5ஜி அலைக்கற்றை ஏலம் : முந்தும் நிறுவனம் எது?

அரசியல்

டெல்லியில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நேற்று தொடங்கிய நிலையில், 5வது சுற்று ஏலம் இன்று (ஜூலை 27) தொடங்குகிறது.

இந்தியாவில் தற்போது 4ஜி அலைக்கற்றை உள்ள நிலையில் 5ஜி குறித்தான பெரும் எதிர்ப்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. ஐந்தாம் தலைமுறை என்று அறியப்படும் 5ஜி அலைக்கற்றை 4ஜியை விட 10 மடங்கு வேகத்தை தரக்கூடியது. ஒரு முழு நீள திரைப்படத்தை மொபைலில் சில நொடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும். ஒரே நேரத்தில் பில்லியன் கணக்கான தரவுகளை பலருக்கும் அனுப்ப முடியும். ஹை குவாலிட்டி வீடியோ மற்றும் வீடியோ கேமிங் போன்றவற்றை எந்தவிதமான இடையூறுமின்றி கண்டுகளிக்கவும், அனுபவிக்கவும் முடியும். மேலும் மருத்துவ பயன்பாடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அதிகவேக செயல்திறனை அளிக்க கூடியதாக இருக்கும்.

முன்பணம் கட்டி முந்திய ரிலையன்ஸ்!

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் 600 மெகா ஹெர்ட்ஸ் முதல் 26 ஜிகா ஹெர்ட்ஸ் வரை என பல்வேறு ரக அலைவரிசைகளில் ஏலம் நடத்தப்பட உள்ளது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து ஏலத்தில் அம்பானியின் ஜியோ, மிட்டலின் ஏர்டெல், அதானியின் டேட்டா, ஐடியா-வோடோபோன் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்பதாக அறிவித்தன. ஏலத்திற்காக இந்த 4 நிறுவனங்களும் ரூ.21 ஆயிரத்து 800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன. இதில் ரிலையன்ஸ் ரூ.16,000 கோடியும், ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ரூ.2,200 கோடியும், அதானி டேட்டா நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தியுள்ளன.

முதல் நாள் ஏலம்!

இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் தொடங்கியது. முதல் நாளில் 4 சுற்றுகள் ஏலம் விடப்பட்டது. அதில் முகேஷ் அம்பானி, சுனில் பார்தி மிட்டல் மற்றும் கௌதம் அதானி ஆகியோரிடமிருந்து ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

ஏலத்தில் ஆரோக்கியமான போட்டி!

முதல் நாள் ஏலம் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. ஏலத்தில் இந்தியாவின் 4 வலுவான நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாளில் நடந்த 4 சுற்றுகள் முடிவில் ரூ1.45 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அலைக்கற்றை ஏலத்தில் 2015ம் ஆண்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 5ஜி அலைக்கற்றைக்காக, குறைந்த (600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ்), 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ்) அலைவரிசைகள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இதில் 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை பெற ஏலத்தில் கடும் போட்டி நிலவுகிறது. வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்தியாவில் செப்டம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கும் என்று கூறினார்.

இன்று 5வது சுற்று ஏலம்!

நேற்று 4 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தின் 5வது சுற்று இன்று காலை தொடங்க உள்ளது. வரும் காலத்தில் 5ஜி சேவை இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. இந்நிலையில், 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்து மகுடம் சூடப் போகும் நிறுவனம் எது என்பதற்கு இன்னும் ஒருசில நாட்கள் ஆகும். அதே சமயத்தில் 5ஜி சேவை செப்டம்பரில் இந்தியாவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

+1
1
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *