வர இருக்கிற மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக கூட்டணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு சாதகமான தொகுதிகள் என்று கருதும் தொகுதிகளில்… தங்களுடைய பூத் கமிட்டிகள் விவரங்களை வழங்குமாறு ஏற்கனவே திமுக கேட்டிருந்தது.
இந்த நிலையில்தான் கடந்த 25 ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனும், 27 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவாலயம் சென்றனர்.
முஸ்லிம் லீக் தலைவரான காதர் மொய்தீன், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆகியோர் சென்று 25 ஆம் தேதி அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் ஆகியோரை சந்தித்தனர். அப்போது முஸ்லிம் லீக் தற்போது எம்.பி.யாக இருக்கும் ராமநாதபுரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று துரைமுருகன் கேட்டுக் கொண்டதாக அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தான் தற்போது வேலூர் எம்பியாக இருக்கிறார். அவர் மீண்டும் வேலூரில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது.
இங்கே இப்படி என்றால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை 27 ஆம் தேதி அறிவாலயத்தில் சந்தித்தார். அதன் பின் அவர், ‘திமுக கூட்டணி தெளிவான நீரோடையாக இருக்கிறது’ என்று கூறினார். மதிமுக தற்போது ஒரே ஒரு மக்களவைத் தொகுதியைதான் பெற்றிருக்கிறது. வைகோ ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்த நிலையில் மதிமுகவுக்கான தொகுதிகள் பற்றிய ஆரம்பகட்ட பேச்சு ஸ்டாலினுக்கும் வைகோவுக்கும் இடையே நடந்திருப்பதாக அறிவாலயத்தில் கூறுகிறார்கள்.
இந்த வரிசையில் சிறு சிறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்த பின் திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்.
இந்த நிலையில்தான் நேற்று (செப்டம்பர் 28) சென்னையில் தமிழ்நாடு காங்கிரசின் மூத்த தலைவர்கள் தங்களுக்குள் கூடிப் பேசியிருக்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் வரும் வரும் என்று மாதக் கணக்கில் செய்திகள் வந்துகொண்டிருக்கிறதே தவிர, கே.எஸ். அழகிரியே தலைவராக இப்போது வரை நீடிக்கிறார்.
அடுத்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரசின் மாநிலத் தலைவரை சந்திக்க இருக்கிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ். அழகிரி அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்துவிட்டால் அதன் பின் தேர்தல் முடியும் வரை அழகிரியே நீடிக்கட்டும் என்று மேலிடம் முடிவுக்கு வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சென்னையில் நேற்று ப.சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் கூடிப் பேசியிக்கிறார்கள்.
இந்த ஆலோசனையில் நடந்தது பற்றி அந்த மூன்று தலைவர்களின் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“கே.எஸ். அழகிரி வரும் மக்களவைத் தேர்தலின்போது மாநிலத் தலைவராக நீடிக்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாடு காங்கிரஸின் பிற தலைவர்களின் நோக்கம். ஏற்கனவே அவர்கள் அழகிரியோடு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திமுக தலைவரோடு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அழகிரி மாநில தலைவராக செல்லக்கூடாது என்பதுதான் இவர்களின் திட்டம்.
’கார்கேவிடம் அழகிரி பற்றி பல முறை முறையிட்டாகிவிட்டது. ஆனால், கார்கே தன்னிடம் ராகுல் காந்தி இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ராகுல் சொன்னால்தான் மாற்ற முடியும் என்று பதிலளித்திருக்கிறார். அழகிரிக்கு டெல்லியில் பலமான பாதுகாப்பு கொடுப்பது பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால்தான். மேலும் அழகிரி தன்னைத் தலைவர் பதவியில் இருந்து ஒருவேளை மாற்றினால் மாநிலத் தலைவராக மாணிக் தாகூரை நியமிக்க வேண்டும் என்றும் டெல்லியிடம் சொல்லியிருக்கிறார்’ என்று ஆலோசித்திருக்கிறார்கள். ஆலோசனை முடிவில், ‘நானும் இது தொடர்பாக டெல்லி தலைமையிடம் பேசுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் ப.சிதம்பரம்” என்கிறார்கள்.
திமுகவுடன் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆயத்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு மாநிலத் தலைவராக அழகிரி செல்லக் கூடாது என்பதுதான் மூத்த தலைவர்களின் நிலைப்பாடு. அதற்கான கடைசி கட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
–வேந்தன்
விஷாலின் ஊழல் புகார் : மத்திய அரசு நடவடிக்கை!
அக்டோபர் 13 வரை செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு!