திமுக கூட்டணியில் உள்ள விசிக, மகளிர் மதுவிலக்கு மாநாடு நடத்த தயாராகி வருகிறது.
கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றும் இந்த மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தது தமிழக அரசியலிலும் திமுக கூட்டணியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் இன்று (செப்டம்பர் 16) நேரில் சந்தித்து பேசியதால் கூட்டணி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்தசூழலில் மது ஒழிப்பு மாநாடு பணிகள் குறித்து விசிக தலைமை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,
“*மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சியில் நடத்துவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால் மாநாடு நடத்தும் அளவுக்கு அந்த பகுதியில் போதுமான இடம் இல்லாததால், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை- திருச்சி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
*மாநாட்டுக்காக 8 ஏக்கர் நிலத்துக்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு 4000 சேர் வீதம் 8 ஏக்கருக்கு 32 ஆயிரம் சேர்கள் போடப்படவுள்ளன. அந்த பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பல ஏக்கர் பரப்பளவு நிலங்கள் காலியாக இருப்பதால், அதில் கார்பார்க்கிங் மற்றும் பந்தலை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
*மாநாட்டுக்கு கூட்டத்தை பெரிய அளவில் திரட்டுவதற்காக, கட்சி நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 134 மாவட்டங்களில் இருந்து கணிசமான பெண்களை அழைத்து வரவும், குறிப்பாக வட தமிழகமான அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பெண்களை திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
*ஒரு ஒன்றியத்துக்கு 500 பேரை அழைத்து வர வேண்டும். அதில் 300 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதேபோல் நகர பகுதிக்கு 1000 பேர் என்றால் அதில் 600 பேர் பெண்களாக இருக்க வேண்டும்.
*தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடந்த வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஒவ்வொருவரும், அவரவர் வீட்டில் இருந்து ஒரு பெண்ணை கட்டாயம் அழைத்து வர வேண்டும்.
*ஆட்களை திரட்டுவதற்கு மண்டல வாரியாக செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
*முக்கியமாக மாநாட்டுக்கு என்று தொழிற்சாலை, வியாபாரிகளிடம் வசூல் செய்யக்கூடாது. நன்கொடை கேட்டு மிரட்டினார்கள் என்று யாரிடமிருந்தாவது தகவல் வந்தால் கட்சிக்கு கெட்டப்பெயர் உருவாகும். நம்மை ஒரு குரூப் கண்காணித்து கொண்டே இருக்கிறது. அதனால் யாரும் பிரச்சினை வராத அளவுக்கு பார்த்துக்கொள்ளுங்கள். கம்பெனி, வியாபார தளங்களில் நன்கொடை வசூலிப்பதை கைவிடுங்கள் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
*ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் எத்தனை பெண்கள் வருகிறார்கள். அவர்களின் விவரங்கள், எந்தெந்த வாகனங்களில் வருகிறார்கள் (கார், வேன், பஸ்) போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*மாநாட்டுக்கு வரக் கூடிய பெண்களை கண்காணித்து பாதுகாக்க, மாநாட்டை வழிநடத்த பெண்கள் மட்டுமே கொண்ட 62 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள் விசிக தலைமை நிர்வாகிகள் வட்டாரத்தில்.
*இன்று முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் சென்னையில் சந்தித்த நேரத்தில் கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜித் சதுர்வேதி, உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் ஆகியோர் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர் .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
சுங்கச்சாவடிகளுக்கு எதிர்ப்பு: மமக முற்றுகை போராட்டம்!
நடிகை துன்புறுத்தல் விவகாரம்… முதல்வன் பட பாணியில் அதிரடி முதல்வர்!