மேதகு ஆளுனருக்கோர் மித்திரக் கடிதம் !

Published On:

| By Minnambalam

ஸ்ரீராம் சர்மா 

மரியாதைக்குரிய மேதகு தமிழ்நாடு ஆளுனர் அவர்களுக்கு,

பணிவார்ந்த வணக்கம் !

எதிர்மறைச் சிந்தனை கிஞ்சித்தும் இல்லாது முற்றிலும் நேர்மறைச் சிந்தனையோடு இதனைத் தங்களுக்கு எழுதுகிறேன். தாங்களும் அவ்வாறே கொள்ள வேண்டுமாய் விழைகிறேன்.

1959 ல் டெல்லி மற்றும் தமிழ்நாடு அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டு – ஒட்டுமொத்த உலகத் தமிழர்களாலும் கொண்டாடப்பட்டு – 1990 ல் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வெள்ளுடை தரித்த பொதுத் தோற்றமாம் திருவள்ளுவர் திருவுருவத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு – காவி பூசிய திருவள்ளுவர் திருவுருவம் ஒன்றினை தாங்கள் வழிமொழிந்த பொருந்தாச் செய்தி ஒன்றினைக் கண்டு அதிர்ச்சியடைந்த உலகார்ந்த தமிழர்களோடு அடியேனும் இணைந்து வருந்தினேன்.

காரணங்கள் பல உண்டு. விளங்கச் சொல்வேன் செவி மடுப்பீரே !

*******

ஒன்றுபட்டதாகும் நமது இந்தியா! இதில் ஒவ்வொரு ப்ரதேசத்துக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு என்றும் அதை நாம் மதித்தாக வேண்டும் என்றும் நமது பாரதப் பிரதமர் உணர்ந்து சொல்வது உண்மையென்றால்…

ஆளுநராகிய தாங்களும் பிரதமரைப் பின்பற்றுபவராய் நின்று தமிழ்நாட்டின் கற்றறிந்த அறிஞர் பெருமக்களாலும், அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்டு – காலம் காலமாக போற்றப்பட்டு வரும் திருவள்ளுவர் திருவுருவத்தைத்தானே வழிமொழிந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அது பொருந்திப் போயிருக்கும்.

ஆனால், தங்களது அந்தச் செய்கையினால் தமிழர்களின் மனதில் மிஞ்சப் போவதென்ன ?

‘சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இப்படி மாற்றி மாற்றி குழப்புகிறார்களே… இவர்களை எப்படி நம்புவது?’ எனும் ஆற்றாமையும் அவலச் சுவையும் மட்டுமல்லவா விஞ்சியிருக்கப் போகின்றது !?

*******

தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களோ “பேருந்துகள் தோறும் திருவள்ளுவர் திருவுருவத்தை பொருத்தி வைத்துப் போற்றுங்கள்” எனப் பெருமிதத்தோடு ஆணையிடுகிறார்.

பாரதப் பிரதமர் மோடி அவர்களோ உலகரங்கில் சென்று, “எங்கள் திருவள்ளுவர் 1330 திருக்குறள்களை ஒட்டுமொத்த உலகுக்காகவும்தான் உரைத்திருக்கிறார்” எனப் பெருமைபடப் பிரகடனம் செய்கிறார்.

ஆகவேதான் உலகப் பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு உலக அறிஞர்களுக்கான பொது வண்ணமான வெண்ணிற உடையை அணிவித்திருக்கிறார்கள்.

அப்படியாக, உன்னத நோக்கோடு நிறுவப்பட்ட ஒன்றினை ஒரு சமயத்துக்குள் மட்டும் குறுக்கி வைப்பது என்பது நமது நாட்டின் பரந்த நோக்கத்துக்கு அழகு சேர்த்து விடுமா ?

*******

மேதகு ஆளுநர் அவர்களே, மயிலாப்பூரில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் கோயிலுக்கு சென்று வழிபட்டீர்களே. அங்கே திருவள்ளுவரின் சிலைக்கு காவி உடையா அணிவிக்கப்பட்டிருந்தது? வெள்ளுடை அல்லவா அணிவிக்கப்பட்டிருந்தது !?

ஆங்கே, கையெடுத்துக் கும்பிட்டபடி நின்றிருந்த தாங்களும், தீப ஆராதனை காட்டிய அர்ச்சகரும் கூட வெள்ளுடையை அல்லவா அணிந்திருந்தீர்கள் ?

குறித்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் காவி என்பது துறவின் அடையாளமாகும். திருவள்ளுவரோ வாசுகி அம்மையாரை திருமணம் செய்தவர். பழுதின்றி இல்லறத்தில் தோய்ந்திருந்தவர்.

இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்ட காமத்துப் பால் அதனை நுணுகி  நுணுகி ஆய்ந்தெழுதி வைத்தவர்.

காமத்துப்பால் எழுதியவரை காவிக்குள் வைத்துப் பார்ப்பதென்பது தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்புடையதன்று. போலித்துறவிகளை அடியோடு வெறுக்கும் மண் இந்தத் தமிழ்த்திரு மண்.

சொல்லுங்கள், காவி அணிந்த படி காமத்துப்பால் எழுதினார் என்னும் இழுக்கை ஏன் வலிந்து வலிந்து திருவள்ளுவர் மேல் தொடர்ந்து திணிக்க முயல வேண்டும்? அப்படித் தொடர்ந்து செய்வீர்களேயானால் அது தமிழர்களின் மனதில் அச்சத்தை உண்டாக்கி விடாதா?

1940 களில் எழுந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவுபடுத்தி விடாதா ? அன்று எரியத் துவங்கிய அந்தப் போராட்டம் இன்னமும் அணைந்த பாடில்லையே ? அடுத்தது ஒன்றா ?

ஏன், எதற்காக தொடர்கிறது எங்கள் மீதான இந்தக் கலாச்சாரப் போர் என்னும் பதட்டத்தை தமிழர்களிடையே மீண்டும் ஏற்படுத்த வேண்டுமா ? இது போன்ற தேவையற்ற காரியங்களை தவிர்ப்பது பிரிவினை அகற்றிய ஒற்றுமைக்கும் பிழையற்ற நாட்டுப் பற்றுக்கும் வழிகோலும் அல்லவா ?  தங்களைப் போன்ற அதிகாரம் படைத்தவர்கள் அதனை முன் நின்று செலுத்த வேண்டாமா ?

வடநாட்டில் அறத்தின் அடையாளம் காவியாக இருக்கலாம். ஆயின், தமிழ்நாட்டில் அறத்தின் அடையாளமாக கொள்ளப்படுவது வெண்மை மட்டுமே. இதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் உறுதிப்படுத்துகிறார்.

நமது மூதாட்டி ஔவையார் கூட,

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு 

சுட்டாலும் வெண்மை தரும். 

என்று வெண்மை நிறமுடைய சங்கைத் தானே தேர்ந்தெடுக்கிறார்.

*******

A Friendly letter to Tamilnadu Governor

கடந்த ஆண்டு 16.1.2023 அன்று, திருவள்ளுவர் திருநாளில், அங்கீகரிக்கப்பட்ட – வெள்ளுடை தரித்த திருவள்ளுவர் திருவுருவத்தைத் தானே நின்று வணங்கினீர்கள்? இன்று ஏனிந்த மாற்றம்? இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று நிற்பதென்பது தங்களைப்போல் கல்வியிற் சிறந்த ஆளுநருக்கு அழகாகுமா ?

இந்திய சட்டத்தை அதன் மாண்பை ஒரு கவர்னரே மீறலாமா ? ஆம், மத்திய மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திருவுருவத்தை – இந்திய காப்பிரைட் சட்டம் (1957) அதற்குள் அடங்கும் ஒரு கலைப்படைப்பை அதன் மேன்மையை, உரிமையை – மாநிலத்தின் முதல் குடிமகன் எனப்படும் ஆளுனரே மீறுவது எனில், தமிழக சட்டமன்றத்தை வழி நடத்தும் தங்கள் தகுதிப்பாட்டிற்கு இழுக்கு நேர்ந்து விடாதா?

தகுதி எனவொன்று நன்றே பகுதியால் 

பாற்பட்டு ஒழுகப் பெறின். 

தயவுசெய்து மேற்கண்டக் குறளின் உண்மைப் பொருளை திரித்துச் சொல்லாத நல்லோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்.

*******

நெற்றியில் திருநீர் வைப்பது மட்டுமல்ல, திரு நாமம் சாற்றுவதும், சந்தனம் பூசுவதும், குங்குமம் தீற்றிக் கொள்வதுமாக எண்ணற்ற சமயச் சின்னங்கள் இந்த மண்ணில் உள்ளன. அதிலொன்றான திருநீரில் மட்டும் திருவள்ளுவரை சுருக்கி வைப்பது ஏன் ? இந்த ஓரவஞ்சனையை எப்படி ஏற்றுக் கொள்வது எனும் நியாயம் சுமந்த குரலொன்றை நாளை யாரேனும் எழுப்பினால் அவர்களுக்கு என்ன பதில் சொல்லி தேற்றி வைப்பீர்கள் ?

திருவள்ளுவரின் மேன்மைக்காக செய்ய வேண்டிய நன்மைகள் எத்துனையோ இங்கிருக்க, போகிற போக்கில் நிறம் மாற்றும் இதுபோன்ற பொருந்தாச் செயலால் தாங்கள் காணப் போகும் நிம்மதிதான் என்ன ?

பரந்து விரிந்திருக்கும் ராஜ்பவனில் தினமும் திருக்குறள் வகுப்பு எடுக்கப்படும் என்று அறிவிப்பீர்களேயானால் அல்லது ஆங்கிருக்கும் அரங்கம் ஒன்றினுக்கு “திருவள்ளுவர் பேரரங்கம்” எனப் பெயர் சூட்டி மகிழப் போகிறோம் என்பீர்களேயானால் அல்லது ராஜ்பவனின் சுற்றுச் சுவரெங்கிலும் 1330 திருக்குறள்களையும் செதுக்கி வைக்கப் போகிறோம் என அறிவிப்பீர்களேயானால் அச்செயல்கள் யாவும் வாழ்த்துக்குரியனவாய் விளங்குமே என்பது எளியேனின் ஆவலாதி ! ஈடேற்றி வைத்தால் நாடு வாழ்த்தும். நிற்க.

******

A Friendly letter to Tamilnadu Governor

“இதற்கு முன்பு திருவள்ளுவருக்கு என்று நிலையானதொரு உருவம் இருந்ததில்லை. அவரவர் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் பட்டை போட்டும், உருத்திராட்ச கொட்டை போட்டும், மொட்டை போட்டும், கட்டையாகவும், குட்டையாகவும் ஒளியற்ற கண்களோடும் மனம் போன போக்கில் வரைந்து வந்தார்கள். அவற்றிலெல்லாம் திருக்குறள் என்னும் பொதுமறையைப் படைத்தவருக்கான மேன்மையைக் காண முடியவில்லை.

அதற்கொரு தீர்வை, திருவள்ளுவருக்கான திருவுருவத்தை நமது வேணுகோபால் சர்மா அவர்கள் தனது பல்லாண்டுகால முயற்சியினால் தனது கைப்பொருளை இழந்து நமக்கு வடித்துத் தந்திருக்கிறார்கள். அவரை வாழ்த்துவோம்”

இவ்வாறு வாழ்த்திப் பேசியவர் கற்கண்டு ஆசிரியர் தமிழ் வாணன் அவர்கள். ஆண்டு: 1959. நிகழ்வு: திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா.

(மேற்கண்ட தமிழ்வாணன் அவர்களின் உரையும்… கொடுமுடியாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1959 ல் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இல்லத்தில்  திருவள்ளுவர் திருவுருவத்தைக் கண்டு வாழ்த்திப் பேசிய அந்த வரலாற்று சிறப்புமிக்க உரையும் அன்று ஸ்பூல் டேப்பில் பதிவு செய்யப்பட்டு… இன்று புகழுடைய ரோசா முத்தையா நூலகத்தாரின் பெருமுயற்சியால் டிஜிட்டைஸ் செய்யப்பட்டுள்ளது.  தாங்கள் கேட்க விரும்பினால் கொண்டு தரத் தயார்)

*********

திராவிட ஆட்சியில்தான் திருவள்ளுவர் மாற்றி வைக்கப்பட்டார் என வரலாறு தெரியாமல் அபாண்டமாக பழி சொல்பவர்களே சற்று கூர்ந்து கவனியுங்கள்.

1959 ல் கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களால் திருவள்ளுவர் திருவுருவம் கண்டடையப்பட்டு, 1964 ல் சட்டமன்றத்தில் அன்றைய துணை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இருந்தது காங்கிரஸ் ஆட்சி. முதலமைச்சராக இருந்தவர் பெரியவர் பக்தவத்சலனார் ஆவார்.

அதன்பின், 1967 ல் ஆட்சிக்கு வந்த திமுகவும் – அதன் பெருந்தலைவர்களான அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் தங்களது அரசாணையினால் திருவள்ளுவர் திருவுருவத்தை நாடெங்கும் – உலகெங்கும் கொண்டு சேர்க்க வைத்தார்கள்.

அந்தத் தமிழ்ப் பெரும்பணியினை தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் செவ்வனே தொடர்கிறார். இதுதான் உண்மையான சத்தியமான வரலாறு.

தங்கள் மாநிலத்தின் பெருமையை தரணிக்கு எடுத்தோதுவது மாநிலத்தின் தனியுரிமை அல்லவா? அதைக் கண்டு மாச்சரியம் கொள்வது தகுமா? அழுக்காறு கொண்டவர்கள் அவனியில் வென்றதாக வரலாறு உண்டா?

*******

தமிழ்நாட்டின் அறிவுப் புரவலர்களான பெரியவர் பக்தவத்சலனார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர், கிருபானந்த வாரியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், கி.ஆ.பெ.விசுவநாதம், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன், குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி, கா.சா. சுப்பாராவ், சாண்டில்யன், கல்கி,  ஈ.வெ.கி. சம்பத், ம.பொ.சி, தோழர் ஜீவா, கக்கன், பேராசிரியர் கா. அன்பழகனார், நாவலர், பன்மொழிப்புலவர் அலமேலு அப்பாதுரையார், ஐ.நா. சபை அதிகாரி மோனிகா ஃபெல்டன் எனப் பல்லோராலும் கண்டு ஆமோதிக்கப்பட்டு, போற்றப்பட்டு, வழிமொழியப் பட்ட திருவள்ளுவரை…

மத்திய – மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டு பல கோடிக்கணக்கான உலகத் தமிழர்களின் மனங்களில் சென்று ஆழத் தங்கி விட்டதோர் அப்பழுக்கற்ற திருவுருவத்தை…

வரலாறு தெரியாமல் போகிற போக்கில் காயப்படுத்திப் பார்ப்பதால் யாருக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது ? எந்தவிதத்தில் மேன்மை சேர்ந்து விடப் போகிறது ?

*******

ஐயா, தமிழின் – தமிழ் மண்ணின் ஆகப் பெரும் சொத்தாக, தமிழர்களின் மனதில் இறை நிலைக்கு அருகில் வைத்து வணங்கப்படும் ஈடு இணையற்ற பீடுடைய செம்மலாம் திருவள்ளுவப் பெருமானை அவர்தம் திருவுருவத்தை மனம் போன போக்கில் இப்படி இழுத்தடிப்பது தமிழர்களின் உணர்வுகளை ஏளனமாக உரசிப் பார்ப்பதற்கு சமமாகும்.

இனவழிப்பினாலும் – புறக்கணிப்பினாலும் குமைந்து கிடக்கும் தமிழர்களின் மனதில் இதுபோன்ற இடிகளைப் பாய்ச்சுவதால் இன்னுமின்னும் இந்த மண்ணுக்கு அன்னியமாகித்தான் போவீர்களேயல்லாது எந்த நற்பயனும் விளைந்து விடப் போவதில்லை.

உணர்வுடையதொரு தமிழனாகவும் – சமூகம் சார்ந்து இயங்குமோர் தமிழ்ப் படைப்பாளனாகவும்  – திருவள்ளுவருக்கு திருவுருவம் கண்ட ஓவியப் பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் மகன் என்னும் வகையிலும் மெத்தப் பணிந்து வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தயவுசெய்து, திருவள்ளுவரை தெய்வமாகத் தொழும் தமிழறிஞர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்தாதீர்கள். காரணமின்றித் தமிழர்களை காயப்படுத்தாதீர்கள். கண்ணியத்தோடு வாழ விரும்பும் தமிழர்கள் எம்மை கலகக்காரர்களாக்கி விடாதீர்கள்.

இனியேனும், பன்முகப்பட்டதாம் நமது பாரதத்தில் எமது தமிழ் மண்ணுக்கே உரிய கலாச்சாரத்தோடு ஒன்றியவராய் திருவள்ளுவரை வாழ விடுங்கள் !

நன்றி !

தங்களன்புள்ள

வே.ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர் – இயக்குனர்

 

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராயன் செகண்ட் சிங்கிள்… “வாட்டர் பாக்கெட்” கானா காதல்!

அந்தப் பக்கம் போகாதீங்க: அப்டேட் குமாரு

“திருக்குறள் என்பது தர்ம சாஸ்திரம்”: ஆளுநர் ரவி

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு: மேத்தீவ் ஹைடன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment