பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கட்சியைச் சேர்ந்த மணிப்பூர் எம்.எல்.ஏக்கள் 5 பேர் பாஜகக்கு தாவியுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து ஆட்சி அமைத்தன.
நிதிஷ்குமார் முதல்வரானார். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே முதல்வர் நிதிஷூக்கும், பாஜகவுக்கும் மோதல் போக்கு நிலவியது.
இதனால் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதியுடன் பாஜகவுடன் கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ், தன் முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
பின்னர், ராஷ்டிரிய ஜனதா தள தேஜஸ்வி யாதவ்வை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிர ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
அதன்பின் மீண்டும் பீகாரின் முதல்வராக 8 ஆவது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.
பீகாரில் ஒரேநாளில் நடைபெற்ற இந்த அரசியல் மாற்றம், மத்தியில் ஆளும் பாஜகவுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
அதேநேரத்தில், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய நிதிஷூம், தேஜஸ்வியும் பாஜகவை கடுமையான வார்த்தைகளால் தாக்கிவந்தனர்.
இந்த நிலையில்தான், நிதிஷின் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் 5 பேரை, தன் கட்சிக்குள் இழுத்து அதிர்ச்சிவைத்தியம் அளித்திருக்கிறது பாஜக.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த 7 எம்எல்ஏக்களில் ஐந்து பேர் தற்போது பாஜகவுக்கு தாவியுள்ளனர். கே.ஜாய்கிஷன், என்.சனேட், எம்.டி.அச்சாப் உதின், முன்னாள் டிஜிபி எல்.எம்.காடே மற்றும் தங்கம் அருண்குமார் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவியுள்ளனர்.
இதில், டிஜிபி காடே மற்றும் அருண்குமார் ஆகியோர் முன்பு, பாஜக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முயன்றனர்,
ஆனால் கட்சியால் நிராகரிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து எம்.எல்.ஏவாகியிருந்தனர்.
“கட்சி மாறிய எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு அதிகமாக இருந்ததால், அவர்கள் கட்சி மாறியது செல்லுபடியாகும்” என மணிப்பூர் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்த சில வாரங்களிலேயே இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படும் நிலையில், நிதிஷ்குமார் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக குறிவைப்பது இது இரண்டாவது முறையாகும்.
2020ம் ஆண்டில், அருணாச்சல பிரதேசத்தில் 7 ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் பாஜகவில் இணைந்தனர், கடந்த வாரத்தில் மிச்சமிருந்த அந்த ஒரு எம்.எல்.ஏவும் பாஜகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
கண்ணியமாகத்தான் பேசவேண்டுமெனில் பாஜக தலைவர் பொறுப்பே வேண்டாம்: அண்ணாமலை