டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக்கு ஆபத்தா?  சபரீசன் திருச்செந்தூர் யாகம்:  உண்மைப் பின்னணி!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும், ‘திருச்செந்தூர் யாகம்  தமிழ்நாட்டு அரசியலில் பற்றி எரிகிறதே?” என்று மெசெஞ்சரில் ஒரு கேள்விக் கணை தொடுக்கப்பட்டிருந்தது.

வாட்ஸ் அப் அதற்கு பதிலை டைப் செய்யத் தொடங்கியது.  “தமிழக முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி  திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயில் வளாகத்தில் யாகம் நடத்தியதாக ஒரு தகவல் சில நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. அதிலும் இந்த யாகத்தின் காரணமாக முதல்வரின் வீட்டுக்குள்ளேயே சில முணுமுணுப்புகள் கேட்பதாகவும் தகவல்கள் வந்தன.

இதுபற்றி திருச்செந்தூர் முதல் செனடாப் சாலை வரை விசாரித்ததில் யாகத்தை விட சூடான தகவல்கள் கிடைத்தன. சபரீசன் தற்போதைய ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய அதிகார மையமாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. கட்சியிலும் ஆட்சியிலும் சபரீசனின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும்  சொல்கிறார்கள்.

சபரீசனுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் லண்டன் வெங்கட்.  லண்டனில் பல பிசினஸ்கள் செய்து வரும் லண்டன் வெங்கட்டின் குடும்பத்தினர் அங்கே இருக்கிறார்கள். இவர் மாதாமாதம் தமிழ்நாட்டுக்கு வந்துவிடுவார். தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றால் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டார். அதனால் திருச்செந்தூர் கோயிலில் பலரையும் நன்கு அறிந்துவைத்திருப்பவர்.  இவரது ஜோதிடர் மகேஷ் அய்யர். 

சில வாரங்களுக்கு முன்  லண்டன் வெங்கட் தனது நண்பரான சபரீசனிடம் ஒரு சில விஷயங்களை தயங்கித் தயங்கிச் சொல்லியிருக்கிறார், அதைக் கேட்டு சபரீசன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

நீல சட்டை அணிந்திருப்பவர் லண்டன் வெங்கட்

‘அதாவது தமிழ்நாட்ல கடந்த சில மாதங்கள்ல  தேர் சரிஞ்சு விழுறது தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்கு. மார்ச் 12 ஆம் தேதி  கோயம்புத்தூர் மாவட்டத்துல  கோட்டூர் பகுதியில் தேர் சரிஞ்சது. ஏப்ரல் 22 ஆம் தேதி தஞ்சாவூர் தேர் விழுந்துடுச்சு.  ஜூன் 13ம் தேதி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தேர்  விழுந்தது. இதுல தஞ்சாவூர்ல 12 பேர் இறந்துட்டாங்க. தர்மபுரியில ரெண்டு பேரு இறந்துட்டாங்க.

தேர்ங்குறது இறைவனும், அரசனும்  அமரும் வாகனம். திருவிழா நேரத்துல சாமி தேர்ல வரும். அதேபோல மன்னன் நகர் வலம் வரும்போது தேர்ல வருவாங்க. அதனால பரவலா தமிழ்நாட்ல தேர் சரிஞ்சுக்கிட்டிருக்கிறது தமிழ்நாட்டை ஆட்சி பண்றவங்களுக்கு நல்லதில்லை. இது ஏதோ ஒரு சமிக்ஞை. இதை என் ஜோதிடர்தான் என்கிட்ட சொன்னாரு. நான் பதறிப் போயிட்டேன். அதுக்கு பரிகாரமும் பண்றதுக்கு சில விஷயங்களை சொல்லியிருக்காரு’ என லண்டன் வெங்கட் சபரீசனிடம் சொல்லியிருக்கிறார்.  

லண்டன் வெங்கட்  பேச்சை எப்போதும் தட்டாதவர் சபரீசன். சரி, இதுக்கு என்ன பண்ணனும் என சபரீசன் கேட்க அப்போதுதான் ஜோதிடர் மகேஷை சபரீசனிடம்  அறிமுகப்படுத்தியிருக்கிறார் லண்டன் வெங்கட். அவர் சொன்ன விஷயங்களை குடும்பத்தினரிடமும் சொல்லி ஒ.கே. வாங்கியிருக்கிறார் சபரீசன்.  இது சில வாரங்களாக அப்படியே விட்டுவிட்டார்கள். சபரீசனும் பிசியாகிவிட்டார். இந்த நிலைமையில்தான் கடந்த ஜூலை 31 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில்  தேர் சரிந்துவிட்டது. இதைப் பார்த்த லண்டன் வெங்கட், உடனே சபரீசனுக்கு போன் செய்து, ‘நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். பாருங்க மறுபடியும் ஒரு தேர் சரிஞ்சுட்டு. எனக்கு என்னமோ சரியா படலை. உடனே பரிகார பூஜைக்கு திருச்செந்தூர்ல நான் ஏற்பாடு பண்றேன். நீங்க வரணும்’ என்று சொல்லியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோர்கணம் தேர் விபத்து செய்தி அறிந்ததுமே சபரீசனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது. உடனே அவர் மீண்டும் குடும்பத்தினரிடம்  பேசி சம்மதம் வாங்கினார். இதுகுறித்து லண்டன் வெங்கட்டிடம் சொல்ல மறுநாள் ஆகஸ்டு 1 ஆம் தேதியே அவர்கள்  இருவரும் ஜோதிடர் மகேஷோடு திருச்செந்தூர் சென்றனர். அங்கே லண்டன் வெங்கட்டின் ஏற்பாட்டில் 12 சிவாச்சாரியார்கள் வள்ளிக் குகையில் பரிகார யாக பூஜைகளை நடத்த தயாராக இருந்தனர்.   அந்த பூஜைகளில் கலந்துகொண்டுவிட்டு அருள் பிரசாதத்தோடு சென்னை திரும்பிவிட்டார் சபரீசன்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது.

சென்னையில் உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதியிடம் முதல்வர் கோரிக்கை!

+1
1
+1
9
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.