மோடியின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், எதிர்கட்சிகள் ஆள்கிற மாநிலங்களுக்கு எல்லாம் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகவும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட 5 முக்கியமான துறைகளுக்கு அதிக நிதியை இந்த ஆண்டு ஒதுக்கியிருப்பதாக மோடி அரசு சொல்கிறது. இது உண்மையா என்பதை கடந்த சில ஆண்டுகளின் பட்ஜெட் தகவல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.
- கல்வி
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை நாட்டு மக்களின் கல்வி. கல்விக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகப்படுத்த வேண்டும், கல்வியை வணிகமயமாக்க அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை நீண்ட காலமாக நாட்டில் எழுப்பப்பட்டு வருகிறது. பாஜக அரசைப் பொறுத்தவரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் கடந்த ஆண்டு பட்ஜெட்டைக் காட்டிலும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியுள்ளோம் என்று சொல்கிறார்கள்.
- கடந்த 2023-24 நிதி ஆண்டில் ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி – 1,12,899.47 கோடி
- இந்த 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி – 1,20,627.87 கோடி
7,728 கோடி ரூபாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேலோட்டமாகப் பார்க்கும்போது கடந்த ஆண்டை விட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதைப் போலத் தெரியும். ஆனால் உண்மை அதுவாக இல்லை.
ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் செலவினங்களின் மொத்த மதிப்பும் கூடிக் கொண்டே செல்கிறது. எனவே இதில் சரியான முடிவுக்கு வர வேண்டுமென்றால், ஒட்டுமொத்த பட்ஜெட் மதிப்பில் கல்விக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதற்காக கடந்த 3 நிதி ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் மொத்த பட்ஜெட்டில் கல்விக்கு எத்தனை சதவீதம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
- 2022-23 நிதி ஆண்டில் மொத்த பட்ஜெட்டில் கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை – 2.64%
- 2023-24 நிதி ஆண்டில் கல்விக்கான தொகை பட்ஜெட்டில் 2.5% சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பின்னர் இறுதியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் (Revised Estimate) பார்த்தால் 2.8% சதவீதமாக உயர்த்தப்பட்டது.
- 2024-25 நிதி ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு மீண்டும் பட்ஜெட்டில் 2.5% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் மொத்த மதிப்பில், கல்விக்கு ஒதுக்கப்படும் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு கல்விக்கு ஒதுக்கப்பட்ட சதவீதம் என்பது 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அளவினைக் காட்டிலும் குறைவானதாகும்.
- சுகாதாரம்
ஒரு நாட்டில் மக்களின் நல்வாழ்வுக்கு அடிப்படைத் தேவை மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவது. மருத்துவமனைகளுக்கு மக்கள் தங்கள் பாக்கெட்டிலிருந்து செலவு செய்வதைக் குறைப்பது மிகவும் முக்கியமானது. அப்படியென்றால் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும். நிதியை பட்ஜெட்டில் அதிகரித்திருப்பதாகவே நிர்மலா சீதாராமன் சொல்கிறார். ஆனால் உண்மையிலேயே அதிகரிக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
- கடந்த 2023-24 நிதி ஆண்டில் மருத்துவம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 89,155 கோடி ரூபாய்.
- தற்போது 2024-25 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதி 90658.63 கோடி.
1503 கோடி ரூபாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது அதிகப்படுத்தப்பட்டது போல் தெரிந்தாலும், நாம் கல்விக்கான நிதிக்கு மேற்கொண்ட ஒப்பீட்டைப் போல சுகாதாரத்திற்கும் செய்து பார்க்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் எத்தனை சதவீதம் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
- 2022-23 நிதி ஆண்டில் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 2.18%.
- அடுத்த நிதி ஆண்டான 2023-24 இல் மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 1.98% சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இறுதியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (Revised Estimate) இது இன்னும் குறைந்து 1.79% சதவீதமானது. அதாவது ஒதுக்கப்பட்ட தொகையிலேயே 8637 கோடி ரூபாய் தொகை பயன்படுத்தப்படவில்லை.
- 2024-25 இல் அறிவிக்கப்பட்டுள்ள தொகை பட்ஜெட்டில் 1.9% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து பார்க்கும்போது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடும் 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதை விடக் குறைக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க முடிகிறது.
- விவசாயம்
மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற வாக்குறுதியை தொடர்ந்து சொல்லி வருகிறார். எனவே பாஜக ஆட்சியின் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் நிதி என்னவாக இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
- கடந்த 2023-24 நிதி ஆண்டில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை – 1,25,035.79 கோடி
- தற்போது 2024-25 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை – 1,27,469.88 கோடி
கடந்த ஆண்டைக் காட்டிலும் 2,434 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கியிருப்பதாக பாஜக அரசாங்கத்தால் சொல்லப்படுகிறது. உண்மையிலேயே உயர்த்தப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ள கடந்த 3 ஆண்டுகளின் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையின் சதவீதத்தினை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
- 2022-23 நிதி ஆண்டில் மொத்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை – 3.36%.
- அடுத்து 2023-24 நிதி ஆண்டில் 2.78% சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பின்னர் இறுதியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி 2.81% சதவீதமாக இருந்தது.
- இந்த பட்ஜெட்டில் 2.67% சதவீதமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து பார்க்கும்போது விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடும் கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளதை கவனிக்க முடிகிறது.
- ரேசன் கடைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு
உலக பசிக் குறியீட்டில் இந்தியா தொடர்ந்து பின்னடைவை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இரவு பசியோடு உறங்கச் செல்லும் மக்கள் பெரிய எண்ணிக்கையில் இந்தியாவில் இருக்கிறார்கள். 3 வேளை உணவு என்பதைப் பார்க்காத மக்கள் பல கோடி பேர் இங்கு இருக்கிறார்கள். ஏழை மக்களின் பசியைப் போக்குவதற்கும், அவர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானதாக இருப்பது ரேசன் கடைகளும், அவற்றில் வழங்கப்படும் உணவு மானியங்களும் தான். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படக் கூடாத ஒரு முக்கியமான துறை என்றால் இதனைத் தான் நாம் முதன்மையாக சொல்ல முடியும்.
5 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவதைத் தான் பாஜக அரசு தனது சாதனையாக சொல்லிக் கொள்கிறது. அப்படி என்றால் உணவு மானியங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறதா என்பதைப் பார்ப்போம்.
- 2023-24 நிதி ஆண்டில் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி – 2,05,764.60 கோடி.
- இந்த ஆண்டு 2024-25 இல் ஒதுக்கப்பட்டுள்ள நிதி – 2,13,323.37 கோடி.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 7,559 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில் கடந்த 3 ஆண்டுகளில் பட்ஜெட்டில் உணவு விநியோகத்திற்கான தொகை எத்தனை சதவீதத்திலிருந்து என்னவாக மாறியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
- 2022-23 நிதி ஆண்டில் மொத்த பட்ஜெட்டில் உணவு விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 5.5% ஆகும்.
- 2023-24 நிதி ஆண்டில் இது 4.5% சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
- இந்த ஆண்டு மேலும் 4.4% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்களின் பசியைப் போக்குவதற்காக ரேசன் கடைகளில் உணவு விநியோகப்பதற்கும், உணவு மானியங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதை இந்த தரவுகளிலிருந்து நாம் பார்க்க முடிகிறது.
- உர மானியம்
பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கியக் காரணமாக அமைவது உரங்களுக்காக அவர்கள் செலவு செய்யும் தொகையும், உரம் வாங்க இயலாததால் விளைச்சல் இல்லாமல் போவதும் தான். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று தொடர்ந்து சொல்லி வரும் மோடி அரசு, உர மானியங்களில் கடந்த 3 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை செய்திருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
- 2023-24 நிதி ஆண்டில் Department of Fertilizers-க்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி – 1,75,148.48 கோடி ரூபாய்
- இப்போது 2024-25 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டிருக்கிற நிதி – 1,64,150.81 கோடி ரூபாய்
கடந்த ஆண்டைக் காட்டிலும் உரங்கள் தொடர்பாக ஒதுக்கப்படும் தொகை 10,998 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் உரங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை பட்ஜெட்டில் எப்படி மாறியிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
- 2022-23 நிதி ஆண்டில் மொத்த பட்ஜெட்டில் உரங்கள் தொடர்பாக ஒதுக்கப்பட்ட தொகையின் சதவீதம் 2.66%. இறுதியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி இது 5.7% சதவீதமாக ஆனது.
- அடுத்து 2023-24 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்ட சதவீதம் 3.8%.
- 2024-25 நிதி ஆண்டில் இந்த தொகை 3.4% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இப்படி கடந்த 3 ஆண்டுகளாக உரங்களுக்கு ஒதுக்கப்படும் தொகையும் குறைக்கப்பட்டுக் கொண்டே வந்துள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை வைத்து பார்க்கும்போது, நாட்டு மக்களின் சமூக நல வாழ்வுக்கு அவசியமான முக்கிய விவகாரங்களின் நிதியை பாஜக அரசு குறைத்துக் கொண்டே வருவதை கவனிக்க முடிகிறது. எனவே இந்த விவகாரங்களில் நிதியை அதிகப்படுத்தியிருக்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் சொல்வது தவறான தகவல். இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் மத்திய அரசு பாதி உண்மையை மறைக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தனிமைப்பட்டுப் போவீர்கள் : மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
‘தமிழ்நாடு’ பெயர் இடம்பெற 25 எம்.பி.க்களை கொடுத்தீங்களா?: அன்புமணி கேள்வி!
பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு… நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!