A day of victory over fascism

பாசிசம் வீழ்த்தப்பட்ட வெற்றி நாள்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை 

ஒவ்வோர் ஆண்டும் மே 9ஆம் நாள் இரண்டாம் உலகப் போரில் பாசிசம் முழு வீழ்ச்சி அடைந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பாசிச இத்தாலி, நாஜி ஜெர்மனி, பாசிச முடி மன்னராட்சி ஜப்பான் ஆகிய அச்சு நாடுகளுக்கு எதிராகப் போரிட்ட  சோவியத் யூனியன், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளிடம் 1945ஆம் ஆண்டு ஏப்ரலில் இத்தாலியும் ஜெர்மனியும் சரணடைந்தன.

பாசிச ஜப்பான் தோல்வியை நெருங்கிக்கொண்டிருக்கையில் தனது அணு ஆயுத வலிமையைக் காட்டும் ஒரே நோக்கத்துடன் ராணுவத் தளங்கள் ஏதுமில்லாமல் இருந்த ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் அணுகுண்டுகளை வீசி, பல லட்சம் மக்களைக் கொன்றழித்தது. அதன் பிறகு, ஜப்பான் அமெரிக்காவிடம் 1945 செப்டம்பர் 2ஆம் தேதி சரணடைந்தது.

புதினின் தலைமையில் வரலாற்று முரண் 

மே 8ஆம் நாள் நள்ளிரவை ஐரோப்பிய நாடுகள் தங்கள் வெற்றி நாளாக அறிவித்தன. ஆனால், சோவியத் யூனியனின் கால நேரத்தின்படி அந்த நாடும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மே 9ஆம் நாளை வெற்றி நாளாகக் கொண்டாடி வருகின்றன. எந்த சோவியத் யூனியன் பாசிசத்தைத் தோற்கடித்ததோ, அதைச் சிதறுண்டு செய்வதில் பெரும் பங்கு வகித்து ரஷ்யக் குடியரசில் பாசிச ஆட்சியை நிறுவியுள்ள புதினின் தலைமையும் இதைக் கொண்டாடி வருவது வரலாற்று முரண்.

அதேபோல அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற முதலாளிய நாடுகளும் பாசிசத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கின்றன. நாசிசத்துக்கு பலியான லட்சக்கணக்கான மக்களின் பெயரால் ஓர் ஆட்சியை நிறுவியுள்ள இஸ்ரேல், பாசிசத்துக்குப் பலியான ஹங்கேரி போன்ற நாடுகளில் ஏற்கெனவே பாசிச ஆட்சி நிறுவப்பட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களை இன ஒழிப்பு செய்து வரும் இஸ்ரேலிய இராணுவத்துக்கு வேண்டிய இராணுவத் தளவாடங்களையும் கருவிகளையும் தயாரிக்கும் பல நிறுவனங்கள் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் பாசிச ஆட்சிகளுக்கான முன்னோடியாக இருந்த முசோலினியின் முன்னுதாரணத்தைப் பின்பற்றியே ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் பாசிசம் ஆட்சிக்கு வந்தது. நகரங்களிலும் கிராமங்களிலும் அரசாங்க உதவியுடன் ஆயுதமேந்திய குண்டர் படைகளை உருவாக்குவது, அவர்கள் மூலம் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள் ஆகியோரை ஒடுக்குவது, தேச விரோதிகள் என்று அடையாளப்படுத்தி சிறுபான்மை மக்களைப் பூண்டோடு ஒழிப்பது, பத்திரிகை சுதந்திரத்தை ஒழிப்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தை நிறுவுவது போன்ற நடவடிக்கைகள் பிற பாசிச நாடுகளாலும் பின்பற்றப்பட்டன. சங் பரிவாரத்தின் கூட்டாளியான இந்து மகா சபைத் தலைவர்  டாக்டர் மூஞ்சே இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்துப் பேசிய பிறகு, பாசிச இத்தாலியின் அரசியல் சமூக உத்திகளை இந்து மகாசபையும் அதன் கூட்டாளியான ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் பின்பற்ற முடிவு செய்தன.

20ஆம் நூற்றாண்டில் முதல்  பாசிச ஆட்சியை நிறுவிய முசோலினி, தன் மனைவியுடன் ஸ்விட்சர்லாந்துக்கு தப்பியோட முயன்றபோது கம்யூனிஸ்ட் ஆதரவு, பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ்டுகளிடம் பிடிபட்டனர். அவர்கள் இருவரையும் பிடித்த பாசிச எதிர்ப்பு வீரர்கள் இருவரது உடல்களையும் ஒரு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டனர். சோவியத் செஞ்சேனையும் பிற நேச நாடுகளின் படைகளும் ஜெர்மானியத் தலைநகர் பெர்லினுக்கு நுழைவதற்கு சில நாட்களுக்கு  முன்பு ஹிட்லரும் அவர் மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். பாசிச எதிர்ப்பு முன்னணி ஒன்றை வெற்றிகரமாகக் கட்டியமைத்த இத்தாலியில் இன்று மீண்டும் பாசிச ஆட்சி நிறுவப்பட்டுள்ளது.

இன்னுயிரை இழந்த இந்தியர்கள்… 

மே 9ஆம் நாளை இரண்டாம் உலகப் போரில் பாசிசம் முறியடிக்கப்பட்ட நாளாக நாம் கொண்டாடும்போது பாசிசத்தை முறியடிப்பதற்காகக் கோடிக்கணக்கான  மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்காவிலுள்ள நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இரண்டாம் உலகப் போர் பற்றிய அருங்காட்சியகம் ஒன்றுள்ளது.

அதிலுள்ள தகவல்களின்படி 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப் போரில் பாசிசத்துக்கு எதிராகப் போராடிய 30 நாடுகளைச் சேர்ந்த 100 மில்லியன் மக்கள் பங்கேற்றனர்; 50 முதல் 85 மில்லியன் வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர்; அவர்களில் பெரும்பாலானோர் சோவியத் யூனியனையும் சீனாவையும் சேர்ந்த சாதாரணக் குடிமக்கள்;  மேற்கு , கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள், ரோமானியர்கள் போன்ற சிறுபான்மையினர் லட்சக்கணக்கில் இனக்கொலை செய்யப்பட்டனர்; குண்டு வீச்சுகள், பசி, பட்டினி, நோய்கள் ஆகியவற்றால் பல  லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்ட படை வீரர்கள், குடிமக்கள் ஆகியோரில் மிகப் பெரும்பான்மையினர் சோவியத் யூனியனையும் சீனாவையும் சேர்ந்தவர்கள்; இந்திய மக்களில் 2.5 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர் (இவர்கள் பிரிட்டிஷ்  இந்திய இராணுவத்தில் இருந்த இந்தியப் படைவீரர்கள், பிரிட்டிஷார் உருவாக்கிய கொடிய பஞ்சத்தில் (பெரிதும் வங்காளத்தில்) உயிரிழந்த குடிமக்கள் ஆகியோராவர்).

1939இல் உலகப் போர் தொடங்கினாலும் சோவியத் யூனியன், 1941இல்தான் அந்தப் போருக்குள் இழுக்கப்பட்டது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. மேற்கு ஐரோப்பிய முதலாளிய நாடுகள், சோசலிச நாடான சோவியத் யூனியனின் அழிவுக்காகக் காத்திருந்தன.  அவை சோவியத் யூனியனை ஒரு நேசச் சக்தியாகச் சேர்த்துக் கொள்ளவில்லை. எனவே, சோவியத் யூனியன் நாஜி ஜெர்மனியுடன் 1939இல் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன்படி இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று இராணுவத் தலையீடு செய்யக்கூடாது. கலாச்சார பரிவர்த்தனையும் செய்து கொள்வதும் அந்த ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாகும்.

எனவே, மேற்கு நாடுகள் மீது தன் இராணுவத் தாக்குதலைத் தொடங்கிய  ஜெர்மனி கிழக்கு முனையில் இன்னொரு இராணுவத் தாக்குதலைத் தொடுக்காது என்று  தொடக்கத்தில் ஸ்டாலின் கருதினார். அவரது உத்தி தற்காப்புப் போராக இருந்தது. அதாவது எதிரிகள் சோவியத் யூனியனுக்கு நுழையும்போது அவர்களை எதிர்கொண்டு தோற்கடிப்பது.

ஆபரேஷன் பார்பரோஷா  

இதுபோன்ற சில தவறான கணக்கீடுகள் சோவியத் தலைமையிடம் இருந்தன. ஆனால், ‘ஆபரேஷன் பார்பரோஷா’ என்ற பெயரில் நாஜிகளின் விமானப் படைகளும் டாங்கிகள் உள்ளிட்ட தரைப்படைகளும் மின்னல் வேகத்தில் சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்தி அதற்கு கடும் சேதம் விளைவித்தபோது சோவியத் ஒன்றிய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசப்பற்றுப் போரில் பங்கேற்குமாறு ஸ்டாலின் அறைகூவல் விடுத்தார்.

ஸ்டாலினின் தலைமையின் கீழ் 1941 டிசம்பரில் சோவியத் செஞ்சேனை, நாஜி படைகளுக்குப் பேரழிவு ஏற்படுத்தும் எதிர்த் தாக்குதலைத் தொடங்கியது. மார்ஷல் ஜுகொவ் உள்ளிட்ட அனுபவம் மிக்க இராணுவத் தளபதிகளை உள்ளடக்கிய கூட்டுத் தலைமை உருவாக்கப்பட்டது. சோவியத் யூனியனால், போரில் இழந்திருந்த மனித, ஆயுத வளங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடிந்தது. அதனுடைய பரந்த நிலப்பரப்பின் வெவ்வேறு பகுதிகளில் ஆயுதங்களும் இராணுவத் தளவாடங்களும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், போரில் உயிரிழந்த தனது போர் வீரர்களுக்குப் பதிலாக லட்சக்கணக்கில் புதிய போர் வீரர்களைப் பயிற்றுவித்து போர் முனைகளுக்குக் கொண்டு வரவோ, ஆயிரக்கணக்கில் டாங்கிகள், போர் விமானங்கள் முதலியவற்றைப் புதிதாக உற்பத்தி செய்து இழப்பீடுகளை ஈடு செய்வதற்கோ தேவையான மனிதவளமோ, வேறு மூலவளங்களோ நாஜி ஜெர்மனியிடம் இருக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சோவியத் படை வீரர்கள் உள்ளிட்ட சோவியத் மக்கள் அனைவருமே – சில துரோகச் சக்திகளைத் தவிர்த்து – நாஜி எதிர்ப்புப் போரில் சோவியத் அரசுக்கு உறுதுணையாக இருந்தனர். சோவியத் யூனியன் நடத்திய போர் ‘மாபெரும் தேசப்பற்றுப் போர்’ என்று அழைக்கப்பட்டதால் சோசலிசத்தை ஏற்றுக்கொள்ளாத… ஆனால் தேசப்பற்று மிக்க சமூகப் பிரிவினரும்கூட தங்களிடமிருந்த அனைத்தையும் இழப்பதற்கு முன்வந்தனர்.

1917ஆம் ஆண்டு நவம்பரில் லெனினின் தலைமையில் நடந்த போல்ஷிவிக் புரட்சி சோவியத் மக்களிடம் ஊட்டியிருந்த சோசலிச உணர்வும் மக்களை அணி திரட்டப் பெரிதும் உதவியது. நாஜிகளுக்கு எதிரான அந்தப் மாபெரும் போரின்போது, லெனின்கிராடைச் சுற்றி வளைத்த நாஜிகள் சோவியத் செஞ்சேனையாலும் தேசப்பற்றுடைய மக்களாலும் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யா மீது படையெடுத்து வந்த நெப்போலியனின் பிரெஞ்சு துருப்புகளை மரணக் குழிகளில் விழவைத்த ரஷ்யாவின் கடுமையான பனிக்காலம் நாஜிகளையும் வதைக்குள்ளாக்கியது. எந்த மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும் என்று நாஜிகள் நினைத்தனரோ அந்த நாஜிகளில் ஆயிரக்கணக்கானோரை கடுங்குளிரும் பசியும் பட்டினியும் பலி கொண்டன.

1941 ஜூன் முதல் ஏறத்தாழ நான்காண்டுகள் தொடர்ந்து நடந்த போரில் சோவியத் மக்கள் செய்த அளப்பரிய தியாகம் வரலாற்றில் முன்னுரையற்றது. போரில் இறந்த சோவியத் குடிமக்களின் எண்ணிக்கை இதுவரை கணக்கிடப்படவில்லை. அது இரண்டு கோடிக்கும் மேல் இருக்கும் என்று ஸ்டீபென் ஜி.ஃ ப்ரிட்ஜ் போன்ற வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது .

நாசிசத்தை முறியடிப்பதற்காகத் தங்கள் இன்னுயிரை இழந்த செஞ்சேனையினரின் எண்ணிக்கை 12 மில்லியன் என்றும், இது இரண்டாம் உலகப் போரில் மடிந்த பிரிட்டிஷ், அமெரிக்கப் போர் வீரர்களின் எண்ணிக்கையை விட முப்பது மடங்கு அதிகம் என்றும் அந்த வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இரண்டாம் உலகப் போரில் நாஜிகளின் முதுகெலும்பை உடைத்து பாசிசத்தைத் தகர்த்தெறிந்தது சோவியத் யூனியன். அதன் செஞ்சேனையும் அதற்கு உறுதுணையாக இருந்த சோவியத் மக்களும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் மட்டுமின்றி உலகெங்கும் பாசிச எதிர்ப்பு இயக்கங்களுக்கு உள் உந்துதல் தந்தன.

சோவியத் யூனியனைத் தகர்த்து, காகஸஸ் மலைத் தொடர்கள் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு வந்து அதைக் கைப்பற்றிய பின், இந்தியா மீது படையெடுத்து வருவது ஜெர்மானிய நாஜிகளின் திட்டம்; கிழக்குப் பகுதியிலிருந்து (சிங்கப்பூர், மலேயா, தாய்லாந்து, பர்மா வழியாக) இந்தியாவுக்குள் நுழைந்து ஜெர்மானிய நாஜிகளுடன் இணைந்து கொள்வது ஜப்பானிய பாசிஸ்ட்டுகளின் திட்டம். ஆனால், சோவியத் யூனியனின் முக்கியத் தொழில் நகரமாக இருந்த ஸ்டாலின்கிராடை (இன்று அதற்கு வோல்கோகிராட் என்று பெயர்) முற்றுகையிட்டிருந்த லட்சக்கணக்கான நாஜிகளை முறியடிப்பதற்கான சண்டையை சோவியத் செஞ்சேனையினரும் சோவியத் வெகுமக்களும் 1942 ஜூலையில் தொடங்கியிருந்தனர்.

A day of victory over fascism

விடுதலை இதழில்… 

நான்கு மாதங்களுக்குப் பிறகு தந்தை பெரியாரின் ‘விடுதலை’ ஏடு எழுதியது:  “சமீபத்தில் ஸ்டாலின்கிராடை எதிரிகள் மிகக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ‘எதிரி தோற்கடிக்கப்பட வேண்டுமானால் அவனை மனமார வெறுக்க வேண்டும், பகைக்க வேண்டுமென்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று தமது நாட்டு மக்களுக்கும் உலகத்துக்கும் எடுத்துரைத்தார் தொழிலாளி மக்களின் ஒப்பற்ற தந்தை ஸ்டாலின். இத்தகைய இரும்பு மனப்பான்மையுடன் கூடிய மக்களா எதிரியை விடுவார்கள். கடந்த வசந்த காலத்தைவிட வரும் வசந்த காலம் ரஷ்யாவுக்கு வெற்றியை அளிக்கக்கூடியதாகவே இருக்கும் என்று நம்பலாம்” (விடுதலை, 24.11.1942).

உண்மையில், அடுத்த வசந்த காலம் வருவதற்கு முன்பே, அதாவது 1943 பிப்ரவரி 3ஆம் தேதி அந்தச் சண்டையை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டு வந்தனர் சோவியத் மக்கள். சோவியத்  செஞ்சேனை வீரர்கள் பெர்லின் நகரிலிருந்த ஜெர்மன் நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது செங்கொடியை ஏற்றினர். அமெரிக்க, பிரிட்டிஷ் வான்படைகள் பெரிதும் குடிமக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த ஜெர்மானியப் பெருநகரங்களை குண்டு வீச்சுகள் மூலம் தரைமட்டமாக்கின. அதன் பிறகு நாஜி ஜெர்மனியும் பாசிச ஜப்பானும் தீட்டியிருந்த மேற்சொன்ன இரு திட்டங்களும் தவிடு பொடியாகின. அவை வெற்றி பெற்றிருக்குமேயானால், இந்தியத் துணைக் கண்டம் எத்தகைய பேரழிவைச் சந்தித்திருக்கும் என்பதை அவரவர் ஊகங்களுக்கு விட்டுவிடலாம். வெளிநாட்டு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை  மீண்டும் தொடக்கத்திலிருந்தே நடத்த வேண்டியிருந்திருக்கும் என்று அண்ணல் அம்பேத்கர் மிகச் சரியாகக் கூறியிருந்தார்.

முசோலினியிடமிருந்து ஒடுக்குமுறை உத்திகளைக் கற்றுக் கொண்டும், மனுவைத் தமது ஆதர்சமாகக் கொண்டிருந்த  நீட்சேவைப் போற்றிப் புகழ்ந்து கொண்டுமிருந்த  நாஜிகளிடமிருந்து, மனுவின் மரபுக்கு உரிமை கொண்டாடியும் வந்த ஹெட்கெவெர், கோல்வால்கர் முதலியோர் தலைமையில் ஒரு ‘தேசிய அரசாங்கம்’  (ராமராஜ்யம்) உருவாக்கியிருக்கவும் கூடும். அவர்களது  சிதைந்து போன கனவுகளை மீண்டும் உயிர்ப்பித்து அவற்றை நனவாக்கும் முயற்சி இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஓரளவு வெற்றியடைந்துள்ளது.

ஆனால், சங் பரிவார – பாஜக பாசிசத்தை இன்று (2024) நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலம்  மட்டுமே வீழ்த்திவிட முடியாது. உலக அளவில் நவதாராளவாதப் பொருளாதாரமும் அதன் விளைவாக உருவாகியுள்ள நிதி மூலதனத்தின் ஆதிக்கமும் இருக்கும் வரை பாசிசம் புதுப் புது வடிவங்களில் தோன்றிக் கொண்டிருக்கும்.  இந்தியத் தொழில் வளம் சர்வதேச மூலதனத்திடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்திய முதலாளியம் சர்சார் முதலாளியமாக, இந்திய ஒன்றிய அரசாங்கங்கள் அந்த முதலாளியத்தின் தொங்கு சதையாக இருந்து வருகின்றன. இந்தியாவில் பாசிசத்துக்கான இன்னொரு ஊற்றுக்கண் பார்ப்பனிய சாதி அமைப்பு. அது இந்துக்களில் பெரும்பான்மையினரிடமும்  மற்ற சிறுபான்மை மதத்தினரிடையே கணிசமான அளவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

A day of victory over fascism

நரேந்திர மோடியின் பாத்திரம் 

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த சிபிஐ எம்-எல் லிபரேஷன் என்ற கட்சியின் அறிக்கையொன்று கூறுவதுபோல தேர்தலில் ஒன்றிரண்டு தோல்விகளைத் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு சங் பரிவாரம் போதுமான வலுவைத் திரட்டி வைத்திருக்கிறது. இப்போது நமக்குத் தேவைப்படுவதெல்லாம் அதை இந்திய அரசியலில் விளிம்புநிலைக்கு மீண்டும் தள்ளிவைக்கக்கூடிய வகையில் அதன் அரசியலையும்  கருத்துநிலையையும் மிக உறுதியாக நிராகரிப்பதுதான்.

இந்த பாசிசத் தாக்குதலின் ஈட்டிமுனையாக இருப்பதிலும் தற்போது அனைத்திந்திய அளவில் பாஜக பெற்றுள்ள வாக்கு விகிதத்தைப் பெறுவதிலும் நரேந்திர மோடி ஒரு மையப் பாத்திரம் வகித்திருக்கிறார். அந்தப் பாத்திரம் இன்று ஓரளவு பலகீனமடைந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், வரலாற்று ரீதியாக சங் பரிவாரம் ஒவ்வொரு கட்டத்திலும் சங்கிலித் தொடர் போன்ற தலைமைகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்துள்ளது. எனவே, முரணற்ற ஜனநாயகம், புரட்சிகரமான சமுதாய மாற்றம் ஆகியவற்றுக்கான போராளிகள் என்ற முறையில் இடதுசாரிச் சக்திகளும் ஜனநாயக சக்திகளும் பாசிசத் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்காக ஒரு நீடித்த, பாசிசத்தின் ஒவ்வோர் அம்சத்தின் மீதுமான போராட்டத்தை நடத்த வேண்டும்.

நமது அரசமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத் தன்மையற்ற மண்ணின் மேல் தூவப்பட்டுள்ள உரம் என்று அம்பேத்கர் வர்ணித்தார். சாதிதான் நவீன இந்தியாவிற்கு மிகப்பெரும் இடையூறு என்று அடையாளப்படுத்தி அதை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டியது இன்றியமையாதது என்று கூறினார். அதனால்தான் அவர் இந்து ராஷ்டிரம் என்பது மிகப் பெரும் தீங்கு  ஏற்படுத்தும் கொடிய நிகழ்வு என்றும் அதிலிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். அதே கருத்தைத்தான் தந்தை பெரியார் தமிழகத்திலும் கேரளத்திலும் பரப்புரை செய்து வந்தார். மிகப் பிற்போக்குத்தனமான கருத்துகள், அணுகுமுறைகள், நடைமுறைகள் ஆகியன ஒடுக்குமுறைத் தன்மை வாய்ந்த இந்திய சமூகக் கட்டமைப்பில் – குறிப்பாக நன்கு வேரூன்றியுள்ள பார்ப்பனிய சாதி அமைப்பு, ஆணாதிக்கம்  ஆகியவற்றில் – வேர்கொண்டுள்ளன. அவை பாசிசத் தாக்குதலுக்கு ஊட்டம் கொடுத்து இந்த ஜனநாயக விரோதச் சூழலில் அதற்கு புதிய வலிமையையும்  அங்கீகாரத்தையும் ஈட்டித் தந்துள்ளன.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு இந்திய வரலாற்றிலும் கலாச்சாரத்திலும் காணப்படும் முற்போக்கான மற்றும் சமுதாயத்தை மாற்றியமைக்கின்ற ஒவ்வொரு போக்கையும், குறிப்பாக வலுவான சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள், சமத்துவம், பகுத்தறிவு, பன்மைத்துவம் ஆகியவற்றுக்காக இந்திய சமுதாயத்திலும் வரலாற்றிலும் காணப்படும் தேடல்கள் ஆகியவற்றை நாம் வலுப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

A day of victory over fascism by SV Rajadurai Article in Tamil

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெயிலா? கோடை மழையா? – அப்டேட் குமாரு

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் எப்போது?

செல்வி போட்ட போன்: சிஎம்சி விரைந்த ஸ்டாலின்… எப்படி இருக்கிறார் துரை தயாநிதி?

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? ஆளுநர் நடத்திய முக்கிய ஆலோசனை!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *