அமெரிக்க அதிபர் தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் தற்போது வரை 267 எலக்டோரல் வாக்குகளை பெற்றுள்ளதால், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றி உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடந்த இந்த தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
சுஹாஸ் சுப்ரமணியம்
இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரை பகுதியில் இருந்து அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் கோட்டையான வர்ஜீனியாவில் போட்டியிட்ட சுஹாஸ் சுப்பிரமணியம் 2,07,131 வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்தார்.
சுஹாஸ் சுப்ரமணியம் தற்போது வர்ஜீனியா மாநில செனட்டராக உள்ளார். இவரது பெற்றோர்கள் பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்ரீ தானேதர்
இதில் ஸ்ரீ தானேதர் கர்நாடக மாநிலம் பெலகத்தை பூர்வீகமாக கொண்டவர். 1979ல் அமெரிக்கா சென்றார். தற்போது நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மிச்சிகன் மாகாணத்தில் போட்டியிட்ட அவர், 80, 462 வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்டெல் பிவிங்க்ஸை 39,385 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி
இவர் புது டெல்லியில் பிறந்தவர். தற்போது சிகாகோவில் வடமேற்கு பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய இல்லினாய்ஸின் தொகுதி மக்கள் பிரதிநிதியாக இருக்கிறார்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி 1,63,722 வாக்குகள் பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் மார்க் ரைஸை 1,27,136 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ரோ கண்ணா
ரோ கண்ணா இந்திய – பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பஞ்சாபில் இருந்து 1970ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்த தேர்தலில் கலிஃபோர்னியா -17 மாகாணத்தில் இருந்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரோ கண்ணா, குடியரசுக் கட்சி வேட்பாளர் அனிட்டா சென்னை தோற்கடித்தார்.
பிரமிலா ஜெயபால்
சென்னையில் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்த பிரமிலா ஜெயபால் 1982இல் அமெரிக்காவிற்கு குடியேறினார்.
நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு 2,44,150 வாக்குகளை பெற்று வாஷிங்டன் -7 மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் டான் அலெக்சாண்டர் வெறும் 42, 958 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்யுற்றார்.
அமி பெரா
அமி பெரா பெற்றோர்கள் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 1958ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்த தேர்தலில் கலிபோர்னியா 6ல் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அமி பெரா72,152 வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சி வேட்பாளர் கிறிஸ்டினே பிஸ்ஷை தோற்கடித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
”அமெரிக்காவின் பொற்காலம் வந்துவிட்டது” : டிரம்ப் வெற்றி உரை!
36,000 இளைஞர்களுக்கு வேலை… கோவைக்கு மற்றொரு புதிய ஐடி பார்க் : ஸ்டாலின் அறிவிப்பு!