நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும், சிறந்த வீரச் செயல்கள் மற்றும் புலனாய்வு வழக்கில் திறமையாக கையாண்ட காவல்துறை அதிகாரிகளைத் தேர்வு செய்து, ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா அன்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதக்கம் வழங்குவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஏ.எஸ்.பி., ஒரு டி.எஸ்.பி., மற்றும் ஆறு இன்ஸ்பெக்டர்கள் ஆகிய எட்டு அதிகாரிகளை தேர்வு செய்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இந்த எட்டு பேரில் நான்கு பேர் பெண் அதிகாரிகள் என்பது தமிழகத்துக்கு கிடைத்த கூடுதல் பெருமை.
ஏ.எஸ்.பி. பொன்காசிகுமார், ஏ.சி. விக்டர், இன்ஸ்பெக்டர்கள் ரவிகுமார், ரம்யா, விஜயா, வனிதா, சரஸ்வதி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர்தான் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் பெறப் போகும் அதிகாரிகள்.
சரி அவர்கள் என்னென்ன சாதனைகள் செய்தனர் என்று தமிழக காவல்துறையில் நாம் விசாரித்தோம்.
இன்ஸ்பெக்டர் ரவிகுமார்
ரவிக்குமார் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தபோது வெள்ளைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த வி.ஏ.ஒ. இந்திரா, ‘மனித எலும்பு ஏரிக்கரை ஓரத்தில் கிடக்கிறது. பெண் குழந்தை எலும்பு போல் உள்ளது’ என்று புகார் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் அந்தப் பகுதியில் தீர விசாரித்தார். செங்கல் சூளையில் வேலை செய்யும் சித்ரா என்பவரை அழைத்து, ’ உன்னோடே கணவன் எங்கே?’ என்று கேட்கிறார். சித்ராவின் கணவர் பெயர் குமார். அவரை சில நாட்களாக காணவில்லை.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் நடத்திய விசாரணையில்தான் உண்மைகள் தெரிந்தன. அதாவது தனது கணவர் குமாரின் நண்பர் முருகனுக்கும் சித்ராவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்து கோபமான குமார் தனது மனைவி சித்ராவை கண்டித்திருக்கிறார். இதனால் கோபமான மனைவி சித்ரா கள்ளக்காதலன் முருகனோடு சேர்ந்து குமாரை கொடூரமான முறையில் கொலை செய்து அருகில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் புதைத்து விட்டார்கள்.
உடலை நாய், நரிகள் தின்றது போக…முதுகு எலும்பு மட்டுமே மிச்சம் இருந்துள்ளது, அந்த எலும்பை ஆய்வுக்கு அனுப்பி ஆண் உடம்பு எலும்பு என அறிந்து 18 மணி நேரத்தில் முருகனையும் சித்ராவையும் கைது செய்தார் ரவிக்குமார். இப்போதும் இவர்கள் சிறையில்தான் இருக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்தற்காகத்தான் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரைத் தேர்வு செய்துள்ளனர்.
சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ரம்யா
2022 அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யா என்ற பெண்ணை மர்மநபர் ஒருவர் கொலை செய்துவிட்டு தப்பித்துவிட்டார். மாம்பலம் இரயில்வே போலீஸ் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது.
வழக்கை எடுத்துக்கொண்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ரம்யா புலனாய்வு செய்து சத்யாவை ஒருதலை பட்சமாக காதலித்து வந்த சதீஷ் என்பவனைக் கண்டுபிடித்தார்.
கொலை செய்ததற்கான காரணத்தைக் கேட்டபோது, ‘ நான் உயிருக்கு உயிராய் காதலித்தேன். ஆனால் அவள் என்னை காதலிக்க வில்லை. வேறு ஒருவனை காதலித்தாள். அதனால் கோபத்தில் கொலை செய்துவிட்டேன்’ என்று ஒப்புக்கொண்டான்.
கொலை நடந்த மறுநாளே அவனைப் பிடித்து ரிமாண்ட்க்கு அனுப்பி இந்த ஒற்றை வழக்கிலேயே குண்டாஸும் போட்டார். தற்போது வரையில் சிறையில் இருந்து வருகிறான் சதீஷ்.
இவர்களைப்போன்று ஏஎஸ்பி பொன் கார்த்திக் குமார், ஏ.சி.விக்டர்இன்ஸ்பெக்டர்கள் விஜயா, வனிதா, சரஸ்வதி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புலனாய்வு வழக்குகளை சிறப்பாக கண்டுபிடித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கத்தை வழங்கியிருக்கிறது.
-வணங்காமுடி
நாங்குநேரி மாணவருக்காக விரையும் ஸ்டான்லி மருத்துவக் குழு: மா.சுப்பிரமணியன்
ஜவான் 2வது சிங்கிள்: காதலில் உருகும் ஷாருக்கான் – நயன் தாரா