அதிமுக 53ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 17) மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுகவிற்குள் ஏற்பட்ட அரசியல் திருப்பங்கள், அக்காலத்தில் திமுகவின் முகமாக அறியப்பட்ட எம்.ஜி.ஆருக்கு கசப்பை ஏற்படுத்தின.
இதனையடுத்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி மதுரையில் ’அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.
கட்சியை ஆரம்பித்த ஆறு மாதத்துக்குள் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். இது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து 1974-ஆம் ஆண்டு கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட அரங்கநாயகம், அ.தி.மு.க-வின் முதல் எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்கு சென்றார்.
இதனையடுத்து 1977ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற தேர்தலை எம்.ஜி.ஆர் தலைமையில் எதிர்கொண்டது அதிமுக. அதில் அதிமுக 30.4% வாக்குகளைப் பெற்று 130 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்தது. கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு அரசியல் கட்சி ஆட்சியை பிடித்த வராலாறு அதுதான் முதல்முறை.
அதன்பின்னர் பெரும் எழுச்சி கண்ட அதிமுக தமிழ்நாட்டில் இதுவரை 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு கட்சி பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா தலைமையில் அதிமுக 5 முறை சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.
அவரது மறைவுக்கு பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்று தற்போது எதிர்கட்சியாக உள்ளது.
இந்த நிலையில் கட்சி தொடங்கி 52 ஆண்டுகள் நிறைவுற்று 53ஆம் ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளாமானோர் காலை முதலே குவிந்தனர்.
தொடர்ந்து காலை 11 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு காரில் வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுக மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துகளை பெற்ற எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்த பழனிசாமி, அங்கிருந்த தொண்டர்கள் அனைவருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
போராட்டம் வாபஸ் : இன்று பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்!