8 வழிச்சாலை சர்ச்சை : அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

அரசியல்

8 வழிச்சாலைத் திட்டத்தை நான் எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,

“திமுக 8 வழிச்சாலை திட்டத்திற்கு  எதிரியல்ல. விவசாயிகளை அழைத்துப் பேசி பிரச்சினையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள்,

அல்லது மாற்று வழி காணுங்கள் என்பதைத்தான் திமுகவின் கொள்கையாக வைத்திருந்தோமே ஒழிய எட்டு வழிச்சாலையைப் போடக்கூடாது என்று திமுக எந்தக் காலத்திலும் சொல்லவே இல்லை” என்றார்.

இது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. அதிமுக ஆட்சியில், பாஜக அரசு கொண்டு வந்த சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றுபல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தின.

அப்போது பிரதான எதிர்கட்சியாக இருந்த திமுக இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தது.

8 வழிச்சாலைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தபோது அதை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.

தனது தேர்தல் அறிக்கையில் கூட இந்த திட்டம் நிறுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தபோது 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தியதாக செய்திகுறிப்பு வெளியிடப்பட்டது

இந்தசூழலில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, 8 வழிச்சாலைத் திட்டத்தை தி.மு.க ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு தான் பேசியது திரித்துக் கூறப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

8 வழிச்சாலை என்பது ஒரு கொள்கை முடிவு. அரசாங்கம் முடிவெடுக்க வேண்டிய ஒன்று. 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு நாங்கள் ஒன்றும் எதிரி கிடையாது,

பிரச்சினை குறித்து மக்களை அழைத்துப் பேசுங்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுங்கள் என்று தான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது நாங்களும் சாலைகளை விரிவுப்படுத்தி இருக்கிறோம்.

அதற்காக நிலங்களை கையகப்படுத்தி உள்ளோம். இந்தமுறையும் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

போக்குவரத்து பிரச்சினைகளை சரிசெய்ய சாலை விரிவாக்கப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

உச்ச நீதிமன்றம் சாலையை போடவேண்டும் என்று கூறுகிறது. 8 வழிச்சாலைத் திட்டத்தை அமைத்தே தீரவேண்டும் என்று நான் எங்கும் கூறவில்லை.

இது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் திட்டம். 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என்று முதலமைச்சரும்,

திட்டம் வேண்டும் என்று நானும் மாறி மாறி பேசுவதாக செய்திகள் திரித்து வெளியிடப்படுகின்றன.

8 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை. இது முழுக்க அரசின் கொள்கை முடிவு.

சாலை அமைக்கப்படுமா இல்லையா என அரசு தான் அறிவிக்கும், அமைச்சர் என்ற முறையில் நான் தனிப்பட்ட எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

கலை.ரா

8 வழிச்சாலை திட்டம் – அரசு நிலைப்பாடு என்ன?

+1
1
+1
1
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.