தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க 5093 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று(நவம்பர் 2) ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர் 1500 பேர் தயார் நிலையில் இருக்கின்றனர். எந்த இடங்களில் பிரச்சனை இருந்தாலும் உடனே அதிகாரிகளை அனுப்பி வைப்போம்.
மாவட்ட ஆட்சியர்கள் அத்தனை பேரையும் உஷார்படுத்தியிருக்கிறோம். மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சரே நேரடியாக கவனித்து வருகிறார்.
கடந்த ஆட்சியில் மழையின் பாதிப்பை விட தற்போது எப்படி உள்ளது என அனைவருக்கும் தெரியும். சென்னையில் மட்டும் அல்ல மற்ற மாவட்டங்களிலும் மழையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழையில் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 5093 சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வடசென்னை தாழ்வான பகுதி, எனவே அங்கு தண்ணீர் தேங்குவது இயல்பு. ஆனால் அந்த நீரையும் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.
கலை.ரா