66 குழந்தைகளின் உயிரை குடித்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு பல மாநிலங்களிலும், நாடுகளிலும் தடை உள்ள நிலையில், அதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு சான்றிதழ் வழங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பரிசோதனையில் குழந்தைகள் அனைவருக்குமே சிறுநீரக செயலிழப்பு இருந்தது தெரியவந்தது.
இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள்தான் அந்த மரணத்திற்கான காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளிலும் இந்திய மருந்துகள் மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக தரமற்ற மருந்துகளை தயாரித்துவந்த இந்த நிறுவனத்துக்கு, வெளிநாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான சான்றிதழ் எவ்வாறு வழங்கப்பட்டது என்று சர்வதேச சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
1990 இல் தொடங்கப்பட்ட மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் தனது ஏற்றுமதியை செய்து வந்துள்ளது.

ஆனால் அந்த நிறுவனத்தின் மீது புகார் எழுவது இது முதல்முறையல்ல. தரமற்ற தயாரிப்புகளுக்காக இந்தியாவில் 2011 ஆம் ஆண்டே மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் புகாரில் சிக்கியிருக்கிறது.
அந்தநிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை பொது சுகாதார ஆர்வலரான தினேஷ் எஸ் தாக்கூர் என்பவர் பட்டியலிட்டிருக்கிறார்.
தரம் குறைந்த மருந்துகளை சப்ளை செய்த இரண்டு மருந்து நிறுவனங்களை 2011ல் பீகார் அரசு தடுப்புப்பட்டியலில் சேர்த்தது. முதலாவது மேன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், மற்றொன்று மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் ஆகும். போலியான மற்றும் தரமற்ற சிரப் மற்றும் மாத்திரைகளை வழங்கியதால் நிறுவனம் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டது.
கேரளாவில் மருந்து ஆய்வாளர் அலுவலகம் தாக்கல் செய்த வழக்கில் 2017 ஆம் ஆண்டு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் கேரளாவில் அதன் தரமற்ற மருந்து தயாரிப்புக்காக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை விசாரணை நடத்தியிருக்கிறது.
மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் மீதான வழக்கு சமீபத்தில் பதியப்பட்டது ஜம்மு காஷ்மீரில் ஆகும். குழந்தைகளின் ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் சைப்ரோஹெப்டடைன் ஹைட்ரோகுளோரைடு சிரப் ஐபியை தரமற்று தயாரித்ததாக வழக்குப் பதியப்பட்டது.
இந்திய மாநிலங்களைத் தவிர, உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் அதன் பல தயாரிப்புகள் தடுப்புப் பட்டியலில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மற்றும் மருந்து விதிமுறைகளை மீறியதற்காக வியட்நாம் அரசு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

சில மாநிலங்கள் மற்றும் நாடுகளால் அதன் தரமற்ற தயாரிப்புகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும், தடுப்புப்பட்டியலில் இருந்தாலும் கூட, மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு மத்திய மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சான்றிதழ் வழங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்ட்டிபிகேட் ஆஃப் பார்மாசிட்டிகல் ப்ராடக்ட் எனப்படும் COPP சான்றிதழ் மருந்து நிறுவனங்களுக்கான மிக முக்கியமான சான்றிதழ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்ற பின்னரே DGCI சார்பில் COPP சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்தது எப்படி? அதற்கு பின்புலமாக இருந்தவர்கள் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, இந்திய அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கலை.ரா
Comments are closed.