மேகாலயாவில் பாஜக துணைத் தலைவர் நடத்தி வரும் ரிசார்ட் ஒன்றில் 2 சிறுமிகள் உட்பட 6 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த விடுதியில் இருந்த 73 பேர் நேற்று (ஜூலை 24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேகாலயா மாநிலத்தில் பாஜக கட்சியின் துணைத்தலைவராக இருப்பவர் பெர்னார்ட் என் மர்க். இவருக்கு துராவில் சொந்தமாக ரிம்பு பாகன் என்ற 30 அறைகள் கொண்ட பண்ணை வீடு உள்ளது. அங்கு சட்டவிரோதமான, சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று அதிரடியாக பெர்னார்டின் பண்ணை வீட்டுக்குள் நுழைந்த மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் சிங் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு சுகாதாரமற்ற அறைக்குள், இரண்டு பெண்குழந்தைகள் உட்பட 6 சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பத்திரமாக மீட்ட போலீசார், அங்கு அரைகுறை ஆடையோடு போதையில் இருந்த 68 இளைஞர்கள், இளம்பெண்களை கைது செய்தனர். மேலும் பண்ணையின் மேலாளர், பராமரிப்பாளர் மற்றும் ஊழியர்கள் 3 பேரையும் கைது செய்தனர். 27 வாகனங்கள், 8 இருசக்கர வாகனங்கள், சுமார் 400 மதுபாட்டில்கள், 500க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஆணுறைகள் மற்றும் வில் அம்பு போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.
சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து டிஎஸ்பி விவேகானந்த் சிங் கூறுகையில், ”பாஜக தலைவர் பெர்னார்ட் என் மரக் மற்றும் அவரது கூட்டாளிகள் விபச்சாரத்திற்காக நடத்தும் பண்ணை வீட்டில் இருந்து 2 சிறுமிகள் உட்பட 6 சிறார்களை மீட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் (டிசிபிஓ) ஒப்படைக்கப்பட்டனர். பண்ணையில் மீட்கப்பட்ட சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம். இங்கிருந்த 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் நடவடிக்கை
கடந்த பிப்ரவரி மாதம், ரிம்பு பாகனில் ஒரு சிறுமி கடத்தி வரப்பட்டு அடைக்கப்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் துரா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பண்ணையில் இருந்து மீட்டனர். அப்போது சிறுமியிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் ஒரே வாரத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது. அதன்படி அப்போது கைது செய்யப்பட்டவர்கள் மீது 366A (சிறுமி கடத்தல்), 376 (வன்கொடுமை) மற்றும் போக்சோ சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பெர்னார்ட் மறுப்பு அறிக்கை
தற்போது தலைமறைவாக இருக்கும் பண்ணையின் உரிமையாளரான பெர்னார்ட்டை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், ஷில்லாங் காவல் நிலையத்தில் உடனடியாக அவர் சரணடைய வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இதற்கிடையே தனது பண்ணையில் நடந்த சோதனையையும், கைது நடவடிக்கையையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வர் சங்மா, தனது தொகுதியான தெற்கு துராவை பாஜகவிடம் இழக்கப்போவதை அறிந்து விரக்தி அடைந்துள்ளார். எனவே, எனது பண்ணை வீட்டில் சோதனை நடத்தி அரசியல் பழிவாங்க முயற்சி செய்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது மேகாலயா மாநில பாஜகவின் துணைதலைவராக இருக்கும் பெர்னார்ட் என் மர்க், இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பான அச்சிக் தேசிய தன்னார்வ கவுன்சிலின் (பி) தலைவராக இருந்தவர். அவர் மீது ஏற்கெனவே 25 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா