நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 77 வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைவர்கள் தங்களது சுதந்திர தின வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, “நாட்டு மக்கள் அனைவருக்கும் 77 வது சுதந்திர தின வாழ்த்துகள். சோதனைகளை எல்லாம் வாய்ப்புகளாக பயன்படுத்தியதால், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சி மற்றும் மனிதாபிமான இலக்குகளை ஊக்குவிப்பதில் உலக அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
உலக அளவில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதோடு, தன் மதிப்பையும் அதிகரித்துள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் 2 பங்குள்ள நாடுகளின் கூட்டமைப்பான ஜி20யின் தலைமைப் பொறுப்பையும் இந்தியா ஏற்றுள்ளது.
உலக அளவில் இந்தியா தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது . 3வது இடத்தை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருகின்றனர், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் அனைத்து மக்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,“சுதந்திர தின வாழ்த்துக்கள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்.”என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், விடுதலை வேள்வியில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றி தலை வணங்குவதுடன், இந்நன்னாளில் நம் நாடு கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட பாடுபடவும், நம் நாட்டின் ஒற்றுமையை பேணி காக்கவும் நாம் உறுதியேற்போம். அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் ”என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,“ஆங்கிலேயரின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து இந்திய திருநாடு சுதந்திரம் பெற்ற பொன்னாளான இந்த இனிய நாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”இந்தியா விடுதலை அடைந்ததன் 76-ஆம் ஆண்டை நிறைவு செய்து, 77-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில், இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா விடுதலை அடைந்து 76 ஆண்டுகளை கடந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இந்த நீண்ட பயணத்தில் பல மைல்கற்களை கடந்திருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம். நிலவுக்கு மூன்றாவது முறையாக விண்கலம் அனுப்பியிருக்கிறோம். போர்ப்படை அணிகளை தலைமையேற்று வழிநடத்தும் வீராங்கனைகளைக் கூட உருவாக்கியிருக்கிறோம். ஆனால், வறுமையை ஒழித்திருக்கிறோமா? அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியிருக்கிறோமா? இவற்றுக்கெல்லாம் இல்லை என்பது தான் நமது பதில் என்றால், நாம் அடைந்த விடுதலைக்கு எந்த அர்த்தமும் இல்லை.
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது மற்றும் விடுதலை அல்ல. பொருளாதாரம், சமூகம் என எவையெல்லாம் மனிதர்களை அடிமைபடுத்துகின்றனவோ, அவை அனைத்திலும் சமநிலையை உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பது தான் உண்மையான விடுதலை ஆகும். ஆனால், அந்த விடுதலை நமக்கு கிடைக்கவில்லை என்பதைத் தான் நாங்குநேரி கொடூரங்கள் நமக்கு காட்டுகின்றன.
அவை நிகழும் உலகம் அன்பு உலகமாக இருக்காது. அமைதி உலகமாக இருக்காது. அனைத்திலிருந்தும் விடுதலை பெற்ற உலகமாக இருக்காது. அன்பும், அமைதியும் நிறைந்த உலகம் வேண்டுமென்றால் அங்கு சமத்துவமும், சகோதரத்துவமும் நிறைந்திருக்க வேண்டும். அது தான் முழுமையான விடுதலை பெற்ற உலகமாக இருக்கும். அதை உருவாக்குவதற்கான முதல் தேவை சமூக நீதி ஆகும். சமூகநீதி இல்லாமல் சமத்துவத்தையும், சகோதரத்தையும் ஏற்படுத்த முடியாது.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.”என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “அறவழியிலான போராட்டத்தின் மூலம் ஜனநாயகத்தை
வென்றெடுத்தவர்கள் நாம் என்ற பெருமையைக் கொண்ட இந்திய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அடக்குமுறை ஆட்சியால் மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற ஜனநாயக முறையிலான போராட்டமே தீர்வு என்பதை உலகுக்கே உணர்த்திக் காட்டியது இந்திய சுதந்திரப் போராட்டம்.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுச்சி மிக்க போராட்டங்களை முன்னெடுத்து இறுதியாக சுதந்திரத்தை வென்றதன் மூலம் இனம், மொழி, மாநிலம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டிருந்தால் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதையும் உலகத்துக்கு எடுத்துக்காட்டியது இந்தநாள்தான். இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அன்று போர்களங்களும், போராட்டங்களும் கண்டு தங்களது இன்னுயிரை நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும், தியாகிகளையும் இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம். மேலும், இப்போதைய காலகட்டத்தில் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் வெறுப்புணர்வை நீக்கி சகிப்புத்தன்மையை வளர்த்தெடுத்து வேற்றுமையில் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம் என இந்த சுதந்திரதினத்தில் உறுதி ஏற்போம்”என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தகவல்!