நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை என்று ஈரோடு திமுக மாவட்ட செயலாளரும் வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி இன்று (ஜனவரி 21) தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி இன்று காலை முதல் வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, “ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ நான்கு வார்டுகள் வீதம், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். முதல்வர் ஸ்டாலினால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி பொதுமக்கள் எங்களிடம் பேசுகிறார்கள். அது எங்களுக்கு ஆதரவை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.
மேலும், ஆங்காங்கே உள்ள சில பிரச்சனைகளையும் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். தேர்தல் முடிந்ததும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குப் பிறகு அவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண்போம். மற்ற அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வாய்ப்பிப்பில்லை” என்றார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முத்துசாமி, “அவர்களுடைய பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு எள்ளளவும் இல்லை. நாங்கள் முறையான அனுமதி வாங்கி தான் பிரச்சாரம் செய்கிறோம். சுயேட்சையாக களத்தில் நிற்கக்ககூடிய வேட்பாளர்களுக்கு கூட எங்களால் எந்த பிரச்சனையும் வராது. தேர்தல் ஆணையம் தான் தேர்தலை நடத்துகிறது. அதனால் அவர்கள் எங்களை குறை சொல்ல முடியாது” என்றார்.