டிஜிட்டல் திண்ணை: 40%…  ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சட்டமன்ற நிகழ்வுகளின் வீடியோக்கள் சில வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான தீர்மானம் என்று அதிரடியான நிகழ்வுகள் நடந்து வந்தாலும் அமைதியாக சில விசாரிப்புகளை செய்துகொண்டிருக்கிறார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். சட்டமன்றத்தில் தன்னை சந்திக்கும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம், ‘என்ன… உறுப்பினர் சேர்க்கை எப்படி போயிட்டிருக்கு?’ என்று விசாரிக்கிறார், விரைவுபடுத்தச் சொல்கிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில் திமுக உறுப்பினர் சேர்க்கை பணிகள் வேகம் பெற்றுள்ளன. உறுப்பினர் சேர்க்கைக்குப் பின்னால் ஸ்டாலினுக்கு பெரும் மாஸ்டர் பிளான் இருக்கிறது என்று சொல்கிறார்கள் திமுக நிர்வாகிகள். அதாவது மார்ச் 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அதற்கான  தகுதிகள் விரைவில் நிர்ணயிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்தார். 

இதையடுத்து மார்ச் 22 ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மூன்று முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுதல், மக்களவைத் தேர்தலுக்காக பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல்,  கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல் ஆகியவை தான் அந்த தீர்மானங்கள்.

40% Stalin's master plan

இந்த கூட்டத்திலே கலைஞர் நூற்றாண்டு தொடக்கத்தை ஒட்டி ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களுக்குள் ஒரு தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் இதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 17 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்,  ’உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் உறுப்பினர் சேர்க்கையை கண்காணிப்பதற்காக பொறுப்பாளரை நியமிப்போம்.  உறுப்பினர் சேர்க்கையில் நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்பதை நானே  கண்காணிப்பேன். சிறப்பாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் மேல நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியிருந்தார்.

அதன்படியே 234 தொகுதிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கையை கண்காணிப்பதற்காக கண்காணிப்பாளர்களையும் நியமித்தார். இது மட்டுமல்லாமல் ஏப்ரல் 3ஆம்  தேதி  ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை திமுக அடைய வேண்டும்,  அந்த அடிப்படையில் புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு அனைத்து பகுதிகளிலும் விரைவாகவும் முழுமையாகவும் நடைபெற வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

வரும் மக்களவைத் தேர்தல், அதன் பிறகான சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு பொது தேர்தல்களை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இந்த உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள் அறிவாலயத்தில். ஏற்கனவே திமுகவில் ஒரு கோடி உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதை இரு மடங்காக்கும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ வேண்டும் என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்து இருந்தார்.

உண்மையில் இப்போது திமுகவின் உறுப்பினர் பலம் எவ்வளவு என்று விசாரித்ததில்  தமிழ்நாட்டில் திமுகவின் தற்போதைய உறுப்பினர் பலம் 85 லட்சமாக இருக்கிறது. இந்த உறுப்பினர் எண்ணிக்கையை இரண்டு கோடி என்று அளவில் உயர்த்த வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு தொகுதிக்கு 50,000 என்று 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதற்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

40% Stalin's master plan

அதன்படி பார்த்தால் 234 x 50000 ஒரு கோடியே 17 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் கட்டளை.  ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் இந்த எண்ணிக்கையில் வர மாட்டார்கள்.  இந்த டார்கெட்டோடு  ஒவ்வொரு மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டங்களை  நடத்தி வருகிறார்கள். 

இந்தக் கூட்டங்களில் முக்கியமான ஆலோசனைகள் நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்றன.  ‘உங்கள் ஒன்றியத்தில் உங்கள் நகரத்தில் உங்கள் பேரூராட்சியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் 20% பேரை நீங்கள் உறுப்பினர்கள் ஆக்க வேண்டும்’ என்று கட்டளை போடுகிறார்கள். அதாவது ஒரு நகரத்தில் 40 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தால் அதில் 8000 வாக்காளர்கள் திமுக உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

17 வயது முதலே உறுப்பினர்களை சேர்க்க தொடங்குங்கள். அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் ஆதார் அட்டையின்படி அவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்யுங்கள். 18 வயது ஆன பிறகு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததும் வாக்காளர் எண்ணை உறுப்பினர் அட்டையில் மறக்காமல் சேர்த்துவிடுங்கள். 

பெரும்பாலும் பெண்களை டார்கெட் செய்யுங்கள்.  மகளிர் சுய உதவி குழு கடன் தொகையை திமுக அரசு  அதிகமாக்கி இருக்கிறது, உங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரப்போகிறது என்ற திட்டங்களை சொல்லி பெண்களை உறுப்பினர் ஆக்குங்கள்’  என்பதுதான் செயல்வீரர் கூட்டங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கான டார்கெட் கட்டளைகள்.

இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு வரை திமுகவில் மொத்தம் 85 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களோடு இப்போது ஒரு தொகுதிக்கு ஐம்பதாயிரம் என்று ஒரு கோடியே 17 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படும் பட்சத்தில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாக உயரும்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களில் 35% முதல் 40 % வரை திமுக உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் திமுகவின் தேர்தல் வெற்றிகள் மேலும் எளிதாகும். உறுப்பினர்களின் வாக்குகள் மற்றும் அரசின் செயல்பாடுகளால் கவரப்பட்ட கட்சி சாராத பொதுமக்களின் வாக்குகள் எல்லாம் சேர்ந்தால் 50% வாக்குகளை  தொட்டுவிடலாம்  என்பது தான் ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்.

ஆனால் உறுப்பினர் சேர்க்கை களத்தில் தீவிரமாக இருக்கும் சில நிர்வாகிகளிடம் நாம் பேசிய போது… ‘ஏதோ வங்கி கடன் போல டார்கெட் வைத்து நாங்கள் ஓடிக் கொண்டிருக்கிறோம்.  மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பது  உட்பட பல்வேறு காரணங்களைச் சொல்லி உறுப்பினர்கள் ஆக்குகிறோம். ஒரு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அந்த கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. தேர்தல்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கலாஷேத்ரா ஹரிபத்மனின் ஜாமின் மனு தள்ளுபடி!

பாஜகவிற்கு பயப்பட மாட்டேன்: ராகுல் ஆவேசம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *