தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது 561 வழக்குகள்: விரைந்து விசாரிக்க உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள சிட்டிங் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள் ,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 2) உத்தரவிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் ஒரு அறிவுறுத்தலை வழங்கியிருந்தது. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணித்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன்வு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர், “முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது மொத்தம் தமிழ்நாட்டில் 561 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசுத் தரப்பில் 20 வழக்குகள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையில் உள்ளன. இதில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
‘ஹனுமான்’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!
Rain Update: இந்த இடங்களுக்கு இடியுடன் கூடிய மழை உண்டு!