தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,200 கோடிக்கு மேல் பெற்ற 5 மாநில கட்சிகள்!

அரசியல் இந்தியா

2022-23 ஆம் ஆண்டில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட ஐந்து மாநிலக் கட்சிகள் இணைந்து  தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,200 கோடிக்கு மேல் பெற்றுள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி பெறும் விவகாரம் சமீபகாலமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20,000க்கும் அதிகமாக ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வகை செய்தது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.

சட்டத்தில் திருத்தம்… கொட்டும் பணம்!

ஆனால் 2018ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தது மத்திய பாஜக அரசு. அதன்படி ’தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையம் உட்பட யாரிடமும் தெரிவிக்க தேவை இல்லை’ என மாற்றியமைத்தது.

இந்த திருத்தத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்துள்ளன. குறிப்பாக மற்ற எல்லா கட்சிகளையும் விட மத்தியில் ஆளும் பாஜக பெருமளவு நிதி பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தேர்தல் பத்திர இரகசியத்தால் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ’தேர்தல் பத்திர விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்’ என்பதை உறுதி செய்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து பறந்த கடிதம்!

அதன்படி கடந்த நவம்பர் 2ம் தேதி, ”தேர்தல் பத்திர திட்டம் தொடங்கப்பட்டது முதல் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை,  தேர்தல் பத்திரம் மூலம் இதுவரை அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை எவ்வளவு, அதனை வழங்கியவர்கள் யார்? உள்ளிட்ட விவரங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

அதனைத்தொடர்ந்து கடந்த  நவம்பர் 3ம் தேதி தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுதியது.

வெளிவந்த நிதி நிலவரம்!

இந்த நிலையில், 2022-23 நிதியாண்டில், ஐந்து முக்கிய பிராந்தியக் கட்சிகளான பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), திரிணாமுல் காங்கிரஸ் கட்சி(டி.எம்.சி), திராவிட முன்னேற்ற கழகம் (திமுக), பிஜு ஜனதா தளம் (பிஜேடி), மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த சமீபத்திய வருடாந்திர தணிக்கை அறிக்கையின்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,243 கோடி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது முந்தைய நிதியாண்டில் மொத்தமாகப் பெறப்பட்ட ரூ.1,338 கோடியிலிருந்து சிறிது சரிவை சந்தித்துள்ளது.

பிராந்திய கட்சிகள் பெற்ற மொத்த வருமானம்!

எனினும் இவற்றில் தெலுங்கானாவில் ஆட்சியை இழந்த பிஆர்எஸ் கட்சி அதிகபட்ச மொத்த வருமானம் பெற்ற கட்சியாக உள்ளது.

அதாவது 2021-22 நிதியாண்டில் ரூ.218.1 கோடி பெற்றிருந்த நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் 3.4 மடங்கு அதிகமாக ரூ.737.7 கோடி பெற்றுள்ளது.

அதேநேரத்தில் மற்ற நான்கு கட்சிகளும் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவான வருமானம் பெற்றுள்ளன.

2021-22 நிதியாண்டில் ரூ.545.7 கோடி பெற்றிருந்த திரிணாமூல் காங்கிரஸ் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.333.4 கோடி பெற்றுள்ளது. அதேபோல் ரூ.318.7 கோடி பெற்றிருந்த திமுக ரூ.214.3 கோடியும், ரூ.307 கோடி பெற்றிருந்த பிஜேடி ரூ.181 கோடியும், ரூ.93.7 கோடி பெற்றிருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.74.8 கோடி பெற்றுள்ளன.

தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற வருமானம்!

2022-23 நிதியாண்டில் மொத்தம் பெற்றுள்ள வருமானத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் திரிணாமுல் 97 சதவீதம் அதாவது ரூ.325.1 கோடி பெற்றுள்ளது.

அந்த வரிசையில்  திமுக ரூ.185 கோடி (86%), பிஜேடி ரூ.152கோடி (84%), பிஆர்எஸ் ரூ.529 கோடி (71%) மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.52 கோடி (70%)  என இந்தப் பிராந்தியக் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளன.

எனினும் கடந்த 2021-22 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பி.ஆர்.எஸ் கட்சியை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் குறைவாகவே நன்கொடை பெற்றுள்ளன.

செலவு செய்ததில் திரிணாமூல் முதலிடம்!

பிஆர்எஸ் கட்சி அதிகமாக வருமானம் பெற்றுள்ள போதிலும், 2022-23 ஆம் ஆண்டில் செலவு செய்ததில் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.181.1 கோடியுடன் முன்னணியில் உள்ளது.

அதைத் தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.79.3 கோடி, பிஆர்எஸ் ரூ.57.5 கோடி, திமுக ரூ.52.6 கோடி, மற்றும் பிஜேடி ரூ.27.8 கோடி என செலவு செய்துள்ளன.

தேசிய கட்சிகளின் நிதி நிலவரம்!

தேசிய கட்சிகளை பொறுத்தவரை தற்போதுவரை வெளியாகியுள்ள தரவுகளின் படி ஆம் ஆத்மி மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளின் நிதி நிலவரம் மட்டுமே வெளியாகியுள்ளன.

வருமானம் விட செலவு செய்த ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை, 2021-22ல் ரூ.44.5 கோடியில் இருந்த மொத்த வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.85.2 கோடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல் 2021-22ல் தேர்தல் பத்திரம் மூலம் மட்டும் ரூ.25.1 கோடி நிதி பெற்றிருந்த நிலையில் 2022-23ல் ரூ.36.4 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் ஆண்டு செலவுகள் ரூ.30.3 கோடியில் இருந்து ரூ.102 கோடியாக உயர்ந்துள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெறாத சிபிஐ(எம்)!

சிபிஐ(எம்) கட்சியை பொறுத்தவரை, 2021-22ல் ரூ.162.2கோடியில் இருந்த மொத்த வருமானம் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.141.7 கோடியாக குறைந்துள்ளது.

அதேவேளையில் 2021-22ல் ரூ.83.4 கோடியாக இருந்த செலவு, 2022-23ல் ரூ.106 கோடியாக அதிகரித்துள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுவதை தேர்தல் முறைகேடாகவும், ஜனநாயக சீரழிவாகவும் சிபிஐ(எம்) கட்சி கருதுகிறது. எனவே முந்தைய ஆண்டை போலவே 2022-23ஆம் நிதியாண்டிலும் அதன்மூலம் நன்கொடை பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து இன்னும் சில தினங்களில் நாட்டின் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிதி நிலவரம் மக்களுக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சட்டமீறலில் விக்னேஷ் சிவன்… நீதிமன்றம் செல்லும் தயாரிப்பாளர்!

எங்களுக்கு ஒரு படிப்பினை: மு.க.ஸ்டாலின்

பிக்பாஸ்: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *