கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து நாளை (ஜூலை 15) முதல் தமிழ்நாட்டிற்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகா மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினமும் 1 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு கர்நாடகா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறப்பது குறித்து முடிவு செய்வதற்காக அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களுருவில் இன்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து நாளை முதல் தமிழ்நாட்டிற்கு 8,000 கன அடி தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், “இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கு 8,000 கனஅடி நீரை திறந்து விடலாம் என்றும், மழை பெய்தால் இந்த எண்ணிக்கையை அதிகரிப்போம் என்றும் சி.டபிள்யூ.எம்.ஏ., உறுப்பினர் மோகன் கட்டார்கி முன்மொழிந்தார். அதனை ஏற்பதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், “ஆரம்ப கட்டத்திலேயே கூட்டம் நடத்தி, காவிரி ஒழுங்காற்று குழு ஒரு டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என உத்தரவிட்டது. கர்நாடகா மாநிலத்தில் தற்போது 30% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே இந்த உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
அதன்படி ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினமும் 1 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினருக்கு தொடர்பு” : ஆதாரம் காட்டிய அண்ணாமலை
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி ஏன் முக்கியமானது? : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!