வாசலில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். அம்பேத்கர் சாதிய தலைவர் இல்லை., அவர் தேசிய தலைவர். அவரது சிலைகளை, படங்களை நீதிமன்றங்களில் வைக்க வேண்டும்” என்று நிறைவு செய்தார் திருமாவளவன்.

வேந்தன்

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?: நிதிஷ் குமார்

வாரிசு – துணிவு : ரிலீசுக்கு முந்தைய வியாபார நிலவரம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *