புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலைநகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த கொடுமை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்பதே வயதான அந்த பள்ளி சிறுமியிடம் மிருகமாக நடந்துகொண்ட 19 வயதே ஆன கருணாஸ் கஞ்சா போதைக்கு அடிமையானவன்.
புதுச்சேரியில் இதுபோன்ற கொடூரங்கள் பெருகி வருவது பற்றி தமிழ் களம் சேவை அமைப்பின் பொதுச்செயலாளர் அழகரிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.
“புதுச்சேரி மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் இருக்கிறதோ, இல்லையோ தனியார் மற்றும் அரசு மதுபான கடைகளும், பார்களும் மற்றும் சாராய கள்ளுகடைகளும் ஊர் ஊராக திறக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புதுச்சேரிக்கு வந்து மது அருந்திவிட்டு தள்ளாடுவதையும், சாலை ஓரங்களில் விழுந்து கிடப்பதையும் காணமுடிகிறது.
இந்த ஆட்சியில் குடியிருப்பு பகுதிகளில், பணத்துக்கு ஆசைப்பட்டு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி, தெருவுக்கு தெரு 10 கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். இந்த ரெஸ்டோ பார்கள் டிஜே, கவர்ச்சியான நடனங்களுடன் செயல்படுகிறது. அங்கே போதை பொருள்களும் கிடைக்கின்றன.
இதன்காரணமாக இளைஞர்கள், மாணவர்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள்.
இன்னொருபக்கம் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் புதுச்சேரியில் அதிகமாக புழக்கத்தில் இருப்பதற்கு காரணம், வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ரயில்களில் கஞ்சா எடுத்துவரப்படுகிறது. இதனை சோதனை செய்து, தடுக்க காவல்துறையினர் தவறுகிறார்கள் .
அதேபோல் சமூக விரோதிகள் கடல் மார்கமாக கஞ்சா பொருட்களை எடுத்து வந்து காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகம் வழியாக புதுச்சேரிக்கு கொண்டுவருகின்றனர்.
போதை பொருட்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மூலமாகவும், ரெஸ்டோ பார்களில் டிஜே நடத்தி வருபவர்கள் மூலமாகவும், சிறுவர்கள், இளைஞர்கள் மூலமாகவும் விற்பனை செய்கின்றனர்.
கஞ்சா விற்பனை செய்வோருக்கு வாட்ஸ் அப்பில் லொக்கேஷன் ஷேர் செய்தால் இருக்கும் இடத்துக்கே வந்து கொடுத்துவிட்டுச் செல்கின்றனர்.
போதைபொருள்களை விற்பனை செய்பவர்களை போலீசார் பிடித்தால், அரசியல்வாதிகள் தலையிட்டு காப்பாற்றுகிறார்கள். அதையும் மீறி வழக்குத் தொடர்ந்தால், தமிழகம் போல், புதுச்சேரியில் வலுவான சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கமுடியாது. சில நாட்களில் பெயிலில் வரக்கூடிய நிலையில் தான் இங்கு சட்டங்கள் உள்ளன.
இதனால் பல போலீசாரே சமூக விரோத கும்பல்களிடம், கூட்டுவைத்து மாமூல் வாங்கிக் கொண்டு குற்றச்செயல்களுக்கு துணை போகிறார்கள். புதுச்சேரியில் உள்ள ஒருசில எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர்கள் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் இங்குள்ள போலீஸ் அதிகாரிகளின் சொத்துகளை ஆராய்ந்து பார்த்தாலே தெரியும்.
போதை பழக்கத்தை தடுத்தாலே, புதுச்சேரியில் குற்றங்களின் எண்ணிக்கை குறையும்” என்றார்.
போதைப்பழக்கம் அதிகரித்திருப்பது குறித்து புதுச்சேரி கலால் துறை வட்டாரத்தில் விசாரித்த போது,
“2021ல் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு முன்பு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனம் ஆகிய பகுதிகளில் 285 ஒயின்ஷாப் மற்றும் அதனுடன் சேர்ந்த பார்கள், 60 மொத்த வியாபார மதுபான கடைகள் மட்டுமே இருந்தன.
2021க்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 500 ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் டிஜே வசதியுடன் கூடிய 60 பார்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி டாப்அப் பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டாப்அப் பார்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் செயல்படும்.
நாளொன்றுக்கு 2900 ரூபாய் அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு, டாப்அப் பார்களை நடத்தி கொள்ளலாம். ‘
இதுபோன்று புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓயின்ஷாப் மற்றும் பார்கள் இயங்கி வருகின்றன.
ரெஸ்டோ பார்களுக்கு உரிமம் வழங்க, அதிகார வட்டத்தில் உள்ளவர்கள் 30 லட்சம் ரூபாய வரை லஞ்சமாக வசூல் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ரெஸ்டோ பாரும் ஆண்டுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை வெறும் ரூ. 6 லட்சம் மட்டும்தான்.
பார்களை திறக்கக் கூடாது என்று மக்கள் போராடினாலும், அந்த எதிர்ப்பையும் மீறி திறக்கின்றனர்” என்றார்.
“இன்னொரு ஆர்த்திக்கு இதுபோன்ற கொடுமை நடைபெறாமல் இருக்கவும், இளைஞர்கள் சமுதாயத்தை காக்கவும் அரசு கஞ்சா உள்ளிட்ட போதைபொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்பது புதுச்சேரி மக்களின் கோரிக்கை.
இதே நிலை தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு, காவல்துறையை விழிப்புடன் வைத்திருப்பது அவசர அவசியமாகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி, பிரியா
’பம்பரம் சின்னம்… 2 வாரங்களில் முடிவு வேண்டும்’ : உயர்நீதிமன்றம் உத்தரவு!
‘போர் தொழில்’ இயக்குநரின் ‘நெக்ஸ்ட்’ ஹீரோ இவர்தான்!
Comments are closed.