கிளைச் செயலாளராக திமுகவில் தனது பணியைத் தொடங்கி மாவட்டச் செயலாளராக பணியாற்றி கடைசி மூச்சு வரை கட்சிப் பணியை மேற்கொண்டு காலமாகியிருக்கிறார் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி.
ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் விக்கிரவாண்டியில் விழுப்புரம், கடலூர் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்காக தனது உடல் நலம் சரியில்லாத நிலையிலும் அரும்பாடு பட்டார் புகழேந்தி.
முதல்வர் வருவதற்கு முன்பு மேடையில் அங்குமிங்கும் பரபரப்பாக நடந்து ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார் புகழேந்தி. முதல்வர் பிரச்சாரக் கூட்டத்துக்கு வருவதற்கு சற்று முன்பாக பொதுக்கூட்ட மேடைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையில்… அமைச்சர் பொன்முடி, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், விழுப்புரம் தெற்கு மாசெவான புகழேந்தி எம்.எல்.ஏ, இலட்சுமணன் எம். எல். ஏ , மணிக்கண்ணன் எம்.எல்.ஏ, அமைப்புத் துணைச் செயலாளர் அன்பகம் கலை, அமைச்சர் பொன்முடியின் மனைவி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
திடீரென புகழேந்திக்கு மயக்கம் ஏற்பட இதைப் பார்த்ததும் பொன்முடியும், அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் புகழேந்தியின் உடல் நிலை குறித்து அவர்களுக்குத் தெரியும். உடனடியாக புகழேந்தியை காரில் ஏற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். முதல்வர் வரும் நேரம் என்பதால் பொன்முடியால் அப்போது புகழேந்தியுடன் செல்ல முடியவில்லை.
ஏற்கனவே கடந்த மார்ச் 25 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிக வேட்பாளரான ரவிக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தபோதும் பொன்முடியோடு, மாசெவும் எம்.எல்.ஏ.வுமான புகழேந்தி உள்ளிட்டோர் இருந்தனர்.
விழுப்புரத்தில் அம்பேத்கர், அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு கலைஞர் அறிவாலயத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றார் வேட்பாளர் ரவிக்குமார். அப்போது திடீரன மாசெவும் எம்.எல்.ஏ.வுமான புகழேந்திக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை காரில் ஏற்றி இ.எஸ். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இ.எஸ். மருத்துவமனையில் அனுமதித்த பிறகு சென்னை ரேலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் புகழேந்தி. ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில்தான் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், கடலூர் வேட்பாளர்களை ஆதரித்து விக்கிரவாண்டியில் பொதுக்கூட்டம் பேச இருந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மருத்துவமனையில் இருந்த புகழேந்தி, ‘தலைவர் நம்ம மாவட்டத்துக்கு வர்றாரு…’ என்று சொல்லி மருத்துவமனையில் இருந்தபடியே பிரச்சார கூட்டத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார்.
இதற்காக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து கிளம்பி விழுப்புரத்துக்கே சென்றார் புகழேந்தி. இவ்வளவு பின்னணி இருப்பதால்தான் நேற்று முதல்வர் வருவதற்கு சிறிது நேரம் முன்பு புகழேந்தி மயக்கம் அடைந்ததும் அதிர்ச்சி அடைந்தார் அமைச்சர் பொன்முடி.
நேற்று புகழேந்திக்கு மயக்கம் ஏற்பட்டதும் பொன்முடியின் மகனான டாக்டர் கௌதம சிகாமணி உடனடியாக அவரது ரத்த அழுத்தம், சுகர் உள்ளிட்டவற்றை சோதித்துவிட்டு… வேகமாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். செல்லும்போதே ரத்த வாந்தியெடுத்திருக்கிறார் புகழேந்தி. மருத்துவமனையில் புகழேந்தி வாய் வழியாகவும், ஆசன வாய் வழியாகவும் ரத்தப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. அவருக்கு தேவையான ரத்தம் அளித்து, உடனடியாக மருத்துவர் குழு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில்தான் இன்று (ஏப்ரல் 6) காலை 6 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் காலமானார் புகழேந்தி. கடந்த இரு ஆண்டுகளாக புகழேந்தி கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டே மாசெ என்ற முறையில் கட்சிப் பணிகளையும், எம்.எல்.ஏ. என்ற முறையில் மக்கள் பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.
ஒரு கிளைச் செயலாளராக 1973 இல் திமுகவில் தனது பணியைத் தொடங்கிய புகழேந்தி முழுமையாக 50 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றி மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நிலையில் காலமாகிவிட்டார்.
1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் தாலுகா அத்தியூர் திருவாதியில் நாராயணசாமி-தனம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் புகழேந்தி. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். புகழேந்தியின் அப்பா நாராயணசாமி கவுண்டர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டவர். அதனால் இயல்பாகவே அரசியல் ஈடுபாடு கொண்ட புகழேந்தி, அப்போது திமுகவில் அண்ணா, கலைஞரால் ஈர்க்கப்பட்டவர்.
தனது சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் ஊராட்சித் தலைவராக ஆனார். ஊராட்சி மன்றத் தலைவரான ஆன பின் திமுகவின் கிளைக் கழக செயலாளரானார்.
1980–1986 இல் மாவட்ட பிரதிநிதி, 1986 பொதுக்குழு உறுப்பினர், 1990 இல் அவரது சொந்த ஒன்றியமான கோலியனூர் ஒன்றிய பொறுப்பாளர் ,1992–1997 கோலியனூர் ஒன்றிய செயலாளர், 1996 இல் கோலியனுார் ஒன்றிய பெருந்தலைவர் ,1997: தலைமை செயற்குழு உறுப்பினர் என விழுப்புரம் திமுகவில் புகழேந்தியின் கிராஃப் ஏறிக்கொண்டே சென்றது.
இதற்கிடையே விழுப்புரத்தில் மாவட்டச் செயலாளர் பொன்முடியின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்டார் புகழேந்தி.
2009 இல் ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட பொருளாளர், 2015 இல் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் ஆக இருந்த புகழேந்தியை 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத் தேர்தல் களத்தில் வேட்பாளர் ஆக்கினார் பொன்முடி. ஆனால் அந்த இடைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார் புகழேந்தி. 2020ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் புகழேந்தி.
2020 இல் திமுக துணைப் பொதுச் செயலாளராக பொன்முடி நியமிக்கப்பட்ட நிலையில் தனது தீவிர ஆதரவாளரான புகழேந்தியை விழுப்புரம் தெற்கு மாசெ ஆக்கினார் பொன்முடி. 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் நின்று தனது ஐம்பதாண்டு அரசியல் வாழ்வில் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார் புகழேந்தி.
“கடந்த தேர்தலில் என்னை வெற்றி பெற வைத்தவர், இந்தத் தேர்தலில் எனக்காக உழைத்தவர் என்று புகழேந்திக்கு புகழாரம் செலுத்தியுள்ள விசிக வேட்பாளர் ரவிக்குமார், இன்று (ஏப்ரல் 6) ஒரு நாள் தனது பரப்புரையை ரத்து செய்து அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த புகழேந்தி, தன் உடல் நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காக தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர மருத்துவமனைக்கு சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவர்து உடல் நலனை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
நலன் பெற்று மீண்டும் வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்தசெய்தி துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது., எப்போது என்னை சந்திக்க வந்தாலும் மக்களுக்கான கோரிக்கைகளோடுதான் வருவார்” என்று புகழேந்தியை போற்றியிருக்கிறார் முதலமைச்சர்.
கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை முழுமையாக ஐம்பதாண்டுகள் பயணித்த புகழேந்தி தனது கடைசி மூச்சு வரை திமுக கட்சிப் பணியிலேயே இருந்திருக்கிறார் புகழேந்தி. பெயருக்கு ஏற்றாற்போல் புகழை ஏந்திச் சென்றிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
வேந்தன்
விஜய் தேவரகொண்டாவின் ‘தி பேமிலி ஸ்டார்’ எப்படி இருக்கிறது?- திரை விமர்சனம்!
மாநிலங்களை பாளையக்காரர்களாக மாற்றும் பாஜக: ப.சிதம்பரம் தாக்கு!