பிரதமருக்கு 9 தலைவர்கள் கடிதம்… ஸ்டாலின் மிஸ்ஸிங் ஏன்? 

அரசியல்

பாஜக அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவே முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றம்சாட்டி நாட்டின்  9 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு மார்ச் 5 ஆம் தேதி கடிதம் எழுதினார்கள்.   

அந்தக் கடிதத்தில்,  “பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.   விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டார்கள்.  சிபிஐ, அமலாக்கத்துறை,  ஆளுநர் அலுவலகங்கள் ஆகியவை பாஜகவின் தேர்தல் பகையைத் தீர்த்துக் கொள்ளும் கருவிகளாக மாற்றப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களும், தில்லி துணைநிலை ஆளுநரும் அரசியல் சாசன விதிகளை மீறி தலைவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் ஆட்சி நிர்வாகத்திலும் அவர்கள் அடிக்கடி தலையிடுகிறார்கள்” என்று குற்றம் சாட்டியிருந்தனர்.  டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோசிடியா கைது செய்யப்பட்டதையும் அவர்கள் குறிப்பிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். 

இந்த கடிதம் எழுதப்பட்ட அடுத்த நாளான மார்ச் 6 ஆம் தேதியே பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குறிவைத்து சிபிஐ சோதனை நடந்தது.

மார்ச் 5 ஆம் தேதி  பாரதிய ராஷ்டிர சமிதி தலைவரும் தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ்,  திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி,  ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்,  ஆம் ஆத்மி முக்கிய தலைவரும் பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான்,  ஆர்ஜேடி தலைவரும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வியாதவ்,  தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே,  சமாஜ் வாதி கட்சி தலைவரும் உபி முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், பரூக்அப்துல்லா ஆகிய ஒன்பது கட்சித் தலைவர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். 

ஆனால் இந்த கடிதத்தில் முக்கிய எதிர்க்கட்சியும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய திமுக தலைவரும்  தமிழ்நாடு  முதல்வருமான ஸ்டாலின் கையெழுத்திடவில்லை.  காங்கிரஸ், இடது சாரிகளும் இந்த கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

‘மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர்களை  அழைத்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘வகுப்பு வாத கொள்கையால் நாட்டை பிளவுபடுத்தும் பாஜகவை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். சிம்பிள் எலக்‌ஷன் அரித்மேடிக் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும். காங்கிரஸ் இல்லாத கட்சிகள் மூன்றாவது அணி என்பதெல்லாம் கரை சேர முடியாது. மாநில அளவில் உள்ள வேறுபாடுகளைக் கடந்து தேசிய அளவில் ஒன்றுபட வேண்டும்” என்று பேசியிருந்தார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்துக்குப் பிறகு மார்ச் 5 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களால் பிரதமருக்கு எழுதப்பட்ட முக்கியமான கடிதத்தில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகளின் தலைவர்கள் கையெழுத்திடவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இன்னும் சாத்தியப்படவில்லையோ என்ற யூகங்களை எழுப்பியுள்ளது,

திமுகவின் முக்கிய கோரிக்கைகளை பிரதிபலிக்கும் இந்த கடிதத்தில் திமுக ஏன் கையெழுத்திடவில்லை என்று திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்புச் செயலாளர் பேராசிரியர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரனிடம் மின்னம்பலம் சார்பில் தொடர்புகொண்டு கேட்டோம்.

“அதாவது அந்த மெமோரண்டத்தை அவர்கள் தயாரித்து அதில் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.   ஓர் அமைப்பு சார்பாகவோ எல்லாரும் சேர்ந்தோ இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்ற முடிவெடுக்கப்படவில்லை. விசாரணை அமைப்புகளை ஜனநாயகத்துக்கு எதிராக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்று கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார்கள்.  இதில் திமுகவோ, காங்கிரஸோ எங்காவது மாறுபட்டு பேசியிருக்கிறார்களா? 

இன்னும் சொல்லப் போனால் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிற  ஃபரூக் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் மார்ச் 1 ஆம் தேதி எங்கு இருந்தார்கள், என்ன பேசினார்கள் என்று உங்களுக்குத் தெரியும். மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்கள் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசியிருக்கிறார்கள்.

நான்  என்ன  சொல்கிறேன் என்றால்….நாங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே கூட்டணி அமைத்துவிட்டு அதற்கு பிறகு இதுபோன்ற கடிதத்தில் சிலர் கையெழுத்திட்டார்கள், இடவில்லை என்றால் அது வேறு.  அங்கே சில தலைவர்கள் இந்த முயற்சியை எடுத்திருக்கிறார்கள். அதில் அங்கிருந்த தலைவர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.  அதில் கையெழுத்திடாவிட்டாலும் திமுகவுக்கு அதில் ஒப்புதல்தான். இதில் விவாதிக்க எந்த பிரச்சினையும் இல்லை” என்றார் பேராசிரியர் கான்ஸ்டான்டைன் ரவீந்திரன்.

இதற்கிடையே புனேவில் மார்ச் 6 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், “பிரதமருக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில் முதலில் கையெழுத்திட்டது நான் தான். நான் ஐந்து முதல் பத்து தலைவர்களுடன் பேசினேன். அவர்களின் கையெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் கையெழுத்திடாதவர்களுடன் நான் ஏதும் பேசவில்லை.

காங்கிரஸ் முக்கியமான எதிர்க்கட்சி. காங்கிரஸ் எப்படி முக்கியமோ அதேபோல மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும் முக்கியமானவர்கள். நாங்கள் அனைவரிடமும் பேசுவோம். ஒற்றுமைக்கான செயல் திட்டத்தை தொடங்குவோம்” என்று கூறியிருக்கிறார் சரத் பவார்.

தொழில் நுட்பம் மூலம் ஒருங்கிணைப்பு முயற்சிகள் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் போன்ற முக்கியமான கட்சிப் பிரதிநிதிகளின் கையெழுத்து இந்த கடிதத்தில் இடம்பெறாதது புதிராகவே உள்ளது.

ஆரா

மருந்துவாங்க கூட காசு இல்ல…வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர்…ஓடி வந்து உதவிய சூர்யா

திலீப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *