500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா: செந்தில் பாலாஜி

அரசியல்

இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஏப்ரல் 12) கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக்கோரிக்கையை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தாக்கல் செய்தார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு இந்த ஆண்டிற்குள் மூடப்படும்.

டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும்’ என்றார்.

அதனைத் தொடர்ந்து மின்சாரத் துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

அவர், “50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். அரசு – தனியார் பங்களிப்புடன், 5000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின் விநியோகம் சீராக கிடைத்திட, 72 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்பட உள்ளது.

பில்லூர், நிராலப்பள்ளம் – பாபநாசம் திருப்பு அணைகள் மற்றும் அவலாஞ்சி அணைகளில் ரூ. 78.25 கோடி மதிப்பில், உலக வங்கியின் நிதியுதவியுடன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ரூ. 1.50 கோடி மதிப்பில், 100 கி.வாட் திறன் கொண்ட சூரிய சக்தியினால் இயங்கும் இரண்டு வாகன மின்னூட்டல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

சென்னையை தொடர்ந்து கூடுதலாக, கோயம்புத்தூர், மதுரை மற்றும் கரூர் மாநகராட்சிகளில், மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.

அதே போல் திருநெல்வேலி, ஸ்ரீரங்கம், கரூர், அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கோயம்புத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைக்கப்பட உள்ளது.

மின்பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய Droneகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கடைசி நேர அதிர்ச்சி: தடையை நீக்க போராடும் ’ருத்ரன்’ படக்குழு!

பிஞ்சுக் குழந்தையை சிதைத்த முதிய பிசாசு – தமிழக பயங்கரம்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *