6ஆம் கட்ட தேர்தல்… 11.13 கோடி வாக்காளர்கள்… விறுவிறு வாக்குப்பதிவு!

Published On:

| By Kavi

6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று(மே 25) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

தொடர்ந்து இன்று  உத்தரப் பிரதேசத்தில் 15 , ஹரியானாவில் 10 , பீகாரில் 8, மேற்கு வங்கத்தில் 8 , டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, ஜம்மு காஷ்மீரில் 1 என மொத்தம் 58 தொகுதிகளில் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆறாம் கட்ட தேர்தலில் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 11.4 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலை, 889 பேர் எதிர்கொள்ளும் நிலையில், பாஜகவில் இருந்து தர்மேந்திர பிரதான், மனோஜ் திவாரி, மேனகா காந்தி, முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபத்யா, மனோகர்லால் கட்டார் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் கன்ஹையா குமார், மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெஹபூப முப்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஒடிசாவில் காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்தவரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன், தனது மனைவி சுஜாதாவுடன் வந்து புவனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தனது மனைவியுடன் வந்து மிர்சாபூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் வாக்களித்த பின்னர், “டெல்லி வாக்காளர்கள் மீண்டும் பிரதமர் மோடியை தேர்வு செய்வார்கள்” என்று பேட்டி அளித்தார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பாஜக கிழக்கு டெல்லி எம்பியும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மகளும், புது டெல்லி பாஜக வேட்பாளருமான பன்சுரி சுவராஜ் ஆகியோர் டெல்லியில் வாக்களித்தனர்.

ராஞ்சியில்  தனது வாக்கினை பதிவு செய்த ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன், ”ஜார்க்கண்ட் வாக்காளர்கள் அனைவரும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக வந்து வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து 8 மாநிலங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
முன்னதாக,

முதல் கட்ட தேர்தல் – 66.14 சதவீதம்,
இரண்டாம் கட்ட தேர்தல் – 66.71 சதவீதம்,
மூன்றாம் கட்ட தேர்தல் – 65.58 சதவீதம்,
நான்காம் கட்ட தேர்தல் – 69.16 சதவீதம்,
ஐந்தாம் கட்ட தேர்தல் – 62.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

7ஆம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4ல் முடிவுகள் வெளியாகவுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வாழ்க்கையில் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி கையாள்வது?

டாப் 10 செய்திகள் : 6ஆம் கட்ட தேர்தல் முதல் ரிமெல் புயல் வரை!