தருமபுரி அரசு நெல் கிடங்கில் 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் காணவில்லை என்று எழுந்த புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கம் கொடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை பகுதியில், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்புக்கு பின்புறம் வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் கிடங்கு அமைந்துள்ளது.
இங்கு தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் நெல் எடுத்து வந்து அடுக்கி வைக்கப்படும். இந்த நெல் மூட்டைகள் ரேஷன் கடைகள், அரசு பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அண்மையில் நாகையில் இருந்து 22ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நெல் மூட்டைகளில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பதாக சென்னையில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இந்த தகவலின் பேரில் நேரில் சென்று நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் விசாரணை செய்தனர். மாவட்ட ஆட்சியர் சாந்தியும் நெல் சேமிப்பு கிடங்கினை அரசு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்,
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “7 ஆயிரம் டன் நெல் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் சேமிப்பு கிடங்கிலிருந்து நெல் எதுவும் மாயாகவில்லை. அதிகாரிகள் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளேன். நூறு சதவீதம் முறையான விசாரணை நடத்தப்பட இருக்கிறது” என்றார்
இதுதொடர்பாக இன்று (ஜூன் 1) உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அளித்துள்ள விளக்கத்தில், “22273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7174 மெட்ரிக் டன் அரவைக்கு அனுப்பியது போக 15099 மெட்ரிக்டன் இருந்த நிலையில் 7000 டன் இருப்பில் இல்லை என்று கேள்விக்குறியுடன் செய்தி வந்தது. அதை பார்த்தவுடனே, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநரையும் அந்தக் கிடங்கில் 100% தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்திட ஆணையிடப்பட்டது. பின் மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக விழிப்புப்பணிக் குழுவினரும் ஆய்வு செய்து அது போன்று ஏதுமில்லை என்று நேற்று செய்தியாளர்களை அழைத்துக் கூறினர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த விளக்கம் இன்று செய்தித்தாள்களில் விரிவாக வந்த பின்னும் சிலர் தேவையில்லாமல் அது பற்றி உண்மைக்குப் புறம்பாக செய்தி பரப்பி வருகின்றனர். நேற்று 1596 மெட்ரிக் டன் நெல்லும் இன்று 1789 மெட்ரிக் டன் நெல்லும் அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டுத் தொடர்ந்து தலைமை அலுவலகக் குழுவினர் ஆய்வு செய்ததில் அந்தக் கிடங்கிலிருந்த நெல் அட்டிகளில் மாறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முதல்வர் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது” என்று விளக்கமளித்துள்ளார்.
பிரியா
கோவை : பேனர் விழுந்து மூவர் பலி!
டிஜிட்டல் திண்ணை: கையில் கட்டுடன் சசிகலா… தஞ்சை திருமணத்தில் மூவர் சந்திப்பு நிகழுமா?