பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை பதிவு செய்த வழக்குகளில் 90% சதவீதம் வழக்குகள் எதிர் கட்சியினர் மீது மட்டுமே போடப்பட்டுள்ளன என கனிமொழி பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்களால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அந்த வகையில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி நல்முனை சாலை சந்திப்பு பகுதியில் தூத்துக்குடி வேட்பாளரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று (மார்ச் 29) பிரச்சாரம் மேற்கொண்டார்.
அவர், “இந்த கூட்டத்தில் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது நமது வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெறுவார் என்று தெரிகிறது. இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது ஒன்று. இந்த தேர்தல் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவது போன்றது தான்.
அதிமுக, பாஜக வேட்பாளர்கள் உங்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கும் பொழுது அவர்களிடம் விவசாய மக்களுக்காக நீங்கள் செய்தது என்ன? என்று கேளுங்கள்.
வேளாண் மசோதாவை கொண்டு வந்து விவசாய மக்களை பாதிப்படையச் செய்தது ஒன்றிய பாஜக அரசு அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுக.
’கேட்டதை எல்லாம் செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் போராடாமல் இருக்காதீர்கள், தொழிலாளர்கள் என்றால் போராட வேண்டும்’ என்று சொன்ன ஒரே முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.
ஒன்றியத்தில் உள்ள பாஜகவின் அரசு மக்களுக்கான அரசு அல்ல, அதானி அம்பானிகளுக்கான ஆட்சியாக உள்ளது. நாம் ஒரு ரூபாய் நிதியாக வழங்கினால் ஒன்றிய அரசு நமக்கு 26 பைசா மட்டுமே திரும்பி அளிக்கிறது. ஆனால் உத்திரபிரதேசத்திற்கு இரட்டிப்பாக 2.20 பைசா வழங்குகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது போல, தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயக் கடன் ரத்து செய்யப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்குவதாக மோடி தெரிவித்தார் ஆனால் இதுவரை யாருக்கும் மானியம் வழங்கவில்லை.
தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வந்து பாஜக கட்சி சட்டப்படி ஊழல் செய்து வருகிறது. நடு இரவில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தில் கத்தி வைத்துக்கொண்டு திருடுவது போல, அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் கொண்டு சோதனை நடத்தி, பின்னர் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக நிதி பெற்றுள்ளது.
அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறைகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 90% சதவீதம் வழக்குகள் எதிர்க்கட்சியினர் மீது போட்டுள்ளது பாஜக ஆட்சி” என கனிமொழி பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? : ஸ்டாலின் கேள்வி!
’சதுரங்க வேட்டை பட வசனம் போல தான்’… திமுகவை விமர்சித்த எடப்பாடி